skip to content

விரல்நுனி வெளிச்சங்கள்!

விரல்நுனி வெளிச்சங்கள்!

விரலின் நுனிகொண் டுருவின் மீது
.. வெளிச்சம் வரைகின்றேன்! - நான்
இருளைக் கீறிப் பொருளைப் பார்க்கும்
.. இயல்பின் முறைகொண்டேன்!

செவிசேர் ஒலியென் சிந்தை சேரச்
.. சிற்பம் வடிக்கின்றேன்! - நான்
புவியை அகத்துள் புரட்டிப் புரட்டிப்
.. புதிதாய்ப் படிக்கின்றேன்!

இருட்டு வயலில் இலக்கை விளைக்கும்
.. இயற்கை வரம்பெற்றேன்! - உடன்
விரட்டும் நிழலாய் விளையும் விழலை
.. விலக்கும் முறைகற்றேன்!

நிறத்தைக் கண்டு நிலையை வகுக்கும்
.. நிலைநான் பெறவில்லை! - அதன்
புறத்தைக் கொண்டு புதிரை அவிழ்க்கும்
.. புலமை எனதெல்லை!

கனவாய் நனவாய்க் காட்சி முரண்கள்
.. காண்போன் நானில்லை! - என்
மனமாம் மரத்தின் மலர்கள் எதிலும்
.. மாயை தானில்லை!

விரலின் நுனிகொண் டுருவின் மீது
.. வெளிச்சம் வரைகின்றேன்! - நான்
கருமை விரிக்கும் காட்சித் திரையில்
.. கவிதை நிறைக்கின்றேன்!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.