இது உள்ளுக்குள் நடந்த உட்பூசல்,
கல்லுக்கும் கல்லுக்கும் நடந்த
கருத்து வேறுபாடு!-
விளைந்ததோ ஒரு
இயற்கை மாறுபாடு!
இது மண்ணுக்குள் நடந்த
அடுக்குப்போராட்டம்!- அதன்
தொடக்கமாய் விசை நீரோட்டம்!
நீரும் காற்றும் நிலத்துடன்
நடத்திய பூதப்போராட்டம்!- இதில்
மனித உயிர் ஆட்டம்!
துளிகளுக்குள் இப்படி ஒரு துணிச்சலா?
கண நேரத்தில் பிணங்கள் பிணங்கள்!
கடலுக்குள்ளிருந்து நீ கரையில் வந்ததெதற்கு? -
குடைக்குள்ளிருந்த எங்களை நனைத்ததெதற்கு?
காலால் உன்னை தீண்டியவர்களை
காலனாய் கவர்ந்தாயோ?
தாயாய் உன்னை தொழுதோரின்
தாழியாய் மாறிவிட்டாயே?
சிலை கொண்ட கடலைத்தான்
பார்த்திருக்கிறோம் -
இன்று அலை கொண்ட
கடலை பார்த்தோம் -
உன் முகத்தில் கறையை பார்த்தோம்!
தினமும் சூரியனை விழுங்கிய நீ
இன்று யேன் வித்தியாசமாய்
மனிதர்களை விழுங்கினாய்?
மாற்று உணவு வேண்டும் என்றா?
மணலை எண்ணும் நீயேன்
மனிதர்களை எண்ண ஆரம்பித்தாய்?
உயிரை திருப்பினாய்!;
உடமையை திருப்பினாய்!;
முடிந்தால் திருப்பிவிடு
'அந்த' ஒரு நிமிட உலகத்தை!
