skip to content

நீடு வாழ்வார்

நீடு வாழ்வார்

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் - குறள் 6

அனற்பொங்கு தீயின் அழல்தீண்டும் பஞ்சும்
.. அழிபட்டு போகும் அதுபோல்
மனஞ்செல்லும் போக்கில் மதிசெல்லு மாயின்
.. மறைந்தங்கு ஞானம் மடியும்;
கனற்கொண்ட தீயின் சுடரைந்து போரின்
.. களம்நிற்கும் காலன் கரம்போல்
மனம்வென்று நல்ல மதிகொல்லும் ஐந்து
.. மதயானை யொத்த பொறியே! (1)

மணல்கொண்ட ஆற்றின் மடிசேர்ந்த நீருள்
.. மறைந்தேகும் போதும் மணலுள்
நிணமாகி நின்று நிறமாறி என்றும்
.. நிலங்காணும் நீரின் நிலைபோல்
உணர்வாகி ஆசை உடலெங்கும் ஊறும்,
.. உளங்காக்கும் ஆழ்ந்த உறவால்
குணமாகி மெய்யில் குடியேறி நின்று
.. குறையாவும் நெஞ்சிற் கொளுமே! (2)

விதமொன்று சொல்லும், விடங்கொண்ட சொல்லை
.. விடையென்னும், பின்னும் வினவும்,
மதிசொன்ன சொல்லை மதியாது நெஞ்சின்
.. மதங்கொண்டு வேறு மொழியும்,
நிதமொன்று பேசும், நிலையின்றி மாறும்,
.. நினைவின்றி மெய்யும் நெகிழும்,
புதிதென்று கூறும், புதிராக ஏய்க்கும்,
.. புறங்கூறும் வாயும் புதிரே! (3)

அழகென்ற மாயை அதிலார்ந்த நெஞ்சம்
.. அறிகின்ற யாவும் அடைய
விழைகின்ற நோக்கில் விழிகொண்டு நோக்கும்
.. விளையாட்டின் விந்தை விரியும்!
மொழியின்றி ஒன்றை மொழிகின்ற வேளை
.. முறையற்ற சொல்லின் முடிவாய்
விழிகொண்டு செல்லும் விடைகேள்வி யாவும்
.. விழல்கண்ட நீரின் விளைவே! (4)

தறிகெட்டு நிற்கும் புலனைந்தில் நாசி
.. தலையாய தென்ப தறிக!
குறியிட்டு யாரும் குறிக்காத போதும்
.. கொளும்வாசம் யாவும் அறியும்!
முறையற்ற வேளை முதுகொட்டி நின்று
.. முனைந்தாசை மூட்டி முடிவாய்
வெறியூட்டி நம்மில் விளையாடல் காட்டும்,
.. விளைவாகச் சேரும் வினையே! (5)

ஒலியோடி எங்கும் உறவாடி ஓசை
.. உரையாகின் காதும் உணரும்!
மலிவான பேச்சை மதிசேர்க்க வீணில்
.. மடல்நீட்டி மன்றில் அமையும்!
சலியாது கேட்கும் தரந்தாழ்ந்த பேச்சில்
.. தரமான நேரம் சரியும்!
இலையாசை ஆயின் இவைமூட என்னில்
.. இமையாக ஏதும் இலையே! (6)

செவிவாய்கண் மூக்கு திடதேகம் ஐந்தும்
.. தெளிவற்ற நோக்கில் திரியும்;
குவியாத ஐந்தும் குறைகாணும் நெஞ்சும்
.. குறையுற்ற வாழ்வைத் தருமே!
புவிவாழ்வில் ஐந்து புலன்தம்மை காப்பின்
.. புகழ்வாழ்வு நீளும் எனவாய்க்
கவிதேவன் ஐயன் குறள்காட்டும் இன்பக்
.. கவின்வாழ்வுக் கொள்கை இனிதே! (7)

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.