skip to content

விழிகள்!

விழிகள்!

ஓசை உயர்த்தி
.. ஒலிதனைக் கூட்டி
மாசை மொழியா
.. மௌன விழிகள்!

ஒருதாய் மொழியால்
.. உணர்த்தற் கரிதென்(று)
இருவாய் மொழியாய்
.. இயம்பும் இணைகண்!

மொழிஇல் மொழியின்
.. மௌனக் குறிப்பை
மொழியும் அதரம்
.. முன்னார் இமையே!

நாட்டிய மாடி
.. நயவுரை ஆற்றிக்
காட்டிடும் பாவை
.. கண்ணமை நாவே!

வேச மனிதம்
.. விழிமேல் வளர்க்கும்
மீசை அதுவே
.. மெலிந்த புருவம்!

முன்னர் விழிசொல்
.. மௌன மொழியைத்
தன்னுட் தெளிகண்
.. தகைசார் செவியே!

கேடு விளைக்கும்
.. கேட்பன என்றால்
மூடப் பயின்ற
.. முழுசெவி கண்ணே!

கண்டும் மொழிந்தும்
.. காதெனக் கேட்டும்
உண்டும் உயிர்த்தும்
.. உளபுலன் கண்ணே!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.