skip to content

மருந்தீச்வரன் அந்தாதி (31 - 40)

  1. பங்குடையான் சீரணங்கைப் பார்வதியை நால்வாயொப்
    பங்குடையான் தந்தையிப் பொய்மனப் - பங்குடையா
    னல்கிய யாவும் அளித்தான்பூ உய்யவன்
    நல்கிய வேதமவை நான்கு (31)

    சொற்பிரித்து:-
    பங்கு உடையான் சீரணங்கைப் பார்வதியை; நால்வாய் ஒப்ப
    அங்கு உடையான் தந்தை இப்பொய்மனப் - பங்குடையான்
    அல்கிய யாவும் அளித்தான் பூ உய்ய அவன்
    நல்கிய வேதம் அவை நான்கு

    அருஞ்சொற்பொருள்:-
    பங்கு - பாகம் / முடம்
    நால்வாய் - யானை
    அங்குடையான் - அங்குசம் உடையான் (விநாயகன்)
    அல்கிய - குறைபட்ட/குறைந்த

  2. நால்வர்க்கு வேதங்கள் நல்கி வினையூசல்
    நால்வர்க்கு நாடருள்வான் நாவூற நால்வர்க்குச்
    செந்தமி ழாம்மிப்பூ தாமுற்ற இன்னலறச்
    செந்தமித் தாளே தகும் (32)

    சொற்பிரித்து:-
    நால்வர்க்கு வேதங்கள் நல்கி, வினை ஊசல்
    நால்வர்க்கு நாட அருள்வான்; நாவூற நால்வர்க்குச்
    செந்தமிழாம்; இப்பூ(மி) தாம் உற்ற இன்னல் அறச்
    செந்தமித் தாளே தகும்

    அருஞ்சொற்பொருள்:-
    நாலுதல் - தொங்குதல்
    செம்மை - செழுமை / சிவப்பு
    தமி - ஒப்பில்லாமல்

    பாடற்குறிப்பு:-
    தட்சிணாமூர்த்தி வடிவில் இறைவன், சனகாதியர் என்ற நான்கு முனிவர்களுக்கு வேதங்களை உபதேசித்தான்.

  3. தக்கிணங்கன் சுந்தரனை தாளடியில் ஆட்கொண்டு
    தக்கிணர்கை யேந்தியுத் தந்தம்வாழ் தக்கிணனே
    பொய்யனென் போகப் பசியறுத்த ருள்கநீ
    பொய்யெனப் போகப் பொரு (33)

    சொற்பிரித்து:-
    தக்கு இணங்கன் சுந்தரனை தாளடியில் ஆட்கொண்டு,
    உதக்கு, இணர் கையேந்தி உத் தந்தம் வாழ் தக்கிணனே,
    பொய்யன் என் போகப் பசி அறுத்து அருள்க நீ
    பொய் எனப் போகப் பொரு

    அருஞ்சொற்பொருள்:-
    தக்கு - நிலையான
    இணங்கன் - நண்பன்
    உதக்கு - வடக்கு
    இணர் - சுவாலை
    தந்தம் - மலை முகடு
    தக்கிணன் - தட்சிணாமூர்த்தி
    போகம் - செல்வம்
    பொரு - எதிர்த் தடை

  4. பொருது நிமலையோர் பங்கென்றான் காமன்
    பொருது வரஅழித்தான் பெய்யப் - பொருதுமி
    மண்கொண்டாங் கைந்நீர் மறையேத்தும் வான்மியூர்
    மண்கொண்டான் தாளொன்றே மெய் (34)

    சொற்பிரித்து:-
    பொருது நிமலை ஓர் பங்கு என்றான் காமன்
    பொருதுவர அழித்தான்; பெய் அப்பு ஒரு துமி
    மண் கொண்டு ஆங்கு ஐந்நீர்; மறை ஏத்தும் வான்மியூர்
    மண் கொண்டான் தாள் ஒன்றே மெய்

    அருஞ்சொற்பொருள்:-
    பொருதுதல் - ஒன்றுதல் / போரிடல்
    நிமலை - பார்வதி
    அப்பு - நீர் / கங்கை
    துமி - துளி
    மண் - நிலம் / திருநீறு
    (திரு)மண்கொண்டான் - சிவன்

    பாடற்குறிப்பு:-
    வான்மீகி கேட்ட வரத்துக்கு இணங்க, சிவபெருமானின் சடைவாழ் கங்கையிலிருந்து சிந்திய நீர்த்துளிகள், ஜென்ம நாசனி, காம நாசனி, பாப நாசனி, ஞானதாயினி மற்றும் மோட்சதாயினி எனும் ஐந்து தீர்த்தங்களாக திருவான்மியூர் திருத்தலத்தில் அமைந்துள்ளன.

  5. மெய்தவ நீறுடையான் மேனியெங்கும் பூம்பாண
    மெய்தவனை நீறா யெரித்தவனா - மெய்தவம்
    வீட்டு மமுதேசன் மேவுஞ்சீர் வான்மியூர்
    வீட்டு வழிகாண் விரை (35)

    சொற்பிரித்து:-
    மெய் தவநீறு உடையான் மேனி எங்கும் பூம்பாணம்
    எய்தவனை நீறாய் எரித்தவனாம் - எய்த அவம்
    வீட்டும் அமுதேசன் மேவும் சீர் வான்மியூர்
    வீட்டு வழி காண், விரை

    அருஞ்சொற்பொருள்:-
    நீறு - திருநீறு / சாம்பல்
    கணம் - கணை
    எய்தல் - பணிதல்
    அவம் - கேடு
    வீட்டுதல் - அழித்தல்

  6. விரையார் மலரினான் வான்மியூ ரானவ்
    விரையார் அரவணிந்தான் மன்றம் விரையார்
    விடையால் விழுவர் விரைந்தோ ரெவர்க்கும்
    விடையா னருள்செய்கு வான் (36)

    சொற்பிரித்து:-
    விரை ஆர் மலரினான் வான்மியூரான் அவ்
    இரை ஆர் அரவு அணிந்தான் மன்றம் விரையார்
    விடையால் விழுவர்; விரைந்தோர் எவர்க்கும்
    விடையான் அருள் செய்குவான்

    அருஞ்சொற்பொருள்:-
    விரை - நறுமணம்
    இரை - ஓசை
    அரவம் - பாம்பு
    விடை - வருத்தம் / எருது

  7. வான்மதி யோடரவம் மான்மழு தேநதிக்கொள்
    வான்மதிக் கண்ணியான் மேவுஞ்செவ் - வான்மதி
    மால்கதி ரோன்கோன் மறைவணங்கும்; ஏத்தொழிய
    மால்கதி யாய்செய் முறை (37)

    சொற்பிரித்து:-
    வான்மதியோடு அரவம் மான் மழு தே(ன்)நதிக் கொள்வான்
    மதிக்கண்ணியான் மேவும் செவ்வு ஆன், மதி,
    மால், கதிரோன், கோன், மறை வணங்கும்; ஏத்து, ஒழிய
    மால் கதியாய் செய் முறை

    அருஞ்சொற்பொருள்:-
    மதிக்கண்ணியான் - சிவன் ஆன்
    செவ்வு - திசை
    ஆன் - அவ்விடம்
    மால் - திருமால்/மயக்கம்
    கதி - வழி
    முறை - முறையீடு

  8. முறையுமையாள் தம்வலஞ்சேர் வான்மி நகர
    முறையுமையா காகா வெனப்பன் - முறையுமையா
    மேத்தியக்கம் பல்கேட்ட ருள்வாயே நின்பாத
    மேத்தியக்கம் தீர்க்கும் விடை (38)

    சொற்பிரித்து:-
    முறை உமையாள் தம்வலஞ்சேர் வான்மி(யூர்) நகரம்
    உறையும் ஐயா, கா கா என பன்முறை உமை யாம்
    ஏத்தியக் கம்பல் கேட்டு அருள்வாயே நின் பாதமே
    இத் தியக்கம் தீர்க்கும் விடை

    அருஞ்சொற்பொருள்:-
    முறை - ஒழுக்கம்/மேன்மை
    கம்பல் - ஆரவாரம்
    தியக்கம் - மயக்கம்

  9. விடையேறு வேதியன் வான்மியூர் மேவும்
    விடையேறுங் கோஅல் பகலிவ் - விடையேறு
    காணாத வன்வணங்கும் கோலவெழிற் கூத்தனைக்
    காணாத கண்ணன்று கண் (39)

    சொற்பிரித்து:-
    விடை ஏறு வேதியன்; வான்மியூர் மேவும்
    விடை ஏறும் கோ; அல்பகல் இவ் இடை ஏறு
    காண் ஆதவன் வணங்கும் கோல எழில் கூத்தனைக்
    காணாத கண் அன்று கண்

    அருஞ்சொற்பொருள்:-
    விடை - எருது / பாம்பு
    கோ - சிவன்

  10. கண்ணாரும் சீர்நுதலாய் கர்வத் துமையெதிர்த்தக்
    கண்ணாரும் தீயறிவர் கீழ்க்கரைக் - கண்ணாரும்
    நம்பிநும் செங்கண்ணும் நல்குமருள் என்றென்றும்
    நம்பிநும் நீறணியும் நான் (40)

    சொற்பிரித்து:-
    கண் ஆரும் சீர் நுதலாய், கர்வத்து உமை எதிர்த்தக்
    கண்ணார் உம் தீ அறிவர்; கீழ்க்கரைக்கண் ஆரும்
    நம்பி, நும் செங்கண்ணும் நல்கும் அருள் என்று, என்றும்
    நம்பி நும் நீறணியும் நான்

    அருஞ்சொற்பொருள்:-
    ஆரும் - விளங்கும் / தங்கும்
    நுதல் - நெற்றி
    கண்ணார் - பகைவர்
    நம்பி - இறைவன்

01-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.