skip to content

சதை விளைக்கும் சரித்திரம்

சதை விளைக்கும் சரித்திரம்

கண்ணுகுக்கும் நீரெடுத்துக்
.. கனலணைக்கும் காரிருள்!
மண்ணுலுக்கும் பேய்களாட
.. மறைந்ததெங்கு மானுடம்?

பேச்சடைத்துப் பேரமைதி
.. பேணிநிற்கும் இந்நிலை
மூச்சடைத்துச் சத்தியத்தின்
.. முதுகொடிக்கும் தந்திரம்!

கன்றழித்த போர்முறையின்
.. காரணத்தைக் கூறிட
கொன்றொழித்த கோமனென்ன
.. குற்றமற்ற சோழனா?

கண்டெடுத்து விதையழிக்கும்
.. காரணத்தைக் கண்டதால்
குண்டெதிர்த்த சதைகளிங்கு
.. கொத்தளங்கள் ஆகுமே!

குன்றேதிர்த்த யானையன்று
.. கோட்டைவிட்டுப் போனதால்
நின்றெதிர்க்கும் நரிகளின்று
.. நெஞ்சுயர்த்தி நிற்பதோ?

புண்ணதற்குள் புகழ்மறைத்துப்
.. புதைந்தவீரர் எத்தனை?
எண்ணுதற்கும் அகப்படாமல்
.. இறந்தவீரர் எத்தனை?

சென்றதுன்பம் செத்தெழுந்து
.. சேர்த்ததுன்பம் யாவுமே
என்றுமிந்த மண்ணிலோங்கும்
.. இழிவெடுத்துச் சொல்லிடும்!

இன்றுசிந்தும் இரத்தம்யாவும்
.. என்றுநீதி காணுமோ
அன்றிலங்கை மண்ணிலெங்கும்
.. அமைதிவந்து தங்குமே!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.