8. அன்புடைமை
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். 71
தன்னுயிர் ஒத்த அன்பர்
.. தவித்திடும் நிலையின் போதவ்
இன்னலைக் கண்டும் நெஞ்சம்
.. இளகிடா திருப்பர் யார்சொல்?
அன்பகம் பெருகா வண்ணம்
.. அடைத்திடும் பூட்டும் உண்டோ?
தன்னிலை மறக்கக் கண்ணீர்
.. ததும்பிடும், கதவைச் சாய்த்தே (1)
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. 72
கண்டதைத் தமதாய்க் கொள்வர்
.. கருத்தினில் காணே தன்பு?
கொண்டதைக் காத்தும் மண்ணுட்
.. கொளும்வரை ஓடிச் சேர்ப்பர்;
எண்ணதில் எளிமை கொண்டோர்
.. எலும்பையும் பிறர்க்காய் ஈவர்,
உண்டெனின் அன்பு நெஞ்சில்
.. உளதெலாம் உலகுக் கென்பார் (2)
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. 73
ஆதியில் உயிர்த்த போதே
.. அதனுடன் வளர்ந்த(து) என்பும்;
பாதியில் விடுத்துச் செல்லாப்
.. பண்பதன் பழக்கம் சொல்லும்
நீதியை நினைத்தல் வேண்டும்,
.. நின்றிடும் அன்பே என்றும்,
ஈதினி வரும்நம் வாழ்வின்
.. இயல்பெனக் கொள்ளல் நன்றே (3)
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு. 74
சென்றுநாம் தேடும் நட்பு
.. தீயதாய் மாறக் கூடும்;
அன்பதை நல்கும் பண்பை
.. அடைந்திடல் வேண்டும் வாழ்வில்,
நன்றதே, அதுவாய் நல்ல
.. நண்பரை நமக்காய்ச் சேர்க்கும்
அன்பதே அன்பை நல்கும்
.. அடிப்படை இயல்பொன் றீதே (4)
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. 75
பேருயர் பதவி பேச்சு
.. பெருமைகள் செல்வம் என்றாய்
பாரினில் இன்பம் துய்ப்போர்
.. பார்க்குமச் சிறப்பு யாவும்
ஆருயிர் அன்பர் யாரோ
.. அளித்திடும் அன்பால் ஆகும்;
சீருயர் செழுமை சேர்த்துச்
.. சிறப்பினை அளிப்ப தன்பே (5)
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. 76
நல்லவை நடப்ப தற்கே
.. நம்மகத் தன்பாம் என்றே
சொல்லுவர் அறியார், அன்பால்
.. தொடர்பகை தீரா தென்பார்;
அல்லவை அற்றும் வாழ
.. அன்பினும் உயர்ந்த தேது?
இல்லைகாண், நலமோ தீதோ
.. இணையிலாத் துணையே அன்பு (6)
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். 77
என்பிலா உயிர்கள் வெய்யில்
.. எழுகையில் சுருண்டு மாளும்
வன்கனல் பொறுத்து டம்பை
.. வடிவுடை என்பே காக்கும்
அன்பதும் என்பைப் போன்றே
.. அஃதிலை என்னும் போதில்
துன்பமே நம்மைச் சூழும்,
.. தொலைந்திடும் இன்பம் யாவும் (7)
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. 78
கன்னலும் கனிகளும் பூவும்
.. கரைதொடும் ஆற்றின் நீரால்;
வன்நில மரங்கள் காயும்,
.. வளரிலைத் துளிர்ப்பங் கேது?
இன்பமே நிலவி என்றும்
.. இனித்திடும் வாழ்வைக் காண
அன்புடை நெஞ்சே வேண்டும்
.. அதுதரும் வளமை யாவும் (8)
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. 79
வில்லினை புருவம் ஒக்கும்
.. வியத்தகு தேகத் தோற்றம்
சொல்லினில் சுவையின் தோய்வு
.. சொல்லொனாத் தரங்கள் யாவும்
நல்லதாய் புறத்தில் கொண்ட
.. நயமெலாம் இருந்த போதும்
இல்லைஅன் பகத்தில் என்றால்
.. ஏதுமே இலையென் றாகும் (9)
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. 80
அன்பதே உயிரை ஒக்கும்,
.. அஃதிலார் உலகில் ஏனோ?
என்பொடு தோலும் சேர்ந்த
.. இயங்கிடாப் பிணத்தைப் போன்று
வன்மையே வழக்க மாக
.. வாழ்ந்திடல் வாழ்க்கை ஆமோ?
இன்பமே வாழ்வாய்க் காண
.. இணையிலா அன்பே தேவை (10)
