skip to content

சொல்வெட்டுகள் 2013-04

சொல்வெட்டுகள் 2013-04

9/4/2013

செய்தி:

இங்கிலாந்தின் முன்னாள் முதல்வர் மார்கரேட் தாட்சர் மறதிநோயால் அவதியுற்று இன்று மறைந்தார்.

செய்யுள்:

சிறந்தாட்சி செய்துமுன்னர் சீர்சேர்த்த தாட்சர்
மறதியெனும் நோய்கண்டு மாண்டார் - இறந்தபினும்
எண்ணும் வகையுலகில் ஏற்றம் இவர்பெற்றார்
மண்ணின் இரும்பு மகள்

-----

15/4/2013

செய்தி:

மெல்லிசை வேந்தன் பி பி சீனிவாசன் காலமானார்.

செய்யுள்:

தேன்றேன் எனமலைக்கத் தீங்குரலால் பாடுகுயில்
போன்றோன் புவிவிடுத்துப் போய்விட்டான் - பூந்தமிழின்
பால்வண்ணம் காட்டும் பருவத்தான் சீனிவாசன்
கால்வென்ற ஓர்வசந்தம் காண்

-----

17/4/2013

செய்தி:

விஸ்வநாதன் இராமமூர்த்தி என்றழைக்கப்பட்ட இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான

இராமமூர்த்தி காலமானார்.

செய்யுள்:

காகிதத்தின் ஓடம் கடலலையில் மூழ்குதற்போல்
ஆகிய தன்றோ அவர்மறைவு! - பாகமுதாய்
ஒன்றியிசை தந்தோரில் ஓர்துருவம் தான்மறைந்தும்
இன்னிசைக்கிங் கில்லை இறப்பு

-----

21/4/2013

செய்தி:

கணித மேதை சகுந்தலா தேவி மரணமடைந்தார்.

செய்யுள்:

எந்திரத்தை மிஞ்சும் இயற்கணித சாத்திரத்தின்
தந்திரத்தைக் கண்டுயர்ந்த தாரகையார் - தம்திறத்தால்
கூட்டுங் கலைதெளிந்த கூர்மதியர் மாண்டபின்னால்
போட்டிக்கி யாருளரிப் போது

-----

23/4/2013

செய்தி:

இன்றைய தினம் உலகளவில் புத்தக நாளாகக் கொண்டாடப்படுகிறது.

செய்யுள்:

அட்சயப் பாத்திரமாய் ஆழ்கிணற்றின் ஊற்றெனவாய்த்
தொட்டவர்க் கெல்லாம் தொகைசேர்க்கும் - பட்டறிந்தார்
வித்தகத்தைத் தாளில் விளக்கிநிற்கும் ஓர்பொருளாம்
புத்தகத்தை இன்றேனும் போற்று

-----

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.