செவ்வாய் செல்வோம்
கிரேக்க புராணங்களில் ஆண் செவ்வாயிலிருந்து வந்ததாகவும், பெண் வீனஸ் யிலிருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த புராணக்கூற்று உண்மையா பொய்யா என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இன்று மனிதன் செவ்வாய் செல்வதற்கான எல்லா ஆயத்தங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
செவ்வாய் கிரகம், சூரியனை சுற்றி வரும் நான்காவது கிரகமாக உள்ளது. 1964 இல் நிலவை தொட்ட மனிதனின் ஆசை அடங்குவதாக இல்லை; அந்த வெற்றியை ஒரு படிக்கட்டாகவே எடுத்துக்கொண்டு மேலும் தன் வெற்றியை விரிவாக்க நினைத்தான். அந்த எண்ணத்தின் விளைவு தான் செவ்வாய் அடைய அவன் கடந்த 32 ஆண்டுகளாக முயன்ற முயற்சிகள்.
நிலவு போதாது..
1976 இல், நாஸா (NASA - அமெரிக்க விண்வெளி மற்றும் வானூர்திவியல் நிறுவனம்), வைக்கிங் எனும் ஆளில்லா விண்வெளி கலத்தை இருமுறை செவ்வாய் கிரகத்தில் இறக்கி சாதனை புரிந்தது. சிறிது கால இடைவெளிக்கு பிறகு, மீண்டும், 1997 இல் பாத் பைன்டர் எனும் மற்றொரு கலத்தை இறக்கி வெற்றி கண்டது. இவ்விரு பயணத்தின் போதும், கலங்களை செவ்வாய் கிரகத்தில் இறக்கினாலும், இவ்விரு பயணங்களும் அடுத்த பயணத்துக்கு மிகவும் படிப்பினையாகவே விளங்கின.
செவ்வாய் ஆராய்ச்சி ஊர்தி முயற்சி:
நாஸாவின் "செவ்வாய் ஆராய்ச்சி ஊர்தி முயற்சி (Mars Exploration Rover (MER) Mission)" என்பது, இயந்திர மனிதர்களை கொண்டு செவ்வாய் தரைப்பரப்பு மற்றும் செவ்வாய் கிரகத்தின் புவியியல், இவை இரண்டையும் ஆராய்ச்சி செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு நீண்ட கால திட்டமாகும். இது 2003 இல் தொடங்கப்பட்டு, பின் தொடரப்படும், தொடர்முயற்சியாகும்.
இத்திட்டத்தின் கீழ் செவ்வாய் கிரகத்தின் பல்வேறுபட்ட கல் மற்றும் மண் இவைகளை ஆராய்ந்து, அதன் மூலம், நீர் இருந்ததற்கான அறிகுறிகளை ஆராய்ந்து தெளிவதாகும்.
இத்திட்டத்தை நாஸாவின் "ஜெட் சுழற்சி ஆராய்ச்சி மையம்", வடிவமைத்து, நிறுவி பின் நிறுவிய தானியங்கி விண் ஊர்திகளை புவியிலிருந்து கட்டுபடுத்துகிறது.
ஆரம்பத்தில், இந்த தானியங்கி விண் ஊர்திகளை வடிவமைத்து, புவியிலிருந்து ஏவிப்பின் செவ்வாயில் இறக்கி அவைகளை 9 மாத காலத்துக்கு இயக்க சுமார் 820 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என தீர்மானிக்கப்பட்டது.
இம்முயற்சியின் இலக்குகள்:
இம்முயற்சியின் இலக்குகளாக கீழ்கண்டவைகளே கருதப்படுகின்றன:
- செவ்வாயில் நீர் இருந்ததற்கான அறிகுறிகளை காண நீரின் இயல்பான நிகழ்வுகளான ஆவியாதல், பதங்கமாதல் போன்றவைகளை ஆராய்தல்
- செவ்வாய் மண்ணில் தாதுப்பொருள்களின் சதவீதத்தை ஆராய்தல்
- செவ்வாய் தரைப்பரப்பின் மாற்றங்களின் காரணங்களான நீரோட்டம், காற்றினால் அரிப்பு, புவி நடுக்கம் மற்றும் எரிமலைகள் பற்றி தீர்மாணித்தல்
- செவ்வாயில் பயன்படுத்த தயாரிக்கப்பட்ட பல கருவிகளை மீண்டும் தரம் பார்த்தல்
- இரும்பு கலந்த தாதுப்பொருள்களை தேடும் முயற்சி
வரும் இருபது ஆண்டுகளில், நாஸா செவ்வாய் கிரக்கத்தில் உயிர் இருக்க சாத்தியங்களை ஆராய பல பயணங்களையும் பல திட்டங்களையும் தன் வசம் வைத்துள்ளது.
ஸ்பிரிட் மற்றும் அபர்சூனிடி தானியங்கி விண் ஊர்திகள் (ரோபாட்)
2003 ஆம் ஆண்டு ஸ்பிரிட் மற்றும் அபர்சூனிடி என பெயரிடப்பட்ட இரு தானியங்கி விண் ஊர்திகள் செவ்வாய் கிரகத்தில் இறக்கி விடப்பட்டன. இவ்விரண்டு ஊர்திகளும் பூமியிலிருந்து கட்டுப்படுத்தப்படும் தானியங்கி விண் ஊர்திகள் ஆகும்.
2004 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், ஸ்பிரிட் கலத்திலிருந்து வரும் சமிங்ஜைகளை புவி நிலையம் பெறத் தவறினாலும் ஒரு மாத்துக்குப்பின் மீண்டும் தொடர்பை பெற்று செவ்வாயில் நீர் இருந்ததற்கான அறிகுறிகளை அறிவித்தது. 2004 செப்டெம்பர் மாதம், நாஸா இவ்விரு கலங்களின் பயணத்தை மீண்டும் 6 மாதத்திற்கு நீட்டித்தது.
அண்மையில், 2008, ஜனவரி மூன்றாம் தேதி, இவ்விரு கலங்களும் தங்கள் 5 வருட பயணத்தை பூர்த்தி செய்தன. இந்த 5 வருடத்தில் இவ்விரு கலங்களும் சேர்ந்து 250,000 புகைப்படங்களை அனுப்பியுள்ளன. இதுவரை, சுமார் 21 கிலோ மீட்டர் தூரம் இந்த கலங்கள் பயணித்துள்ளன.
அண்மையில், நாஸா, இவ்விரு கலங்களின் பயணத்தை மீண்டும் 1 வருடத்துக்கு நீட்டித்தது.
இவ்விரு கலங்களிடமிருந்து இதுவரை கிடைத்த அரிய அறிவியல் விபரங்களை கணக்கில் கொண்டு, இரு விண்மீண்களுக்கு இக்கலங்களின் பெயர்களை சூட்டப்பட்டு உள்ளன.
பூமியிலிருந்து ஏறக்குறைய 186 ஒளிநொடிகள் தூரத்தில் இந்த கிரகம் இருந்தாலும், இதுவரை கிடைத்த அரிய தகவல்கள், இக்கிரகத்தை ஒரு நாள் மனிதன் நெருங்க உதவும் என்பதில் ஐயம் இல்லை.
