skip to content

பாச்சரம் - 3

பாச்சரம் - 3
(வேறுபட்ட படைப்புகளின் தொகுப்பு)

 1. தன்னை அறுத்தாள் தனக்குள்ளே, அச்செயலால்
  என்னை உருவமாய் ஈன்றெடுத்தாள் - அன்னமாய்த்
  தானாகி அன்பாய்த் தனையூட்டி ஊன்வளர்த்து
  நானாக நின்றாள் நயந்து (23/2/2011)
 2. நல்லோர்யார் தீயோர்யார் நானறியும் அத்திறனைக்
  கல்லாமல் வாழ்வைக் கழிக்கின்றேன் - அல்லாய்
  முகமறைக்கும் பொய்ம்மொழியில் மூழ்குமெனைக் காக்க
  அகத்தொளிர்வான் எங்கே அவன் (19/2/2011)
 3. நீறணியும் என்றும் நினைந்துருகும் ஐந்தெழுத்தின்
  ஊறுசுகம் ஒன்றே உணர்ந்துரைக்கும் - ஏறுடையான்
  ஆனபொருள் கேட்கும் அடிகாணும் ஏற்பதற்காய்
  மேனியுளம் வாய்செவிகண் வீடு (16/2/2011)
  (நிரல்நிறை அணியாகக் காண்க)
 4. என்னை உருக்கிஅவள் இல்லத்தில் என்படுக்கி
  உன்னை மகளாய் உவந்தளித்தான் - முன்னவளைச்
  சுற்றமென என்கையில் தேர்ந்திணைத்தான்; ஈதுவக்கப்
  பெற்றவளைப் பெற்றதுமென் பேறு (12/2/2011)
 5. திருமுகத்தான் உள்ளந் திகழ்முகத்தான் தேடத்
  தருமுகத்தான் சேய்முகத்தான் நெஞ்சத்(து) - ஒருமுகத்தான்
  தீமைக்(கு) எறிமுகத்தான் சீர்சேர் பெருமுகத்தான்
  மாமைக்(கு) அறுமுகத்தான் மெய் (10/2/2011)
  மாமை - அழகு
 6. தெரிந்த வரைமுறையில் துல்லியமாய் நாமுன்னர்
  புரிந்த செயலுட் புதிரின் - விரிபொருளாய்
  திண்மையுடன் உள்ளத் தெளிவூட்டும் உட்பொருளே
  உண்மையென வாகும் உணர் (9/2/2011)
 7. ஆழ்கடலின் கீழ்த்தரையில் ஆயிரங்கல் கண்டாலும்
  மூழ்குவோர் சேர்ப்பதுநன் முத்தன்றோ - சூழ்வோர்
  கறையினையே காண்பதேன்? கண்கொண் டவர்தம்
  நிறையினையே நெஞ்சில் நிறை (4/2/2011)
 8. நம்வாழ்க்கை வெங்காயம், நாளென்னும் தோலுரித்துச்
  சும்மையையே நாம்கண்டு தோற்கின்றோம் - வெம்பிவிழி
  சொட்டிடுங் கண்ணீர்நம் சொத்தாகும்; மேல்தோற்றம்
  விட்டொழியும் வெற்றாய் விறைத்து (3/2/2011)
 9. வானே உடைந்திறங்கி வந்ததுபோல் வெண்ணிறத்
  தேனைத் தெளிக்கும் திசையெங்கும் - கானமென
  நாவே களிக்கும் நற்கவியைக் கண்சுவைக்கப்
  பூவாய்ப் பொழியும் பனி (2/2/2011)
 10. எடுபிடியாய் நாமெல்லாம் ஏமாந்த நாள்போய்
  விடுதலைநாள் இன்றுணர்க மீண்டும் - குடியரசால்
  கூனாத நெஞ்சேற்றுக் கூடிக் களிப்படைய
  கோனாகி நின்றோம் குடி (26/1/2011)
 11. ஆயிரம் நிலவென்றான் அன்றோர்நாள்; இன்றுவரை
  தோயமுதாய்ப் பாடித் தொடர்கின்றான் - வாயொலியால்
  தேடும் பொழுதெல்லாம் தீந்தமிழைச் சிந்துகின்றான்
  பாடும் நிலவெனும் பாலு (26/1/2011)
 12. அசையிடும் சொற்கள் அமுதச்சுவை ஏந்தி
  விசையுடன் உள்ளம் விரவும் - அசையும்
  திசையெலாம் சீர்சேர்க்கும் தித்திக்கும் தேனாய்
  இசையொழுகும் பீம்சென் இதழ் (25/1/2011)
 13. இருளெரிக்கும் சூரியன் எழுந்தின்று தங்கும்
  மருளெரிக்கும்; மாறும் மடமை - அருள்நிறைக்கும்
  மங்கலநன் நாளில் மகிழ்ச்சியை ஈந்தேற்போம்
  பொங்கலின்று பொங்கும் பொழுது (15/1/2011)
 14. சென்றவோ ராண்டில்நாம் தேடி விதைத்துவளர்
  கன்றுகள் பன்னூறு கைகொண்டோம் - நன்றியுரம்
  இட்டிடின் இவ்வாண்டும் ஏற்றம்தான்; பூமணக்கக்
  கிட்டிடும் இன்பம் கிளைத்து (1/1/2011)
 15. ஆதவனும் அன்றோர்நாள் அல்லுடைத் தேறுகையில்
  போதவிழ்ந்து பூமுதலாய்ப் புன்சிரிக்க - ஓதவிதழ்
  ஒட்டுந்தாள் விட்டகன்றோர் ஓசை எழுந்ததுவே
  சொட்டும் ழகரத் தொனி (28/11/2010)
 16. சிந்தையில் ஆயிரம் தேந்துளியாய் வான்முழுக்க
  விந்தை விரிக்கும் விளக்கொளியில் - சந்தமுடன்
  முந்தைய நாட்களில் மூண்ட இருளகற்ற
  வந்தது தீபா வளி (5/11/2010)
 17. நெஞ்சக் கனலை நெடுநேரம் நானூதி
  துஞ்சும் உன்னினைவைத் தூண்டிவிட - கெஞ்சுமென்
  கையோங்கும் தீச்சுடராய் காண்கிலையோ? கண்திறந்(து)
  ஐயே எனையணைத்(து) ஆள் (28/09/2010)
 18. கண்ணைக் கொடுத்தேன்காண் காட்சிக்கே; காயமதை
  எண்ணா(து) இழந்தேன் ஏதெதற்கோ - மண்ணோர்நாள்
  தின்னுமுடல் ஈதறிந்தும் தீர்க்கின்றேன் இப்பிறப்பை
  என்னே இழிவாழ்(வு) இது (28/09/2010)
 19. ஓடுநீரின் ஊடே உருட்ட உருமாறி
  தேடுமுரு ஏற்கும் திரள்கற்போல் - நாடிநிதம்
  ஒன்றி உறவாடி ஒட்டி உணர்வேற்று
  மன்றம் பழகும் மனம் (28/09/2010)
 20. ஏதோ நினைக்கின்றோம் ஏதோ சுமக்கின்றோம்
  சூதாழ்ந்த வாழ்வுச் சுழற்சியில்நாம் - ஆதிக்
  கனவெல்லாம் நாம்மறந்தோம்; கால்வயிறு காக்கும்
  உணவுக்காய் இந்த உடல் (28/09/2010)
 21. வண்ணமலர் நாடி வரும்வண்டின் கால்பிடித்தே
  அண்டைமரப் பூவேறி ஆகும்சூல் - எண்ணத்தால்
  வேற்றுப் பொருளேற்று வேறுபொருள் சேர்த்ததனை
  மாற்றும் கருத்தாய் மதி (14/9/2010)
 22. பச்சைமுடி வாரி பலவண்ணப் பூச்சூடி
  இச்சை கிளர்ந்தெழ ஈர்த்திடுவாள் - உச்சிவெயில்
  ஏறவய(து) ஏறி எழுமஞ்சள் சேர்நரையாய்
  மாறு(ம்)முது மங்கையோ மண் (14/9/2010)
 23. ஆலின் கனிசிறிதே; ஆடுகொடி மேற்சுரக்கும்
  பாலில் பெருக்கும் பரங்கிக்காய் - மூலத்தின்
  தோற்றத் தமையாது தோல்வி; தொடருழைப்பால்
  ஏற்றத்தைக் காணல் இயல்பு (12/9/2010)
 24. பளிங்குப் பரப்போடும் பானீரின் காட்சி
  விளக்கும் பொருளதுவோர் விந்தை - களஞ்சேர்ந்து
  கட்டித் தழுவி கலந்துலவி நின்றாலும்
  ஒட்டி யொழுகா உறவு (12/9/2010)
 25. தொந்தி கணேசா தொழுவோர் உளத்தென்றும்
  முந்தி வருவோனே முந்தையனே - வந்தவினை
  அற்றுவிழ அன்பர்க் கருள்புரிந்(து) இப்புவியின்
  உற்றார்தம் உள்ளத் துறை (11/9/2010)
 26. இருளை விரட்டுமொளி, ஈதுண்மை என்பர்
  பொருளறியார் கண்மூடும் போழ்து - வருமொளியை
  காயும் கதிராக்க கார்ஆர் திரையாகி
  ஈயும் இருட்கே(து) இணை (11/9/2010)
 27. அடுக்கி யழகாக அமைந்திருக்கும் வாழ்க்கை
  தொடுத்த மலரொக்கும் தோற்றம் - கொடுத்தவன்நம்
  செய்கைகள் யாவையும் தேர்ந்தன்றோ சேர்க்கின்றான்
  மெய்வெறும் மேடையிதே மெய் (11/9/2010)
 28. ஆதியில் வண்ணம் அதுவொன்றே பச்சை,பின்நாள்
  சோதித்த வண்ணங்கள் தோல்விதான் - யாதிலுமே
  உள்ளங் கவரும் உணர்வேது? நெஞ்சத்தை
  அள்ளும் பசுமை அழகு (11/9/2010)
 29. நோக்கும் நினைவே நுழையாத நம்நெஞ்சப்
  போக்கின்பின் ஓடும்நாம் புல்லரோ - தாக்கும்வன்
  பேச்சிற் கழிப்போம் பெருவாழ்வை, தீதுவமை;
  பூச்சிக்கு வாழ்வளிக்கும் புல் (11/9/2010)
 30. தூக்கமாய் உள்ளத் துயிலெழுப்பி நன்நினைவுத்
  தேக்கமாய் உட்டிரண்டு தெள்ளியதாய் - ஆக்கமாய்
  ஆங்கார் பொருளாகி அப்பொருளின் உட்கருவாய்த்
  தூங்கும் நிலையான் செயல் (29/7/2010)
 31. சிங்கக் குரலோன் சிவாஜியெனும் மாநடிகன்
  தங்கத் தமிழ்வானின் தாரகையாம் - பொங்கொளியால்
  மங்கும் பகலவனும் மாமதியும், பேருலகில்
  தங்குமவன் நாமம் தழைத்து (21/7/2010)
 32. படியோலைத் தேடியே பாரெலா மோடிப்
  படியோலை யென்றளித்தான் பாரப் - படியோலை
  தாத்தா வெனச்சேர்த்தச் சீமானை செந்தமிழ்த்
  தாத்தா வெனலே தகும் (20-02-2010)
  படியோலை - மூலவோலையைப் பார்த்து எழுதிய ஓலை
 33. (தருமபுரம் சுவாமிநாதன் மறைவு குறித்து...)

  தருமபுரம் சாமிநா தாஉன் அருநா
  தருமபுரூ பப்பா விலெம தருமபுரக்
  காலன் மயங்கியுனைக் கொள்ளப் புவிநீத்துக்
  காலமாய் நின்றாயோ நீ (15-10-2009)

 34. (குழும அன்பர் காமேஷ், மற்றும் யாங் அவர்களின் திருமண தினத்தன்று வாழ்த்தாக படைத்தது...)

  யாங்கனும் தம்பதியர் உண்டோ நுமைப்போலே,
  யாங்கெனும் ஓர்யுவதி 'யின்'னாகி - 'யாங்'கென
  காமேசு கைப்பற்றக் காதலால் ஓருளப்பங்
  காமேசு கம்சூழத் தான் (04-10-2009)

  சொற் பிரித்து:
  யாங்கனும் தம்பதியர் உண்டோ நுமைப் போலே?
  யாங் எனும் ஓர் யுவதி 'யின்' ஆகி - 'யாங்' என
  காமேசு கைப்பற்றக் காதலால் ஓர் உளப்
  பங்காமே சுகம் சூழத் தான்

  குறிப்பு: "Yin and Yang" குறியை அடிப்படையாக கொண்ட கருத்து

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.