skip to content

தேர்தல்

தேர்தல்.
இது ஒரு வித்தியாசமான
சதுரங்கம்!
சேவகர்கள் ஒரு பக்கம்;
மற்றவர் மறுபக்கம்;
தோற்பது என்னவோ சேவகர்கள் அணி மட்டுமே!

அப்பாவி மக்களுக்கு
ஐந்தாண்டுகளுக்கு ஒரே முறை பூக்கும்
குறிஞ்சிப்பூ-
கொய்துகொண்டு போனபின்பு
ஏங்கிக்கிடக்கும் இன்னுமொரு
ஐந்தாண்டு வரை!

கறை வேட்டி கயவர்களுக்கு
வாக்கிட்டு
திரும்பிவரும் வாக்காளன்,
கையில் கறையோடு!

கீரி பாம்பு சண்டைக்கு
கைக்காசிட்டு காத்திருந்த கூட்டம்!
சலிப்போடு திரும்பும்;
சண்டையும் இல்லை,
சில்லரையும் இல்லை!

மற்போராய் சொற்போர்கள்!
சுய விமரிசனம்; வரலாறு, வாக்குறுதி எல்லாம்!
ஒரே குத்து,
அத்தனை நடுவர்களும்
மண் கவ்வி மூர்ச்சையில்!

எண்ணிக்கை விளையாட்டு!
எனக்கு இவ்வளவு;
உனக்கு அவ்வளவு;
பேச்சு; கேள்வி; பதில் எல்லாம்!
முடிவில் பூஜ்யமாய்
வாக்காளன் மட்டும்!

குரைக்கும் நாய்களுக்குள் சண்டை;
கும்மியடிக்கும் மனிதர்கள்! -
சண்டையின் முடிவில்
நாய்ப்பிழைப்பு;
மனிதர்களுக்கு!

மீண்டும் ஒரு இரயில் நிலையம்!
புதிதாய் ஒரு தொடர் வண்டி
ஊளையிட்டு ஓடி மறையும்!
தாங்கி நின்ற தண்டவாளம்
மட்டும் அதே இடம்!

இந்த வசுதேவ குடும்பகத்தில்
எண்பதாவது தரமானாலும்
கண்ணனை காணோம் -
பெறும் சிசுவெல்லாம்
கம்சனால் வதை;
ஒவ்வொரு முறையும்!

முகவரி இல்லாத கடிதத்திற்கு
இத்தனை தபால்காரர்கள்,
ஒரே கடிதத்தில்
இத்தனை முத்திரைகள்!

தூரத்து நிலவையும் நட்சத்திரங்களையும்
எட்டிப்பிடிக்க உதவுவதாய்
ஒரு கூட்டம்! -
கடைசியில் காலுக்கு கீழிருந்த
காலணியையும் காணோம்! -
அது கூடத்தேவை
ஆயுதமாய் பின்னால்;
சட்டசபையில்!

இந்த தீபாவளியில்
காது கிழிய பட்டாசு;
இனிப்பு, உணவு எல்லாம் -
பின் தலை குளித்து நீர் தெளிப்பு
நீ யாரோ; நான் யாரோ என்று!
ஊர் முழுக்க வெறும் புசுவாணங்கள்!

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும் சிலர்;
பறக்கும் வெறும் பதர்களாய் பலர்!

இது ஒரு விசித்திர குருஷேத்திரம்!
பாண்டவர், கெளரவர் எல்லாம் சரி,
ஏன் இத்தனை திரதராஷ்டிரர்கள்?

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.