skip to content

ஆண்டவனும் அரசும்

ஆண்டவனும் அரசும்

ஆண்டவனும் அரசென்னும் அமைப்பும் ஒன்றோ?
.. அறிவதற்கு முயன்றிடுவோம்; ஆதி அற்றுக்
காண்போர்க்குப் புதிராகிக் காலம் தொட்டுக்
.. கனவுகளுக் கப்பாலிவ் விரண்டும் நிற்கும்;
வேண்டிடுவோர் உண்டிதற்கோர் உருவம் ஏது?
.. விழைவோர்கள் தம்பொருட்டாய் உருவைத் தந்தார்;
ஆண்டியென அமைச்சனென அமைந்தே தத்தம்
.. அதிகாரம் அதைப்பெருக்க அனைத்தும் செய்தார் (1)

தலைமையது தம்முறையில் தழைக்கும் வண்ணம்
.. தம்வழியோர் மட்டுமதன் தலைவர் என்றார்;
பலகாலம் தம்மகற்கே பலனைத் தந்துப்
.. பயனெல்லாம் தங்குடும்பம் பழக விட்டார்;
சிலகாலம் பொதுவென்றாய்த் திகழ்ந்த போதும்
.. சிக்கலது நடைமுறையில் தீர வில்லை;
கலகங்கள் பலவற்றைக் கடந்து வந்தும்
.. காயங்கள் நம்பிணியைக் கழுவ வில்லை (2)

உண்டென்பார் இலையென்பார்; உள்ஏன் ஐயம்?
.. உளதென்று செயலொன்றே உரக்கப் பேசும்;
விண்டியம்ப இயலாத வெள்ளை நெஞ்ச
.. வெளிதன்னில் வாழ்பவையே இரண்டும், இன்றும்;
கண்டுதவ காவலர்யேன் கதவில் வேண்டும்?
.. கையூட்டாய் பொருள்நமக்கேன் கரத்தில் வேண்டும்?
மொண்டுதவும் முறைதன்னில் மாற்றம் வேண்டும்,
.. முழுநதியில் மூழ்கிடுவோம், முத்தும் சேர்ப்போம். (3)

ஒருபாலார் அதன்வண்ணம் சிவப்பே என்றார்,
.. ஒவ்வொன்றின் உடலோடும் உதிரம் என்பார்;
கருப்பென்பார் ஒருசாறார், கண்கள் காணாக்
.. கருத்தாகி நிற்கின்ற கனவே என்பார்;
நெருப்பென்பார் வேறொருவர்; நெருடும் பொய்யின்
.. நிழலதையும் எரிக்கின்ற நிஜமாய்க் காண்பார்;
திருப்பங்கள் வரும்போகும்; செய்யும் என்ற
.. சிந்தைகொண்ட நம்பிக்கை தேவை வாழ்வில் (4)

நின்றழிக்கும் தெய்வத்தின் நிலையே நன்கு;
.. நிகரில்லா ஊழலுளம் கொண்டுத் தேர்தல்
நின்றழிக்கும் அரசாங்கம் தேவை தானா?
.. நினைத்திடுவீர், நினைத்தலொன்றே நிகழ்த்தும் நன்மை;
வென்றுபல வளர்ச்சிகளை விதைக்க வேண்டும்;
.. விரலிருத்தும் குறியொன்றே வெற்றிப் பாதை;
தொன்றுதொட்டுத் தொடருமிந்தத் தூய எண்ணம்
.. தொலைக்காது மனிதஇனம் தொடர்தல் நன்றே (5)

குறிப்பு: இக்கவிதை, யுகமாயினி 2010, டிசம்பர் மாத இதழில் வெளியானது.

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.