புதுக்குறள்
Mon, 11/24/2008 - 09:52 — Chandar Subramanian
இறைமாண்பு
-
அழுக்கோடும் நீருமேற்கும் ஆழியாம் நெஞ்சம்
பழித்தாலுங் காக்கும் இறை
-
குன்றினுய ரம்யேறிப் பின்காணீர் ஏத்துமின்
நின்றன் அணிமை இறை
-
நதிஆழி வானோடி மாரியாய்மண் மீளும்
நொதிநீர்நாம் சேர்வோம் இறை
-
அழுத்தத்தால் ஆகுமவ் வைரங்காண் நெஞ்சம்
பழுக்கவே ஆயும் இறை
-
குறையும் அருளும் அளவிலைக்காண் ஏத்தக்
குறைதீர்த் தருளும் இறை
-
எழுங்கால் துளியிழுத்து ஈன்றவினை சேர்த்துக்
கழிகாலிற் கோர்க்கும் நிகழ்வு
-
எழுங்கால் கனவென்றும் ஈர்க்குங்காண் ஆண்டக்
கழிகால் திகைப்பில் நினைவு
-
கழிகால் வினையாய்ந்து கண்டுண(ர்)ரும் வாழ்வை
எழுங்காலம் ஈந்துமின் பம்
-
அறியாப் பொருளாயுங் கால்பிறர் கூற்றைப்
பெரியதாய் நம்பும் உளம்
-
நிறைவா யறிந்துப்பின் நின்னிணைமன் றத்து
குறைவா யுறைத்த லினிது
-
உண்மையென் றோர்நிலையுண் டோகாணொவ் வொன்றுமே
எண்ணுவோர் எண்ணம் பொருத்து
-
அடித்தடித் தாகிடுஞ் செங்கனகம் நெஞ்சம்
நொடித்தே நிறையும் நம் வாழ்வு
-
இழந்தநா ளெண்ணித் தொடர்ந்தழுங்கால் வாழ்வி
லிழப்பரின் னும்பல நாள்
-
தோற்பினது தோல்வியிலை தோல்வியாம் தோற்றுப்பின்
ஆற்றல் அதனை விடல்
-
கடும்போரன் னக்காதல் பூத்தப்பின் நெஞ்சம்
விடுமினும் நீண்டு மிகும்
-
பிரிவொன்றே அன்பைப் பெருக்கும் இணையச்
சிறக்கும் அதுவே தழைத்து
-
கனவுநீர்க் காட்டிவளர்க் காதலெழும் மெய்க்காண்
நனவினில் நொய்ந்துக் கெடும்
-
காதலிலோர் ஒண்மையாம் யாதெனின் சொற்குறைத்துக்
காதல் மிகவுஞ் செயல்
(ஒண்மை - நல்லறிவு)
-
ஒளிர்மதி வானேர் வருணனளி மூன்றும்
வளர்மின் மறைத்த லறிது
(அளி - அன்பு)
-
இதழ்வழி ஈர்த்துவக்க இன்னுமோர்ச்செ யற்காண்
புதையலாம் புன்சிரிப்பே யது
-
இன்பமெது வென்றுடல் எங்குஞ் சுவைக்காணும்
கண்ணன்றோ காமத்தின் நா
-
இருத்தலின் பாலிறையும் நீள்மூச்சு நெஞ்சை
யிறுக்கியே மூட்டுங் கனல்
-
செயச்செய செயல்திற னோங்கும்; முயற்சி
செயற்படின் சேர்ந்திடும் உயர்வு
-
காய்தலும் காத்தலும் போலியின் ஊடேச்சேர்ந்
தாயின காதலாய்க் காண்
-
இன்மகிழ்ச்சி முத்தம் இணையெனக்காண் இவ்விரண்டும்
பன்மடங்காய்ச் சேர்க்குஞ் சுவை
-
வாழ்முறையின் நீள்பயணம் யாதெனின் தானறியா
ஆழ்மனதின் ஆழங்காண் அவா
-
புழுங்குமுறை யுள்புது வாளொடு போரின்
மழுங்கிய வாள்மாண் புடைத்து
-
தொடத்தொடரும் தீச்சுடரெங் கெங்குமுள் நெஞ்சில்
படத்தொட ரும்பனிப்பூச் சிரிப்பு
-
உள்ளத்து மென்குரல் கேளிர் உணர்ந்தப்பின்
அள்ளக் குறையா துயர்வு
-
அற்றதை அளவோ டறுநீக்க மாசற்று
உற்றது உயரே வரூம்
-
விளக்கொன்றால் விளக்குணரமாட் டாதென்றும் - இருளொன்றே
விளக்கும் விளக்கின் ஒளி
-
பொய்ப்பல அணிகோர்த்துப் புளுகிற்காண் - உள்ளுறை
மெய்யேபின் மெல்ல நகும்
-
வெற்றிப்பெறு வாழ்க்கை, வெற்று; இஃதிடையே
தொற்றித் திரிவதி யல்பு
-
நனவாக்கும் யாதெனின் விழிமிண்! - கொண்ட
கனவிற் தான்கண்ட வாழ்வு
-
வெங்காயத் தொடர்பிரித் தாயுங்கால் - நிறைமறைந்து
தங்குவது தான்வெறும் கணீர்
-
வண்ணம் வரிக்கவிதை பரதம் பாடல் எனயாவும்
எண்ணம் உணர்வின் உருவு
-
வில்லின் நாண் நீளும் விசை மிகின்; புதுயுக்தியால்
வல்லறிவும் நீண்டு மிகும்
-
கற்றதின் கனி உண்மை யாதெனின் கடைவரை யாம்
கற்றவை கனியில எனல்
-
சொலாச்சொல்லொன் றேசூடேற் றும்வாதத் திலதனெதிர்
சொலும்சொல் வீணது காண்
-
வானிற்வழி உடைத்தன்று உயர்வுக்கு; உழைப்பின் நின்மனம்
தானேவழி பெறும் தகர்த்து
-
நிந்தன் நகை அழகு அதனின் அழகு எந்தன்
முகம் நோக்குமுன் நகை
-
வினைச்சிறிதன்று என்றென்றும் அதுபெரிது; மிகச்சிறிதே
மனக்குறையொடு நோக்கும் நோக்கு
-
துணிவின் உறு துணையாய் தொடர்ந்துதவும் தாம் முன்னர்
துணிவுடன் தோள் கண்ட வெற்றி