skip to content

நான் உலகன்

நான் உலகன்

மூடிய செய்தித் தாளை
.. முன்தினம் பிரித்த வேளை
ஆடிய துள்ளம் அந்த
.. அரக்கரின் செய்கை கண்டே;
ஓடிடும் வாக னத்தை
.. ஒருவெடி கொண்ட ழிக்கக்
கூடிய பிணத்தின் கூறு,
.. கூறிடும் கதையோ நூறு. (1)

என்றுமே உணரா வண்ணம்
.. இன்றென துநெஞ்சிற் பாரம்;
வன்முறை என்ப தென்ன?
.. வழங்குமிச் சொல்லாற் கூறல்
என்முறை? தவறீ தென்பேன்,
.. எண்ணுக, முறையோ வன்மம்?
மென்மனம் உடையேன் நென்
.. வேதனை உணர்வே இப்பா. (2)

ஏட்டிலே எழுத்து வன்மம்,
.. ஏற்கையில் எண்ணம் வன்மம்,
காட்டிடும் காட்சி வன்மம்,
.. காணுமக் கண்ணில் வன்மம்,
பூட்டிய வீட்டில் வன்மம்,
.. புகுந்தபெண் வீட்டில் வன்மம்,
நாட்டையே நகர்த்தும் வன்மம்,
.. நகரெலாம் நதியாய் வன்மம். (3)

தாய்ப்பையில் உயிர்த்த போது
.. தரணியில் உயிராய் ஆனேன்,
சேய்வழி மனிதம் கண்டேன்,
.. சேர்ந்ததென் ஊரின் பேரும்,
போய்நிதம் கற்கும் பள்ளி
.. புகுத்துமே மதத்தின் பேரை;
வாய்ப்பெனப் பெயர்ந்த போது
.. பிரிந்தமண் என்நா டென்றேன். (4)

உண்மையே இதுதான் என்றால்
.. உலகிலேன் சர்ச்சை, சண்டை?
கொண்டவென் மதமும் நாடும்,
.. கொண்டவை, பிறந்த பின்னர்.
அண்டையான், மதத்தால் வேற்றான்,
.. அன்பிலான், என்னும் வாதம்
உண்மையா? பிறந்த யாரும்
.. பிறப்பினால் ஒப்பர் அன்றோ? (5)

மண்வள எண்ணெய் வேண்டின்
.. மேற்கது கிழக்கை நாடும்;
பண்ணிய பொருளை விற்கப்
.. பழகிடும் கிழக்கி னோடே.
மண்பெயர்ந் துயர வாழ்வில்
.. மேற்கையே கிழக்கு நாடும்;
நுண்பணி யாளர் சேர்க்க
.. நுழைந்திடும் கிழக்கில் மேற்கும்; (6)

நாம்பலன் அடையும் போது
.. நமக்கிலை வேறு பாடு,
வீம்பொடு விரைத்து நிற்போம்,
.. விழைந்ததை இழக்கும் போதே;
ஆம்,வரும் சர்ச்சை யாவும்
.. அளவிலா ஆசை யாலே,
போம்வரும் இணக்கம், சண்டை,
.. புரிந்திடின் புலரும் காலை. (7)

என்னுல(கு) ஒன்றுண் டாகும்,
.. எங்கிலும் அமைதி பொங்கும்,
ஒன்றிடும் ஊரும் நாடும்,
.. ஒருமொழி, அதுவே அன்பு;
சென்றிடும் திசைகட் தோறும்
.. செயற்கையாய் எல்லை இல்லை;
இன்பமே எங்கும் தங்கும்,
.. இல்லையென் றேதும் இல்லை. (8)

நட்பதை அறியார் யாரும்,
.. நெடும்பகை இலாத தாலே;
நட்டமே எவரும் காணார்,
.. நாட்டினில் வணிகம் இல்லை;
கெட்டவர் நல்லோர் என்றே
.. கூறுகள் தேவை இல்லா
வட்டமாய் நிலவும் வாழ்வில்
.. வளமதே, வன்மம் இல்லை. (9)

எண்ணுவீர், எண்ணத் தாலே
.. இனியொரு புவனம் செய்வோம்;
கண்ணெதிர் தெரியும் இன்பம்;
.. கனவிலை, காண்வம் திண்ணம்;
அண்மையில் இந்நிலை காணும்
.. அந்தவோர் உலகன் நானே,
எண்ணுவீர் என்னைப் போலே
.. எழும்புமவ் வுலகம் முன்னே. (10)

குறிப்பு: 2010 செப்டம்பர் மாத யுகமாயினி இதழில் வெளியான எனது கவிதை.

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.