skip to content

கற்பனைக் கடல்!

கற்பனைக் கடல்!

மலையூர் தனில்நான் வசிப்ப தனாலே
அலைகடல் என்பதை அறியா திருந்தேன்!
தோழனைத் தேடித் துறைமுகம் வரவே
ஆழியின் அழகை அறிய விழைந்தேன்!
உரைக்க வியலா ஊமை நண்பனென்
கரங்கள் பற்றிடக் கால்கள் நடந்தன!
சூரியன் வெப்பைத் தோற்கச் செய்யும்
வீரியம் கொண்டு வீசிடும் காற்று!
சில்லெனும் காற்றின் சீதம் ஓங்க
மெல்லிய உயிர்ப்பை மேனி கண்டது! (10)
சொற்கள் பகலாச் சுகமென நண்பன்
பற்றிய கரத்தால் பகல்வ துணர்ந்தேன்!
மண்ணும் காதல் மறந்துளம் இறுகித்
தன்னுற வழித்துத் தனிமணல் துகளாய்ப்
பிரிந்து கிடக்கும் பெருங்கடல் துறையின்
உரிப் பொருளாக இரங்கல் ஏனோ?
ஊற்றெது மில்லா உலர்நிலை யாலே
ஆற்றினின் வேறென அறிந்ததென் பாதம்!
ஏதோ ரகசியம் என்னிடம் சொல்லப்
பாதங் கவ்விப் பார்த்தது மணலும்! (20)
தன்னை மீண்டும் சாகரம் சேர்க்கச்
சொன்னதாய்க் கைகளால் சொல்லிடும் நண்பன்!
வெப்பைத் தணித்து விரையுங் காற்றால்
உப்பின் மணத்தை உணர்ந்ததென் நாசி!
ஓவெனும் இரைச்சல்! உடையும் போக்கில்
தாவிடும் நீரதன் தற்கொலைக் கதறல்!
கீறும் நகத்தின் கிறுக்கல் ஓசை
சீறும் ஒலியாய்ச் செவிப்பறை அறைந்து
போகும் போக்கில் பூநீர் தெளித்துச்
சாகும் முறையில் சத்தம் எங்கும்! (30)
கற்றூண் இழுக்கும் களிறதன் பிளிறல்!
முற்றிய கழையெரி மூங்கிற் காடு!
ஊது குழல்கள் ஒருங்கொரு கோடி
மாதர் களூதிடும் மாபெரும் ஓசை!
ஆயிர மாயிரம் அரவச் சேனைகள்
பாய்ந்து சீறப் பரவிடும் பேயொலி!
நெஞ்சங் குழிக்குள் நெல்மணி அரைக்கும்
வஞ்சப் பொறிகள் வளர்த்திடும் ஓலம்!
அண்ட சராசரம் அனைத்தும் ஒருங்கே
துண்ட மாகிடும் போலெழும் ஓசை! (40)
பாதம் தொட்டுப் படர்ந்திடும் நீரால்
ஓதம் தன்னை உணர்ந்திட லானேன்!
இரைச்சல் அதனின் ஏற்றத் தாழ்வில்
கரைகாண் நீரின் கதகளி ஆட்டம்!
பாதம் வைத்த பரப்பினில் குறுகுறுப்பு!
மீத நீரால் மென்மணல் இழுப்பு!
மணலெனைத் தாங்க மறுத்தது போலும்!
கணநொடிப் போதேன் கவனம் சிதைந்தது!
ஆறடி இருந்தென்? ஆறவிருந்தென்?
நீரடி என்றன் நிலைதனைக் குலைத்தது! (50)
கருப்புக் கண்ணாடி கழன்று விழுந்தது!
கைக்கோல் என்றன் கரத்தினை மறந்தது!
நண்பன் கத்தி நால்வரை அழைக்க
என்னைக் கரைமேல் எற்றிக் கிடத்தினர்!
கண்ணை இழந்தும் கடற்கரை வந்தஎன்
எண்ணம் நல்லதா? எதிருளோர் சொல்வீரே! (56)

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.