skip to content

சொல்வெட்டுகள் 2013-03

சொல்வெட்டுகள் 2013-03

-----

6/3/2013

செய்தி:

பிறவியிலேயே எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை முற்றிலுமாக குணமாக்கப்பட்டது. இது மருத்துவத்துறையில் முதல் முறையாக எச்ஐவி நோய்க்கெதிரான சாதனையாகும்.

செய்யுள்:

இச்சைவலை வீழ்ந்தோர் இவர்தவறால் தன்பிறப்பில்
நச்சேற்றுச் சேயும் நலமிழந்தாள் - எச்ஐவி
நோய்கழிக்கப் பல்வேறு நுட்பங்கள் ஆய்ந்தறிந்து
சேய்பிழைக்க இன்றளித்தார் தீர்வு

-----

8/3/2013

செய்தி:

இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

செய்யுள்:

மூன்றிலோர் பங்கை முறையாக்கும் சட்டமதைத்
தோன்றவிடா(து) இன்றும்நாம் தோற்கின்றோம்! - சான்றோரே!
கோட்டுக்குள் பெண்மகவைக் கொண்டடைக்கும் இந்நிலைகொள்
நாட்டுக்கோ மங்கையர் நாள்?

-----

14/3/2013
செய்தி:

போப் ஆண்டவர் 16-ஆம் பெனடிக்ட் பிப்ரவரி மாதம் 28ந்தேதி பதவி விலகினார். இதைத்தொடர்ந்து, வாடிகனில், 115 கர்டினால்கள், 14/3/2013 அன்று, புதிய போப் ஆண்டவராய், அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த, ஜார்ஜ் மரியோ பொர்கோகிலியோவைத் தேர்வு செய்தனர். இந்தத்தேர்வை அறிவிக்கும் வகையில் புகை வெளியேற்றப்பட்டது. இவர் "பிரான்ஸிஸ் I" என்னும் பெயரை வைத்துக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.

செய்யுள்:

கூட்டுக் குழுவுரைத்த கூற்றால் முதல்பிரான்ஸிஸ்
வாட்டிகனில் போப்பாய் வழியேற்றார் - போட்டியற varappeRRAr
சோபித் தவைநடுவே தூயொளியைக் காட்டியதே
தூபத் தெழுந்த சுடர்

-----

14/3/2013

செய்தி:

மார்ச்சு மாதம் பதினான்காம் தேதியை, 'பை' (PI = 3.14) நாளாய் உலகம் கொண்டாடியது.

செய்யுள்:

வட்டத்தின் சுற்றளவாய் வந்தமையும் எண்ணதற்கு
விட்டத்தோ டுள்ள விகிதமிதே - சட்டமென
மார்ச்சுப் பதினான்கை மண்ணுலகம் 'பை'நாளாய்ப்
பார்த்துக் குறித்தது பார்

-----

17/3/2013

செய்தி:

இன்று சென்னையில் "ஊர்தியொலி ஒழிப்பு நாள்" (No Horn Day) அனுசரிக்கப்படுகிறது.

செய்யுள்:

சென்னை நகர்ப்புறத்தே செல்வோர்ச் செவிகிழிய
என்னே இரைச்சல் எழுப்புகின்றீர்! - இன்றேனும்
சுற்றுப் புறங்காக்கச் சூளுரைப்போம் ஓட்டுநரே!
சற்றே ஒலியைத் தவிர்த்து

-----

19/3/2013

செய்தி:

திரு பாக்கியம் ராமசாமியின் கற்பனையில் எழுந்த பாத்திரங்களான அப்புசாமித் தாத்தாவும் சீதாப்பாட்டியும் முதன்முதலாக கதையில் வந்து ஐம்பதாண்டுகள் ஆகின்றன.

செய்யுள்:

பாட்டியை வெல்வதற்குப் பல்வேறு தந்திரங்கள்
காட்டும் வகையாய்க் கதைசெல்லும் - லூட்டியிடும்
அப்புசாமி சீதாவோ டாற்றும் நகைச்சுவைக்கிங்(கு)
ஒப்பென்றும் உண்டோ உரை

-----

21/3/2013

செய்தி:

20/3/2013 சிட்டுக்குருவிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

செய்யுள்:

பேச்சுக் கருவியதைப் பின்னியக்கும் மின்னலையின்
வீச்சில் குருவிஇனம் வீழ்ந்ததுவே! - கீச்சொலியின்
கீதம் புவியிலினிக் கேளா தழிக்குமுறை
வேதனை அன்றோ விளம்பு

-----

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.