skip to content

சங்கமம் 2009

சங்கமம் 2009:

தமிழக அரசின் சிறந்த செயல்களில் இதுவும் ஒன்று. மேலேழுந்தவாரியாக பார்கையில் இது ஒரு வெற்று வேடிக்கை செலவாக தெரிந்தாலும், இதன் உள்ளார்ந்த எண்ணம் உயரியதே ஆகும்.

சமூக கேளிக்கை என்பது தமிழ் சமுதாயத்திற்கு புதிது அல்ல. சோழர் காலத்திலேயே சித்திரை திரு நாள் போன்ற சமூக கேளிக்கை நிகழ்ச்சிகளை தமிழ்ச்சமுதாயம் சந்தித்திருக்கிறது. பொதுவாக மக்கள் கூடி அளவளாவது என்பது குடும்ப நிகழ்ச்சியாகவோ அல்லது பொது நிகழ்ச்சியாகவோ இருந்து வருவது தமிழ் பாரம்பரியம் ஆகும்.

இத்தகைய பொது கேளிக்கை நிகழ்ச்சிகள், மக்களின் எண்ணங்களை சீர்படுத்த ஒரு ஊக்கியாகவே இருந்து வருகிறது. தங்களுடைய எண்ணங்களை பறிமாறும் போது தான், எண்ணங்கள் மேலும் பரிமளிக்கவும், மேலும் பல புதுப்புது எண்ணங்கள் பரிமாணிக்கவும் இயலுகிறது.

குளிர்காலமாகிய திசம்பர் மாதம், இந்திய மற்றும் அல்லாது உலகிலுள்ள எல்லா நாடுகளிளும் இத்தகைய கேளிக்கை நிகழ்ச்சிகளை நிகழ்த்த ஏற்ற மாதமாக உள்ளது. அத்தகைய பருவ நிலை காரணமாகவே, இம்மாதத்தில் சென்னை மற்றும் திருவையாறு போன்ற இடங்களில் கர்னாடக சங்கீத இசை விழா நிகழ்ச்சிகள் பல ஆண்டு காலமாகவே நடை பெற்று வருகின்றன.

பருவம் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், இது அறுவடை காலமாகவும் இருப்பதால், மக்களின் மன நிலை குதுகலமாகவும் இருக்கும். இதன் பொருட்டே இந்த சமயத்தில், இத்தகைய பொது நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

சங்கமம், கிராமிய கலைகளை நகர வாழ்க்கைக்கு அறிமுகப்படுத்தும் ஒரு பாலமாகவே விளங்குகிறது. எங்கேயோ ஒரு கிராமத்தின் மூலையில் இருக்கும் ஒரு கரகாட்டக்காரரும், உலக அளவில் பரிமளிக்கும் ஒரு இசை கலைஞரும் ஒரே மேடையில், எல்லா தர மக்களுக்கும், எந்த கட்டணமும் இல்லாமல், மகிழ்ச்சியை பரிமாறுகின்ற நிகழ்ச்சி இது ஒன்றாகவே இருக்க முடியும்.

இதை ஆரம்பித்து சில ஆண்டுகளே ஆனாலும், இதை மேலும் சீருடனும், மிக விமரிசையாகவும் நடத்தவேண்டும். குறிப்பாக, நகரில் உள்ள சபாக்கள், சங்கமத்தின் போது, நாடகங்கள் மற்றும் மன்றங்களில் நடத்தத்தக்க நிகழ்ச்சிகளை ஏற்று நடத்த முன்வரவேண்டும்.

மேல், கீழ் என்ற வேற்றுமை இல்லாது, எல்லா பிரிவு மக்களும் கண்டுகளிக்கும் வகையில் உள்ள அரசின் இந்த புதுமையான முயற்சிக்கு நமது வாழ்த்துக்கள்!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.