அந்த விண்வெளியில் ஆயிரக்கணக்கான மேகக்கூட்டங்கள், ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டும், ஒன்றோடு ஒன்று விளையாடிக்கொண்டும்.
எல்லா மேகங்களும் ஒன்றை போலவே இருந்தாலும், துரத்தும் மேகங்கள் தத்தம் துணை மேகங்களை அடையாளம் கண்டு கொண்டு வாஞ்ஜையோடு விளையாட்டை தொடர்ந்து கொண்டிருந்தன.
தூரத்தில் இரண்டு கருப்பு மேகங்கள் விளையாட்டில் வெகு சுவாரசியமாய் இருந்தன. ஒன்றை ஒன்று பிடித்தாடும் அவ்விளையாட்டு, சிறிது நேரத்தில் சூடு பிடிக்கத்துவங்கியது. இவ்விரு மேகங்கள் ஒன்றின் மீது ஒன்று படும் போது மின்னலாய் சிரிப்பின் வெளிப்பாடு. கருத்தொருமித்து மற்ற மேகங்களும் இந்த களியாட்டத்தில் கலந்து கொண்டன. சிறிது நேரத்தில் வானில் சித்திரை திருவிழா; ஒட்டுமொத்தமாய் எல்லா மேகங்களும் தத்தம் துணை மேகங்களோடு தகதிமிதா தனியாட்டம்.
ஓடிக்களித்த நம் இரு நாயக மேகங்கள் களிப்பின் இறுதியாய் களைத்துப்போயின. களைப்பின் வெளிப்பாடாய் வியர்வை துளிகள்; வானின்று மழையாய் இந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடு.
கோடிக்கணக்கில் நீர்த்துளிகள் ஒன்றை ஒன்று அணைத்துக்கொண்டும், துரத்திக்கொண்டும் பிரவாகமாய் ஒடி ஒரு கடல் கலக்கிறது. இரு கரம் நீட்டி அழைக்கும் கருங்கடல், பெரு வாஞ்ஜையுடன் துளிகளை திரட்டி தனதாக்கிகொள்கிறது.
துளிகளுக்குள் ஒரு போராட்டம், நீயா நானா என்று! ஒரு துளி மட்டும் துணிச்சலாய் துளிகளுக்கிடையில் சிறிது வெளியை தனதாக்கிகொண்டது! கணிக்க முடியா ஒரு சிறிய பொழுதில், இத்துளிக்குள் ஒரு மாற்றம் - துளிக்குள் காற்று ஒரு துளியாய்! ஓன்றாய் இருந்த நீர் துளிக்கு காற்றுத்துளி துணையாய்.
தன்னை தத்தெடுத்த நீர்துளியை காற்று தனதாக்கிகொள்கிறது. தத்தெடுத்த செயலுக்கு நன்றியாய் அந்த நீர் துளிக்குள் தன்னையே பெருக்கி துளியை ஒரு நீர்க்குமிழியாய் பரிமாண மாற்றம் செய்விக்கிறது.
நீர்குமிழிக்கு கொண்டாட்டம்; ஆனந்தத்தில் ஆட்டம்; அங்கும் இங்குமாய் ஓட்டம்; ஓட்டத்தின் விளைவாய் நீர்குமிழிக்குள் பல வண்ணங்கள்! வண்ணங்களின் குழைவாய் ஒரு கருப்பொருள் பரிமளிக்கிறது. நீரும், காற்றும், கருப்பொருளும் ஒன்றோடு ஒன்றாய் கலந்த ஒரு நிலை.
மாறி வளர்ந்த பொருளின் மீது காற்றுக்கு பெரு நாட்டம். காற்று, நீர் விடுத்து, பொருளினுள் தஞ்சம் புக, நீர்த்துளிக்கு பெருத்த ஏமாற்றம்.
தனித்துளி ஒன்றால் ஒரு புதுப்பொருள் பரிமாணிக்க மற்ற துளிகளுக்கு பொறாமை. துளிகளெல்லாம் ஒன்று கூடி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது - நீர்குமிழியை நாடு கடத்த! எல்லா நீத்துளிகளும் ஒன்று கூடி இந் நீர்க்குமிழியை கருக்கடலிலிருந்து நாடு கடத்தின.
தன் துணைத்துளிகளே தன்னை அவமதித்த சோகத்தில் நீர், தான் உறையும் குமிழியை உடைத்து தற்கொலை செய்ய எத்தனித்தது. தன் மூலங்களில் ஒன்றான நீர், தன்னால் பிரிய உடன்படாத காரணத்தால், பொருள், முடிந்தமட்டும் நீரை தன்னுள் உரிஞ்சிக்கொண்டது.
நீரும், காற்றும் பொருளும் அந்த குமிழிக்குள் பல நாள் பல வண்ணங்களை பரிமளித்தன. பல வண்ணங்களும் நினைவுகளுமாய் பல நாட்கள் சென்றன.
ஒரு நாள் குமிழிக்குள் இருந்த காற்றுக்கு இட நெருக்கடி! குமிழியை துளைத்து வானிற்பறந்தது! காற்று போன சோகத்தில் நீரும், பொருளும் காணாமல் போயின.
