skip to content

மரணம்

மரணம்!
இது
வாழ்க்கை வாக்கியத்தின்
முற்றுப்புள்ளி!

ஜனனத்தின் போதே
முதலில் நிச்சயிக்கப்பட்டது-
நிலையானது!

அறிவியல், ஆன்மீகம்,
இரண்டுக்கும் விளங்காத
விந்தையான உண்மை!

நிகழ்காலத்தை
கடந்த காலமாக்கும் இது
ஒவ்வொருவரின் நிதர்சன
எதிர் காலம்!

இந்த அலாவுதீனின்
அற்புத விளக்கு,
அனாதை ஆனது.
பூதம் காணாமல்
போன பின்பு!

திட, திரவ, வாயு,
முப்பரிமாணங்களில்
முதன்மை எது?
திடமும் திரவமும்
கருத்து வேறுபட
காற்று வெளி நடப்பு!

செல்லரித்தவனின்
சொல்லாய்
அவன் செய்த செயல்கள் மட்டும்!

வென்றவனையும் தின்று
தின்றவனையும் வெல்லும்
நடு நிலை நாயகன்!

ஐம்பூதங்களையும்
அடக்க நினைத்தவன் இங்கு
ஐம்பூதங்களில்
அடங்கிக் கிடக்கிறான்!

நினைவுகளின் வெள்ளத்தில்
தொலைந்து போக
இன்னுமொன்று - மரணம்!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.