skip to content

அதுவும் இதுவும் - சிலேடைகள் (01-10)

அதுவும் இதுவும் - சிலேடைகள் (01-10)

 • கண் - மைப்பேனா (1)

  வெள்ளைக் கருப்பாய் விளையாடும்; மையேற்க,
  கள்ளுண்ட போதைக் களியாட்டம் - உள்ளுறங்கும்
  எண்ணங்கள் ஊற்றாகும்; வற்றச்சொல் வாரா;கூர்
  கண்ணொத்த மைப்பேனா காண்

 • கைக்கடிகாரம் - குதிரை (2)

  ஓடிக்கொண் டேயிருக்கும், ஓடுங்கால் தானொலிக்கும்,
  நாடுங்கால் பின்னகரும், நையவிசை கூடும்,
  கனையக்கை வைதணியும், காருலோ கத்தோற்
  பிணைகடிகை யும்பரியும் நேர்

  கனைதல் - To sound, as a drum; ஒலித்தல்
  நைய - வருத்த / வளைக்க
  கனைத்தல் - குதிரையின் ஒலி
  கார் - கருமை

 • தொலைபேசி - நாய்க்குட்டி (3)

  படுத்தால் சிணுங்கும், பலவா றொலிக்கும்,
  எடுத்தால் அமைதியுமே னென்றுப் - பிடித்தால்
  தலைசாயப் பேசும், சதாவிழிக்கும், வால்சேர்
  தொலைபேசி நாய்க்குட்டி நேர்

 • செய்தித்தாள் - நடிகை (4)

  வண்ணமுகப் பால்நல் விலைதேறும், வந்தநாள்
  கண்மொய்க்கும், அன்பர்தம் கூட்டம்காண் - முன்னாள்
  படிமறையச் சின்னதாய் பாத்திரமாம், செல்லா
  நடிகையும் நாளேடும் நேர்

 • மான் - மயில் (5)

  கண்ணார் கருமேனி, கானகத்தே ஈதழகு,
  விண்ணார் அழகனமை ஊர்தியுமாம் - பெண்காண்
  கவிகட்கோ பின்னுவமை, காற்றாடுந் தோகை,
  கவரியுமாய் மான்மயிலைக் காண்

  அழகனமை - அழகன் அமை(யும்) / அழகன் அ(ம்)மை
  தோகை - மயிற்பீலி / விலங்கின் வால்
  கவரி - கவரி மான் / சாமரம்

 • பல் - தேங்காய் (6)

  பார்வைக்கு வெந்நிறம்; பாலென்றும் பேர்பெறும்;
  நார்துலக்கும்; வீழ்ந்துடைய நேரும்;வாய் நீர்கசியும்;
  பாங்காய் அரைத்துண்ணப் பண்டச் சுவையூறத்
  தேங்காயும் பல்லுங்காண் நேர்

 • திருமணம் - மாலை (7)

  இணையப் பிறக்கு மெதிரெதிராய்த் தொடக்கம்;
  பிணையுமோர் நாணால்; பெறுந்தோள் - அணையுமன்பு
  வற்றமணம் வாடும்; விரலா லிணைந்தொன்றில்
  மற்றொன்றாய் மாலைமணம் காண்

 • கணினி - விளக்குமாறு (8)
  எல்லாம் விளக்குமெலி ஊருமிடம் போய்வரும்;
  செல்லவோர் ஊர்தியாம் சூனியத்தே - சொல்லின்
  பணிந்தீரா லேபெருக்கும்; பின்கழிவைக் கூட்டும்;
  கணினிக்கு நேர்விளக்கு மாறு

  சொற்பிரித்து:-
  எல்லாம் விளக்கும்; எலி ஊரும் இடம் போய்வரும்;
  செல்லவோர் ஊர்தியாம் சூனியத்தே - சொல்லின்
  பணிந்து ஈராலே பெருக்கும்; பின்கழிவைக் கூட்டும்;
  கணினிக்கு நேர்விளக்கு மாறு

 • முடைபாய் - கடன் (9)
  இடைவிடா தோர்இறுக்கம்; ஈந்திலையே என்பர்;
  முடைநேரம் கைமாறும்; மூழ்த்த அடையும்;
  படுக்கும் பணிக்காம்; படுத்தால் உறுத்துங்
  கடனாய் முடைபாயைக் காண்

  ஈந்து - ஈதல் / ஈச்சம்
  முடை - பணமுடை / பாய் முடைதல் (பின்னுதல்)
  மூழ்த்து - மூழ்கச்செய்தல் / மூடு
  படுத்தல் - துயிலுதல் / வியாபாரம் படுத்தல்

 • நாய் - பட்டம் (10)
  வாலிருக்கும், வானமையும், உச்சமே லேறுங்காண்,
  பாலருக்கோர் ஆடுபொருள், பின்நாண்வில் போலிருக்கும்,
  சார்ந்திருக்கும் கையிழுக்கச் சற்றசையும்; நாரறச்
  சோர்ந்தலையும் பட்டம்நாய் நேர்

  வான் - அழகு / ஆகாயம்
  உச்ச - உச்சுக்கொட்டுதல்
  ஏல் - மிக
  நாண் - முதுகுத்தண்டு / தண்டு (மூங்கிற்பட்டை)

01-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.