skip to content

எழுத்தைந்து

எழுத்தைந்து

-----

நமதென்று நாமெண்ணி நாடுவதும் நாளும்
நமதன்றே! நம்மைநமன் நாடிவரும் நாளில்
நமதொன்றே நாவோதும் நாதன்றன் நாமம்!
நமசிவாயம் நல்கும் நலம்

-----

மந்திரத்தின் மாண்பை மறுத்துளத்தே மாசேற்று
மந்தித்து மானுடமேன் மாய்கிறதோ? மாநிலத்தில் (மந்தித்து = தாமதித்து)
மந்தையென மாந்தர் மயங்கும்நாள் மாதேவன்
மந்திரச்சொல் மண்காண் மருந்து

-----

சிந்தையுட் சேர்ந்துளத்தின் சீர்கெடுக்குஞ் செய்கையினால்
சிந்தைச் செறிவிழந்து சேதந்தான் சேர்த்தாலும்
சிந்தேற்ற செஞ்சடையான் சீர்நாமம் செப்புமன்பர் (சிந்து = நீர்)
சிந்தைசீர் செய்யும் சிவம்

-----

வாய்க்கும் வளருடற்கும் வாய்த்ததிவ் வாழ்வென்றே
வாய்த்த வழிமறந்து வாழ்கின்ற வாழ்வெதற்கோ?
வாய்ப்பை வழங்கச்செய் வான்நாமம் வாழ்த்துகின்ற
வாய்க்கென்றும் வாய்க்கும் வளம்

-----

யாதுமறி யாதடைந்த யாக்கைகொள் யாத்திரையில்
யாதுமறி யாதுழன்று யௌவனத்தை யாம்கழித்தோம்!
யாதுமறி யாதுழன்றென்? யாமகற்றி யாசிப்போம்!
யாதுமவன்! யாங்கவனின் யாது?

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.