skip to content

மருந்தீச்வரன் அந்தாதி

மருந்தீச்வரன் அந்தாதி (01 - 10)

 1. வன்னிக்க நின்புகழை வார்த்தை பலகொண்டேன்
  வன்னிகை யேந்தும் உமையோனே - வன்னிக்
  கடியேநின் தாள்புகழ்ந்தான் வான்மீகி; இன்றைக்
  கடியேனின் பாநின்றன் பால் (01)

  வன்னி - வருணித்தல் / நெருப்பு / வன்னிமரம்

 2. பால்வண்ண ஆறும் பெருங்கடலும் சேர்புறத்தே
  பால்வண்ண நாதாநின் பாதத்தின் பால்வண்ணப்
  பாவொன்றிட்(டு) உன்னருட் பூமழையால் என்னையும்
  பாவென்றேன் பெய்கத் துளி (02)

  அருஞ்சொற்பொருள்:
  பா - பாடல் / கா(த்தல்)

 3. துளிமண்டி யுண்டோய்நின் தூய்சடைவாழ் கங்கைத்
  துளிமண்ணில் வீழ்ந்தைந்து தோயம் - துளிமண்
  அணிந்தேத்த சூழ்பிணையாம் ஊழ்வினை தீர்க்கும்
  அணியாய் அமைந்தஐந் நீர் (03)

  அருஞ்சொற்பொருள்:
  துளி - விஷம் / திவலை / சிறிது
  தோயம் - குளம்

  பாடற் குறிப்பு: வான்மீகி கேட்ட வரத்துக்கு இணங்க, சிவபெருமானின் சடைவாழ் கங்கையிலிருந்து சிந்திய நீர்த்துளிகள், ஜென்ம நாசனி, காம நாசனி, பாப நாசனி, ஞானதாயினி மற்றும் மோட்சதாயினி எனும் ஐந்து தீர்த்தங்களாக திருவான்மியூர் திருத்தலத்தில் அமைந்துள்ளன.

 4. நீராடித் தான்பெற்ற நங்கைஉரு மாறிடவே
  நீராடித் தந்தசென்ம நாசனியின் நீர்நாடி
  வானரனும் மூழ்கிஉரு மீட்டே உமைப்புகழ்
  வானரனே தீர்ந்ததும்மால் மாது (04)

  'வானரனும் மூழ்கிஉரு மீட்டே, உமைப் புகழ்வான் அரனே, தீர்ந்தது உம்மால் மாது' எனப் பொருள் கொள்க.

  அருஞ்சொற்பொருள்:
  நீராடி - குளித்து / நீர் நடமாடி
  மாது - மாசு

  பாடற் குறிப்பு: சத்திய லோகத்தின் கலியாண தீர்த்தத்தில், அதன் புனிதத்தைக் காக்கும் பொருட்டு, அதில் நீராடுவோர் பெண்ணுருவம் அடைவர் என நான்முகன் சாபம் அளித்திருந்தான். இது அறியாமல் அதில் நீராடிய இரட்சசு என்ற வானரன், தன் உரு மாறப்பெற்றான். நாரதர் சொற்படி, திருவான்மியூரில் உள்ள ஜென்ம நாசனியில் நீராடி, சிவனருளால், தன் உருவைத் திரும்பப்பெற்றான்.

 5. மாதவறே பாரதத்தை வஞ்சனையால் வென்றதெனும்
  மாதவசி சொற்கேட்டு வந்திங்கு - மாதவனும்
  கேணியில் நீராடி, கோலஞ்செய் தான்அல்லிக்
  கேணியில் நின்னை மதித்து (05)

  அருஞ்சொற்பொருள்:
  கேணி - குளம்

  பாடற் குறிப்பு: பாரதப் போர் முடிவுற்றப்பின் கண்ணன் துவாரகை திரும்புகையில், வழியில், உபமன்னியு முனிவரைச் சந்தித்தார். "வஞ்சகம் நிறைந்த பாரதப் போரை நடக்க காரணமானாய். உனது நண்பனுக்காக கடமை மார்கத்தை மட்டுமே வலியுறித்தினாய். இதற்கான பரிகாரமாக, திருவான்மியூரில் உள்ள பாப நாசனி தீர்த்தத்தில் நீராடி ஈசனை தொழுவாயாக" என உபமன்னியு முனிவர் கூறிய வார்த்தைக்கு இணங்க, கண்ணன், வான்மியூர் வந்து ஈசனைத் தொழுதுப் பின், பார்த்தசாரதியாக திருவல்லிக்கேணியில் எழுந்தருளினார். தெய்வ அவதாரம் ஆயினும் சூழ் நிலையின் காரணமாய் செய்த தவறுக்கு பரிகாரம் செய்தாக வேண்டும் என்ற உண்மையை பார்த்தசாரதி உலகுக்கு உணர்த்தவே இந்த நாடகம் நடைபெற்றதாக விளக்கப்படுகிறது.

 6. மதியாற்தா ரையை மயக்கமுனி சொல்லால்
  மதியாற் பொலியஇய லாப்போய் - மதிஆலம்
  உண்டோய்உன் தாள்தொட்(டு) ஒளிமீட்டான்; செய்வினை
  உண்டோர்க்குன் தாளே கதி (06)

  அருஞ்சொற்பொருள்:
  மதியால் - அழகால் / நிலவால் / மதி(கடை) ஆலம் (விடம்)
  சொல் - சாபம்
  பொலிதல் - ஒளி வீசுதல்

  பாடற் குறிப்பு:
  சந்திரன், பிரகஸ்பதியிடம் கல்வி பயிலும் வேளையில், முனிபத்தினி தாரையை மயக்கியதால், பிரகஸ்பதியின் சாபத்துக்கு ஆளாகி தன் உடல் ஒளியை இழந்தான். நாரதரின் சொற்கேட்டு, திருவான்மியூரில் உள்ள காம நாசனி தடாகத்தில் நீராடி, மருந்தீச்வரனை வழிபட இழைந்த தன் பொலிவை மீண்டும் பெற்றான்.

 7. கதிரவம டையஅதைக் கண்டிளையோன் மந்தே
  கதிரவன் வீணரக்கர் வீழ்த்த - கதிரவனு
  மேற்கும் விதத்தே எழில்சேர் மருந்தீசா
  மேற்காய் எழுந்தழித்தாய் வண்டு (07)

  சொற்பிரித்து: ராட்சதன்
  கதிர் அவம் அடைய அதைக் கண்டு இளையோன் மந்தேகு
  அதிர வன் வீணரக்கர் வீழ்த்த - கதிரவனும்
  ஏற்கும் விதத்தே எழில்சேர் மருந்தீசா
  மேற்காய் எழுந்து அழித்தாய் வண்டு

  அருஞ்சொற்பொருள்:
  மந்தேகு - மந்தேகம் தீவு
  அவம் - பயனின்மை
  வண்டு - குற்றம்

  பாடற் குறிப்பு:
  மந்தேகம் தீவு அரக்கர்கள், சூரியன் வலம் வர விடாது தடுத்ததால், சுரியனால் தன் பணியை செய்ய இயலவில்லை. அசரீரியின் சொற்படி, தன் தம்பி அசனியை (இடி) திருவான்மியூரில் சூரிய தீர்த்தம் எனும் புனலை உருவாக்கி ஈசனைத் துதித்துப்பின் அரக்கர்களை ஒழித்தான். சூரியன் தன்னை வழிபடுவதற்காகவே, மூலவரான மருந்தீசர் மேற்கு நோக்கித் தோன்றி அவன் துன்பங்களை அழித்தார்.

 8. வண்டையும் கையேந்தும் வாமனன் நாபியெழு
  வண்டயன் தன்செயல் மண்டறிய - வண்டயம்
  ஆடுமருந் தீசாநின் வான்மியூர் கொண்டநீ
  ராடுமருந் தீர்த்த மறை (08)

  சொற்பிரித்து:
  வண்டையும் கையேந்தும் வாமனன் நாபி எழு
  வண்டு அயன் தன் செயல் மண்டு அறிய - வண்டயம்
  ஆடும் மருந்தீசா நின் வான்மியூர் கொண்ட
  நீராடும் அருந் தீர்த்தமறை

  அருஞ்சொற்பொருள்:
  வண்டு (சங்கு / குளவி)
  வண்டயம் - கழல்
  மண்டு - செறிவு
  தீர்த்த மறை - பிரம்ம தீர்த்தம்

  பாடற்குறிப்பு:
  சங்கை கையிலேந்தும் திருமாலின் நாபியில் வண்டாக உதித்த பிரமன், மாலின் சொற்படி, தன் செயல் பற்றி அறிய திருவான்மியூரில் ஈசனை வேண்டி, ஈசனால் அருளப் பெற்றார். முடிவில், திருவான்மியூரில் 'பிரம்ம தீர்த்தம்' நிறுவுமாறு ஈசன் பிரமனைப் பணிக்க, பிரமனும் அவ்வாறே தீர்த்தத்தை நிறுவி ஈசனை வழிபட்டார்.

 9. மறையோனை வென்றுகொண்ட வேதங்கள் தம்மை
  மறைத்தோனை அன்றழித்தான் மால்;நான் மறையோவந்
  திங்குன்னி உன்னை இறைஞ்சும் மருந்தீசா
  இங்குன்னின் உண்டோஉம் பன் (09)

  சொற்பிரித்து:
  மறையோனை வென்று கொண்ட வேதங்கள் தம்மை
  மறைத்தோனை அன்றழித்தான் மால்; நான் மறையோ வந்து
  இங்கு உன்னி உன்னை இறைஞ்சும் மருந்தீசா
  இங்கு உன்னின் உண்டோ உம்பன்

  அருஞ்சொற்பொருள்:
  உன்னி - தொழுது
  உம்பன் - உயர்ந்தோன்

  பாடற்குறிப்பு:
  சோமுகன் என்ற அரக்கன் பிரமனை வென்று, நான்கு வேதங்களையும் கவர்ந்து, கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான். மகா விஷ்ணு மச்சாவதாரம் எடுத்து அந்த வேதங்களை மீட்டார். தாங்கள் கவரப்பட்டதால், தங்களின் புனிதம் மாசு பட்டுவிட்டதாக கருதிய வேதங்கள் நான்கும், மனித உருவங்களில் திருவான்மியூர் அருகே உள்ள வேதபுரியில் லிங்கத்தை நிறுவி சிவனை வழிபட்டன.

 10. உம்பர்கோன் ஈயமுனி வாயுரை தான்மதியா
  உம்பரான் வந்துலவும் வான்மியூர் - உம்பிப்
  பசுபதித்தக் காற்குளம்பாற் பட்டவழுக் கொண்டப்
  பசுபதியே தீராதுன் தண் (10)

  அருஞ்சொற்பொருள்:
  உம்பர்கோன் - இந்திரன்
  உம்பரான் - காமதேனு
  உம்ப - எம்ப
  தண் - அருள்

  பாடற்குறிப்பு:
  சிவன் வழிபாட்டுக்குத் தேவையானப் பொருட்களை எளிதில் பெற வசிட்டர் இந்திரனை அணுகி காமதேனு என்ற தெய்வப்பசுவை பெற்றார். காமதேனு ஒரு நாள் உலவியபடி கயிலை மலையை அடைந்து அங்கு கண்ட அழகில் மயங்கி திரும்பி வரத் தாமதமாக்கியது. இதனால், வழிபாட்டுக்கு தேவையான பொருட்கள் சரியான நேரத்தில் கிடைக்காததால், சினங்கொண்ட வசிட்டர், காமதேனுவை பூவுலகில் காட்டுப்பசுவாக மாறும்படி சபித்தார். பூவுலகில் திரிந்தவாறே வான்மியூர் வந்த காமதேனு, அங்கு கண்ட லிங்கத்தின் மேல் பாலைப்பொழிந்தது. அவ்வழியே வந்த வீரர்கள் காமதேனுவைப் பிடிக்க வந்ததால் ஓடியபோது அதன் காற்குளம்பு லிங்கத்தின் முடியில் பட்டுத் தழும்பை உண்டாக்கியது. மனம் கலங்கிய காமதேனுவுக்கு காட்சியளித்த சிவன், காமதேனுவின் காற்குளம்படியை எற்று, தன் மேல் பாலைப் பொழிந்ததால் இந்த தலத்தில் பால்வண்ணன் என்ற திரு நாமத்தையும் ஏற்றார்.

01-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.