skip to content

பைந்தமிழ்ப் பூவனம்

பைந்தமிழ்ப் பூவனம்

ஊதுமிதழ் நாட்டியத்தில் ஒலிகொடுக்கும் வேய்ங்குழல்!
போதிலமர் வண்டினங்கள் புகுந்தருந்தும் தேன்துளி!
ஆதிமுதல் மானுடத்தின் அகமுரைக்கும் சாதனம்!
மூதுலகின் மொழிவகையில் முகிழ்த்தெழுந்த பூந்தமிழ்!

பாலமன்ன காலிணைக்கும் பைந்தமிழின் பாவளம்,
சீலமுள்ள பாவலர்கள் சேர்த்துவைக்கும் சீதனம்!
ஞாலமுள்ள நாள்வரைக்கும் நாநடத்தும் நாட்டியம்!
காலவெள்ளம் கண்டெடுத்த கானகத்துப் பூவனம்!

பூவினங்கள் காய்கனிகள் போதிலுறை தூய்மது
காவியங்கள் காப்பியங்கள் கவிதைபாடல் ஆனவே!
நாவிலின்பம் நெஞ்சிலின்பம் நாம்நினைக்கும் போதெலாம்
மேவுமின்பம் யாவுமீயும் மேன்மைகொண்ட தீந்தமிழ்!

கம்பனென்ன கீரனென்ன கால்கடந்த வள்ளுவம்
அம்மைசொன்ன காரிகையோ டர்த்தமுள்ள மேகலை
செம்மைகொண்ட பண்ணிசையால் செய்புகழும் யாவுமே
எம்பியெம்பி வான்நிமிர்ந்த ஏற்றமுடை கானகம்!

ஆத்தியென்னும் பேரெடுத்தங் காடிநிற்கும் பூங்கொடி!
சாத்திரத்தின் சாற்றையுடல் தாங்கிநிற்கும் நாலடி!
பூத்திருக்கும் சோலையெங்கும் போதவிழ்க்கும் நல்வழி!
யாத்திருக்கும் இலக்கியங்கள் யாவுமிங்கு சொல்வழி!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.