skip to content

தொலைக்காட்சி விளம்பரங்கள்: ஒரு ஆய்வு

எந்தவொரு கருத்தும் மக்களை சேர்ந்தடைய வேண்டுமெனின் அதற்கு ஒரு ஊடகம் தேவைப்படுகிறது. செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் இன்டெர்னெட் போன்ற ஊடகங்களே தற்போது கருத்துக்களை பரிமாற்றிக்கொள்ள பயன்படுகின்றன. தொலைக்காட்சி வந்த நாள் முதலே அதன் அபரிமிதமான வீச்சை விளம்பரங்கள் பயன்படுத்திக்கொள்ள தொடங்கிவிட்டன. மிகக்குறைந்த செலவில் மிக அதிகமான மக்களுடன் தொடர்புகொள்ள தொலைக்காட்சியை தவிர மற்ற எந்த ஊடகத்தாலும் செய்ய இயலாது.

விளம்பரத்தின் தொண்மை:

தன் பொருள் பிறர்பொருள்களை விட உயரியது என்ற கருத்தை, வாங்குவோர் மனதில் தோன்றச்செய்ய இந்த விளம்பர உக்திகள் பயன்படுத்தப்படுகின்றன. விளம்பரம் என்ற கருத்து பண்டைகாலம் தொட்டே நிலவிவருகிறது. அன்றைய நாட்களில் சந்தைகளில் விற்கப்படும் பொருள்களின் பெயர்களை கொடிகளில் எழுதி தத்தம் கடைகளின் முன்னே பறக்கவிட்டதாக சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறது. தெருவில் வந்து மோர் விற்கும் மோர்க்காரி கூட தன்னை பிற மோர்க்காரிகளிடமிருந்து தனிப்படுத்த, தான் கூவும் முறையை வித்தியாசப்படுத்திப்பின் அதையே தன்னுடைய தனித்துவமாக (Branding) மாற்றிக்கொள்கிறாள்.

தொலைக்காட்சி விளம்பரங்களின் வகைகள்:

தொலைக்காட்சி விளம்பரங்களை, அவை எடுக்கப்படும் விதம், கூறப்படும் முறை, சென்று சேரும் நுகர்வோரின் ரசிப்புத்தன்மை மற்றும் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் போன்ற பல்வேறு கூறுகளால் வகைப்படுத்தலாம். உதாரணத்துக்கு, ஒரு கேமரா விளம்பரத்துக்கும் ஒரு துணிசோப்பு விளம்பரத்துக்கும் எதிர்பார்க்கப்படும் நுகர்வோரின் நோக்கும் அந்த பொருள் பற்றிய அறிவும் வெவ்வேறு மன நிலைகளை சார்ந்ததாகும். எனவே விளம்பரப்படுத்தப்படும் பொருளையொட்டியும், அந்தப்பொருளை நுகர்வோரின் நிலையையும் பொருத்தும், ஒரு விளம்பரத்திற்கான வடிவம் மற்றும் தொழில் நுட்பம் எவை யாவும் முடிவு செய்யப்படுகின்றன.

பொதுவாக கூறப்படும் விதம் மற்றும் அதில் பயன்படுத்திய தொழில் நுட்பம் என்ற இரு கூறுகளை கொண்டு விளம்பரங்களை இரு வகைகளாக வகைப்படுத்தலாம்.

கலாச்சார தூதுவர்கள்:

வரலாற்றின் ஒவ்வொறு காலகட்டத்திலும், ஏதாவது ஒரு ஊடகம், அக்காலத்தின் கலாச்சாரத்தை பேணிப்பாதுகாத்து, வரும் சந்ததியினருக்கு பரிசாக அளிக்கிறது. சங்க கால தமிழ்ப்பாடல்களும் பல நூறு கல்வெட்டுக்களும் இதற்கு சான்று பகர்கின்றன. அந்த வகையில், இக்கால திரை விளம்பரங்களும், இன்றைய கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளன.

விளம்பரங்களின் வீச்சு:

சென்ற எண்பதுகளில் விவித பாரதியில் வந்த "ஏரோஸ்டார் எல்மெட்" விளம்பரம் இன்றும் என் நினைவில் உள்ளது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குரல்களில், வெறும் "எரோஸ்டார் எல்மெட்" என்ற இரு வார்த்தைகளை ஒரு இருபது முறை இருவரும் மாறி மாறி சொல்வதாக அமைந்தது அது. இவ்விளம்பரத்தில் ஒரு பெரிய ஈர்ப்பினை காண இயலாது எனினும், இருபது வருட காலமாயினும் இந்த விளம்பரத்தை மறக்க இயலவில்லை.

விளம்பரங்களின் வளர்ச்சி:

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில், விளம்பரங்கள், குறிப்பாக டிவி விளம்பரங்கள், மிக வளர்ச்சி அடைந்துள்ளன. இந்த வளர்ச்சியை இரு விதமாக வகைப்படுத்தலாம்; கருத்து வளர்ச்சி மற்றும், தொழில் நுட்ப வளர்ச்சி.

கருத்து வளர்ச்சி என்பது, கூறப்படும் பொருளை, வெறும் பொருள் பற்றி கூறாமல், கவிதைத்துவமாக அல்லது மெல்லிய நகைச்சுவையின் ஊடே விளக்குவதாகும். கூற விழையும் பொருளை, கிராபிக்ஸ் எனப்படும் தொழில் நுட்ப உதவியுடன் கற்பனையை கலந்து சொல்வது இரண்டாம் வகையாகும்.

சில விளம்பரங்கள்- ஒரு அலசல்:

விளம்பரங்களில் பல, சொல்கின்ற பொருளை, தரமான முறையிலும், தனித்துவமாகவும் கூறுகின்றன. குறிப்பாக, ஏர்டெல் நிறுவன விளம்பரங்கள் அனைத்தும் சமுதாய சிந்தனையோடு தயாரிக்கபட்டவையாகவே உள்ளன.

அண்மையில் ஒளிவரும் ஏர்டெல் விளம்பரத்தில், ஒரு மகன், தன் தந்தையை விட்டு நீங்கி படிக்க செல்கையில், தன்னுடைய சிறிய வயதில், திருவிழாவில் தவறி விடாமல் இருக்க, தந்தையின் கையோடு கட்டிகொண்ட கயிரை விட்டு செல்கிறான். தந்தையை விட்டு அகலும் தருணத்தில், அந்த கயிறாக, ஏர்டெல் கைப்பேசியை எண்ணுகின்றான். சற்றும் விரசம் இல்லாமல், ஒரு மென்மையான மன நெகிழ்ச்சியை ஊட்டும் விதமாய் அமைந்துள்ளது இந்த அருமையான விளம்பரம்.

மிகவும் பிரபலம் ஆன அட்ச் நாய்க்குட்டி, நமக்கு தெரிந்ததே. இந்த விளம்பரத்தில், ஒவ்வொரு காட்சியும், வார்த்தைகளாக தங்களை பரிணாமித்து, மிக மகிழ்ச்சியான மன நிலையை நமக்கு அளிக்கிறது.

பட்டு புடவை விளம்பரங்கள் ஒன்றை ஒன்று விஞ்சும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. அண்மையில் வெளியிடப்பட்ட போத்தீஸின் பரம்பரா பட்டு விளம்பரம் இதற்கு சான்றாகும். ஒரு இருபது வினாடிகளில் மூன்று லொகேஷனில் மிகத்தரம் வாய்ந்த இசையுடன், முன்னனி இசை கலைஞரை வைத்து எடுக்கப்பட்ட விதம் பாராட்டுக்குரியதாகும்.

ரொட்டி சுடும் தாயின் கை சுட்டுவிடுவதை கண்ட சிறுமகன், தெருவில் கிடக்கும் வயர் கம்பியை வளைத்து அதை, ரொட்டி எடுக்க பயன்படுத்த தன் தாயிடம் கொடுக்கும் பினோலக்ஸ் கேபிள் விளம்பரம் நம் கண்களில் கண்ணீரை வர வைக்கிறது.

ஒரு சிறு பெண்ணும் சிறு பையனும் சேற்றில் விளையாடியபின் சிரித்தபடி சொல்லும் "நல்ல கறை" விளம்பரம் ரசிக்கத்தக்கது.

நகைச்சுவை விளம்பரங்கள் பல நம்மை மகிழ்விக்கின்றன. குறிப்பாக, ஒரு குலாப் ஜாமுன் விளம்பரத்தில் வரும் சிறுவன் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவதாக வருவதாக கூறி, பின் அந்த பந்தயத்தில் வெறும் இருவரே ஒடியதாக கூறுவது.

விளம்பரங்களில் விரசம்:

மிகப்பலரை கவர வேண்டி விரசத்தை பயன்படுத்தும் சில விளம்பரங்கள் எதிர்பார்த்த வெற்றியை தருவதில்லை. விரசம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.

மூர்த்தி சிறிது; கீர்த்தி பெரிது

"அணுவைத்துளைத் தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்தக் குறள்" என்பதற்கு இணங்க சில வினாடித்துளிகளில் விந்தை ஜாலங்களை புரியும் இந்த ஊடக விளம்பரங்கள், நம் வாழ்வின் வெளிப்பாடுகளாகவும், நம்மை பிரதிபளிக்கும் கண்ணாடியாகவும் விளங்குகின்றன.

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.