skip to content

"அபியும் நானும்", ஒரு கருத்தாய்வு விமர்சனம்

மீண்டும் பிரகாஷ்ராஜ் மற்றும் ராதாமோகன் இருவரும் இணைந்து, தந்தை-மகள் உறவை மையமாக வைத்து உருவாக்கிய படம். தந்தை-மகள் உறவை அலசி ஆராயும் ஒரு முயற்சி.

ஒரு 25 வருட காலத்தை 2 மணியில் அடைக்க நினைத்தது, ரசிகர்களுக்கு ஏமாற்றமாய் இருக்கும், ஏன் எனில், படத்தின் முதல் பாகம், 25 வருட காலத்தில் நடந்த பல நிகழ்வுகளின் கோர்வையாய் மற்றுமே தெரிகிறது. வித்தியாசப்பட்ட பல நிகழ்வுகளை, வாழ்க்கையின் ஒரு கலைடாஸ்கோப்பாய் காட்ட எத்தனித்தாலும், நிகழ்வுகளின் இடையே கதையின் தொடர்ச்சி சிறிது தொங்கலாகவே தெரிகிறது. இந்த குறையை நாம் உணராவண்ணம், நிகழ்வுகளின் ஒவ்வொரு காட்சியும் நம்மை நெகிழ செய்கின்றன. இந்த நெகிழ்ச்சியில் தோய்ந்த நாம், ஒரு காட்சியிலிருந்து, மற்றொன்றுக்கு நம்மை நாமே பிணைத்துக்கொள்கிறோம் என்றே சொல்லவேண்டும்.

படத்தின் முதல் பாகம் அனைத்தும், பிரகாஷ்ராஜின் நடிப்பு வழக்கம் போலவே நன்கு பரிமளிக்கிறது. இயல்பான நடிப்பினால் கதைக்கு உயிரையும், ரசிகர்களிடம் அடுத்த காட்சிகள் பற்றிய எதிர்பார்ப்பையும் உருவாக்குகிறார். குறிப்பாக, மனைவி சுடு நீர் கொட்டிகொள்ளும் காட்சியில், ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் நிகழ்ச்சியை தத்ரூபமாய் நம் கண் முன் கொண்டுவருகிறார். மகளிடம் காட்டும் பாசத்தின் யதார்த்தத்தை அருமையாக சித்தரித்துள்ளார்.

இரண்டாவது பாகத்தில் பிரகாஷ்ராஜின் நடிப்பு சிறிது மிகையாகவே தெரிகிறது. முதற்பகுதியில் வரும் சினிமாத்தனம் இல்லாத காட்சிக்கோர்வை ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரண்டாம் பகுதியில் வரும் சினிமாத்தன காட்சிகள் உடைக்கின்றன. குறிப்பாக மாப்பிள்ளை சர்தார்ஜியாய் இருக்கவேண்டிய காரணம் என்ன? கதையின் போக்குக்கு இந்த சர்தார்ஜி தேவையா என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. அப்படியே இருந்தாலும், அந்த சர்தார்ஜி, பிரதமருடன் பேசுவது போன்ற காட்சி தேவையற்ற ஒன்றாகவே உள்ளது. இதை நாம் சகித்துக்கொள்ள நம்மை நாமே தயாரித்துக்கொள்ளும் வேளையில் விஜய்காந்த் படம் போன்று சர்தார்ஜி பாதுகாக்கும் அவரது 'குடும்பம்' பற்றிய விளக்கம் வேறு.

திரிஷா, பிரகாஷ்ராஜின் மகளாக 'நடிக்கிறாராம்'. அபி போன்ற பாத்திரத்திற்கு திரிஷா பொருத்தமில்லை. ஒரு வளரும் நடிகைக்கு இந்த பாத்திரத்தை கொடுக்கப்பட்டிருந்தால், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் குறைந்திருக்கும்; வளரும் நடிகைக்கும் இந்த பாத்திரம் ஒரு ஏணியாகவும் இருந்திருக்கும்.

மனோ பாலா வரும் காட்சிகள் மிகவும் கலகலப்பாய் உள்ளன. காமெடியில் மிகக்குறைந்த ஸ்கிரிப்டில் இந்த அளவு ரசிகர்களை கவர்வது என்பது ஒரு புதிய முயற்சி. மனோ பாலா மிகப்பொருத்தமாக செய்துள்ளார். முடிவில் மனோ பாலாவும் பிரகாஷ்ராஜும் ஏன் இப்படி ஒருவரை ஒருவர் கவிழ்த்துக்கொள்கிறார்கள் என்பதை ஒரு சிறிய காட்சியின் மூலம் சொல்ல முற்பட்டு இருந்தால், மனோ பாலா பாத்திரத்துக்கு மேலும் மெருகூட்ட வைத்திருக்கும்.

ஐஸ்வர்யா தனக்கு கொடுக்கப்பட்ட பகுதியை மிக அழகாக செய்துள்ளார். தந்தையின் மிகையான அன்பை வெளிபடுத்தும் போது, அதற்கு இணையான யதார்த்தத்தை ஐஸ்வர்யா பாத்திரத்தின் மூலம் இயக்குனர் வெளிபடுத்த யத்தனித்து இருக்கலாம். ஐஸ்வர்யாவை முழுமையாக பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.

பிச்சைக்காரனாகவும் அபியின் 'மகனாகவும்' நடித்தவர் மிக அழகாக செய்துள்ளார். அருமையான நடிப்பினால், இந்த படத்தில், பிரகாஷ்ராஜுக்கு நடிப்பிற்க்கு ஈடு கொடுக்கும் ஒரே நடிகராக திகழ்கிறார். குறிப்பாக "உங்கள் பெண் ஒரு பிச்சைக்காரனை கொண்டுவந்த போது அவளை நம்பி அந்த பிச்சைக்காரனை ஏற்று கொண்டீர்கள்; ஆனால் அவளே தனக்கு துணைவனை கொண்டுவந்தபோது மகளை நம்ப மறுக்கிறீர்களே?" என கேட்கும் காட்சியில் மிக அழகாய் செய்துள்ளார். இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

கதை தேர்வு மற்றும் படம் எடுக்கும் துணிவு: 15/25
நடிப்பு (பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா, திரிஷா, மனோபாலா, பிச்சைக்காரர்): 4+2+0+2+3= 11/25
இயக்கம்: 12/25
இசை: 1/25

மொத்தத்தில்: 39/100

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.