skip to content

செத்துப்போன செல்லராசா!

செத்துப்போன செல்லராசா!
(ஒரு தாயின் ஒப்பாரி...)

வண்டியிலே போன புள்ளே
வாசலிலே கிடக்குறியே!
குண்டுபட்டு வாழமரம்
கொலசாஞ்சி நிக்குறியே!

சுட்டவன என்னபண்ணே?
சொல்லுதியே சீக்கிரமா!
கட்டையிலே போறமுன்னே
காரணந்தான் சொல்லுதியே!

எத்தனநாள் கொடிபிடிச்சே!
எவெனுக்கோ கொட புடிச்சே!
செத்தப்புறம் தூக்கிவர
சீவனிங்க யாருமில்லே!

பச்சகொடி நீதூக்க
பக்கத்திலே போனவனோ
எச்சநாய பாக்குரதா
இப்ப உன்ன பாக்குரானே!

சோப்புகொடி நீதூக்க
தொத்தியுன்ன வந்தவனோ
காப்பிகட முன்னாடி
காணாம நின்னுருக்கான்!

கருப்புகொடி நீதூக்க
காலாட்டி வந்தவனோ
செருப்ப போல உன்னபாக்கான்!
செஞ்சதையும் மறந்துபுட்டான்!

மக்க தூர செத்ததக்கே
மாசமெல்லாம் விரதமுன்னான்!
பக்கத்துலே நீகிடக்கே,
பாக்க இங்கே நாதியில்லே!

அத்துப்போன உலகமடா!
ஆரும்நமக் கில்லயிங்கே!
செத்துப்போன செல்லராசா!
சீக்கிரம்நான் வந்துருவேன்!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.