skip to content

நிலவேயென் நெஞ்சில் நிலவு!

அலையலையாய் என்னெஞ்சில் ஆசையை கிளப்பிவிட்டு
குலைஉயிராய் எனையாக்கிச் சென்றாய்! - அன்பின்
சிலையெனவே உனை நாளும் வைப்பேன் என் வாழ்வின்
நிலவேயென் நெஞ்சில் நிலவு!

மலையென இருந்தயென் நெஞ்சை நின்கண்
வலையினால் வளையச் செய்தாய் - பார்க்குந்
தொலைவிலினில் நின்றென்னை நிதமும் துளைக்கின்ற
நிலவேயென் நெஞ்சில் நிலவு!

உலகெலாம் இருந்தபோதும் உன்மேல்
அளவிளா காதல் கொண்டேன்! - இந்தக்
களவிலா காதலேற்று கருத்தினால் என்றும்
நிலவேயென் நெஞ்சில் நிலவு!

உலை நீர் கொதிக்கும் ஓயாதந்த சோற்றுக்
கலமென மாறியதெனதுள்ளம்! ஓய்க்கச்
செல்லக் கரமிகு பூங்குளிர நீர்போலிங்கு வந்து
நிலவேயென் நெஞ்சில் நிலவு!

மலராக மாமரத்தின் புன்சிரிப்பு! - மண்ணுடைக்கும்
இலையாக சிறுவிதையின் முன்சிரிப்பு! - உனையென்னும்
கலையாத ஓவியமாய் காணுமெந்தன் மென்சிரிப்பாய்
நிலவேயென் நெஞ்சில் நிலவு!

மலை நுதல் ஊறிய நீர் மண்ணெலாம் வண்ணம் மாறி
அலைகடல் அடைந்தின்பம் காணும்! - நெஞ்சக்
கலமதில் உனையெற்றி கடலென காத்திருப்பேன்
நிலவேயென் நெஞ்சில் நிலவு!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.