விருப்பம் போல் (தென்றல்)
குறிப்பு: திரிசக்தி குழுமம் 10/4/2010 அன்று நங்கை நல்லூரில் நடத்திய கவியரங்கத்திற்காகப் பாடியது:
உங்களின் விருப்பம் போலே
.. ஒருகவி தருக வென்றார்;
சங்கரன் துணையோ டின்று
.. சபைக்குநான் துணிந்து வந்தேன்;
இங்கெனக் கிதுவே ஆதி,
.. எழுதினேன் கவிதை ஒன்றை;
என்கவி விரித்தேன் முன்னே,
.. எழும்பிழை பொறுக்க ஐயே. (0)
உள்ளதோ உலகி லேதும்
.. உளமதன் விருப்பம் போலத்
துள்ளிடும் நிலையி லென்றும்
.. சுதந்திரப் பொருளாய்? என்னைத்
தள்ளியே உரசிற் றோளைத்
.. தழுவியே வருவ தேதோ?
அள்ளிடும், அகத்துள் ஊரும்,
.. அணைத்திடும், அதுவே தென்றல் (1)
நீரினைத் தடுத்தான் ஆற்றின்
.. நெடுகவே அணைகட் கட்டி,
வேரினை அசைத்தான் மண்ணுள்
.. விசைமிகு பொறியை ஏவி,
சூரியன் எதிர்த்தான் என்றே
.. தொடர்மனை மனிதன் செய்தும்,
ஓரிழைப் பழகுந் தென்றல்
.. ஒளித்திடும் வழியைக் காணான் (2)
வாழ்வையும் கொடுக்கும் தென்றல்
.. உயிரதை உடலுள் ஊட்டி
வீழ்வையுந் தருமே தென்றல்
.. உடலதை விடுக்கும் போது,
சூழ்நிலை கெடுக்கும் வெப்பச்
.. சுடுகனற் றழலை மாற்றும்,
மூழ்குமப் பொழுதும் வானின்
.. வழியதை விளக்கும் முத்தாய் (3)
தொட்டிலிற் றுயிலும் பிள்ளை
.. தொடர்ந்தழச் சுழலச் செய்தே
விட்டமீ திருந்த பொம்மை
.. ஒலியினால் விந்தை சேர்க்கும்,
சுட்டியாய் சிறுவன் கையிற்
.. சுழற்பொறித் திருகி நூலாற்
பட்டமே கனவாய் வானிற்
.. பறந்திட உதவும் தென்றல் (4)
சொட்டிடும் மதுவைத் தேடித்
.. தொடர்ந்திடும் அளிகம்; பூவைத்
தட்டியே தொடரும் வண்டைத்
.. திகைப்புறப் புரியும் தென்றல்;
எட்டியே அமுதை நூலாய்
.. இழுக்கையில் வண்டைப் பின்னால்
முட்டியே மலரின் தேனில்
.. முழுதுமாய் முழுகச் செய்யும் (5)
தப்புவோம் நனையா தென்றே
.. தருவடி ஒதுங்கி மெல்லச்
செப்புவார் பிழைத்தோம் என்றே;
.. செயற்றனை தெரிந்தே தென்றல்
அப்பெரும் கிளையை ஆட்ட,
.. அனைவரும் இலைகொள் நீராற்
தெப்பமாய் நனைதற் கண்டுச்
.. சிரிக்குமே விருப்பம் போலே (6)
சன்னலில் நிழலின் ஊடே
.. சலிப்பிலா சரசப் பேச்சு;
சன்னமாய் அவளும் பேச
.. தெளிவிலா தவனுங் கேட்கும்
முன்னமே புகுந்து தென்றல்
.. முடிந்ததை செவியிற் சேர்க்கும்,
கன்னலாய் அவளின் முத்தம்
.. களிப்புடன் முதற்றான் ஏற்கும் (7)
பேசிடா திருக்க வாயைப்
.. பொருத்திட வியலும் கையால்,
கூசிடா திருக்கக் கண்ணைக்
.. குறுக்கியே மறைக்கக் கூடும்;
நாசியை பிடித்து வாசம்
.. நிறுத்திட நினைப்ப துண்டோ?
வீசிடும் இடத்தி லெல்லாம்
.. விருப்பமாய் நிறையும் தென்றல் (8)
பூமணம் பொழியும் வத்தி,
.. புதுவித சமையல் யுத்தி,
பாமரன் குடிசைச் சோறு,
.. படுத்தவன் நெஞ்சுக் கூடு,
ஆமதற் கிலைகாண் பேதம்,
.. அனைத்தையும் அணைத்தே போகும்;
வாமனன் வழியில் என்றும்
.. வளைத்திடும் வெளிஉள் யாவும் (9)
பண்டிதர் இசையைக் கொண்டே
.. பரங்கியர் செவியிற் சேர்க்கும்;
கொண்டிடும் தலைவன் பேச்சைக்
.. குடிசையில் கொடுத்துப் போகும்;
தொண்டையின் உதறற் றன்னை
.. தமிழ்வழிப் பதமாய் மாற்றி
அண்டிடும் உயிர்கட் கெல்லாம்
.. அளித்திடும் கருவி யாகும் (10)
நில்லெனில் நிலைக்கா தெங்கும்,
.. நொடியினிற் கடந்து செல்லும்;
செல்கையிற் சிதைக்கும் போதும்
.. தெரிந்திடும் வழக்கம் இல்லை;
வல்வளிச் சுழலின் போது
.. வழியடைப் பொருள்காண் நாசம்;
கல்லையும் புரட்டி வையம்
.. கலக்கிடும் விருப்பம் போலே (11)
மண்ணதைக் கிளறி வீசும்;
.. மலருடன் சிலநாள் பேசும்;
கண்களை மறைக்கும், பின்னே
.. கனிவுடன் வருடும் மெல்ல;
எண்ணிலாச் சருகைத் தூவி
.. இசையினை ஒலிக்கச் செய்யும்;
பண்ணுமச் செயல னைத்தும்
.. பாரதன் விருப்பம் போலே (12)
தென்றலின் கரமி ணைந்தே
.. சிலதுளி செவியில் சேர்த்தேன்;
என்கவி இதுதான் என்றே
.. இதையினி நிறைவு செய்தேன்
அன்புடன் அமர்ந்து கேட்ட
.. அனைவரின் செவிக்கும் நன்றி;
என்பணி முடிந்த தென்பேன்
.. இறைவனை நினைத்த வாறே (13)
