skip to content

எதிர்பாராதது!

எதிர்பாராதது!

கண்ணனுக்குக் கடிதமொன்று
காலை வந்தது - அதைக்
கண்டவுடன் எழுதியவரைக்
காண்க என்றது!

சென்றவாரம் வேலைஎன்னும்
செய்தி வந்தது! - அதைக்
கண்ட கண்ணன் அனுப்பிவைத்தக்
கடிதம் தந்தது!

எண்கள் கூட்டும் வேலை என்ன
இழிந்த வேலையா? - அதைப்
பண்ணும் மாந்தர் மட்டும் என்ன
படிக்க வில்லையா?

நொந்து நெஞ்சம் வெந்து கண்ணன்
நொடிந்த போதிலே - இன்று
வந்த ஓலை கண்டதாலே
வாட்டம் போனதே!

அழைத்திருந்த நிறுவனத்தை
அடைந்த கண்ணனும் - அங்கு
உழைப்பதற்கே ஆணை என்ற
உணர்வில் இருந்தனன்!

பிழைப்பதற்கு வேலைதேடும்
பெரிய உலகிலே - அன்று
அழைத்ததனால் ஆயிரம் பேர்
அங்கிருந்தனர்!

ஆணையன்று! தேர்வுக்கான
அழைப்பு மட்டுமே! - அந்த
ஆயிரத்தில் யாருக்கந்த
ஆணை கிட்டுமோ!

கேள்வி நூறு கேட்டு நம்மைக்
கேவலம் செய்வார்! - சொந்த
ஆளவர்க்கே வேலையென
ஆவணம் செய்வார்!

காத்துநின்ற கண்ணன் பேரைக்
காவலன் சொல்ல - எதிர்ப்
பார்த்திருந்த கண்ணன் பாதம்
பதிந்தான் மெல்ல!

தேவையற்ற கேள்விகேட்டுச்
சோதனை செய்வார்! - பின்பு
தேவையில்லை என்றுகூறி
ஏளனம் செய்வார்!

பலமுறைகள் இந்தக் கூத்தைப்
பார்த்த கண்ணனோ - இன்று
பாடம்சொல்ல வேண்டும் என்று
பாதை வளர்த்தனன்!

தேர்வுசெய்யும் அறைமுழுக்க
தேக்கின் மேசைகள்! - கேட்க
ஆர்வமுடன் காத்திருந்தார்
அன்பர் ஐவரே!

வாய்விளிம்பில் வழியுகின்ற
வார்த்தை காத்தவர் - கண்ணன்
போய்நுழையும் நேரம் வரை
பொறுத்திருந்தனர்!

சொல்லும் முன்னர் சொற்கள் எங்கு
தொலைந்து போகுமோ! - திராட்சை
மெல்லுகின்ற சாக்கில் ஐவர்
சொல்லைக் காத்தனர்!

ஐவருக்கும் தீனி பானச்
சேவைகள் செய்ய - அங்குப்
பையவரும் சேவகனைப்
பார்த்தான் கண்ணனும்!

நாற்காலி ஒன்றதனை
நகர்த்திக் கொண்டு - சேவை
பார்க்கின்ற சேவகன்முன்
கண்ணன் அமர்ந்தான்!

கேள்விகளை இப்பொழுது
கேளுங்கள் ஐயா - என்று
கால்மடக்கிச் சேவகனைக்
கண்ணன் கேட்டான்!

வேண்டுமெனக் கண்ணன் செய்யும்
விஷமம் அங்கே - எல்லை
தாண்டியதால் ஐவருமே
சத்தம் செய்தனர்!

படித்தவனா? உனக்கேதும்
பண்பும் உண்டோ? - நல்ல
அடிப்படைகள் கற்காத
அடிமுட்டாள்நீயோ?

கற்றவர்கள் இங்கிருக்கக்
கடந்தேன் சென்றாய்? - அங்கே
நிற்பவனைக் கற்றவனாய்
நினைத்தாயோ நீ?

மற்றொருவர் அதையாங்கே
மறுக்கப் பார்க்கிறார்! - இவன்
சொற்களினால் நமைக்கேலிச்
செய்கிறான் என்றார்!

அதுசரிதான்! என்றொருவர்
ஆமோதித்தார் - கண்ணன்
புதிராக அவர்முன்னர்
புன்சிரிக்கிறான்!

உளுத்துப் போன கேள்வி கேட்டு
உயிரை வாங்குவீர்! - கேட்டு
அலுத்துப் போனதாலே அண்ணன்
அவரைக் கேட்கிறேன்!

தன்பணியைத் திறமையாகச்
செய்யும் அன்பர்தான் - என்
முன்படிப்பின் பொருள் கணிக்கும்
முறைமை அறிந்தவர்!

அத்திறத்தைப் பெற்றவராய்
இந்த அறுவரில் - நான்
ஒற்றையரைக் கண்டறிந்தேன்!
உரைக்க வேண்டினேன்!

புன்னகைத்துக் கண்ணன் சொல்லும்
பேச்சைக் கேட்டதும் - அவன்
முன்னமர்ந்த ஐவருடன்
மூர்க்கமாயினர்!

வேலை தேடி வந்த நீயும்
வீம்பு செய்கிறாய்! - எங்கள்
காலை நேரம் விரயம் செய்து
கைகலக்கிறாய்!

தேவையில்லை நீயெமக்கு!
தேரவில்லை நீ! - சேரும்
ஆவலில்லை என்ற போதில்
ஆணை தேடினாய்!

ஐவரையும் அலற வைத்த
அனுபவத்திலே - மனக்
கைநிறைய இன்பமுடன்
கண்ணன் நீங்கினான்!

நாள்கள் சென்ற பின்னர் ஓலை
நாடி வந்ததே! - அந்தத்
தாள்கள் சொன்ன சேதி கண்டு
திகைத்தான் கண்ணனும்!

தேடிச் சென்ற பதவியினும்
சிறந்த பதவியில் - அவன்
சேருதற்கோர் ஆணை அங்கு
சேதி சொன்னதே!

குறிப்பறிந்து செயல்புரியும்
கொள்கை தேவையாம்! - அதை
அறிந்தவந்தான் கண்ணன் என்றவ்
வாணை சொன்னது!

தேர்வு நாளில் சேவை செய்த
சேவகர்தான் - அந்த
ஆர்வமுள்ள அலுவலகம்
ஆளும் முதல்வராம்!

எண்ணம் வேறவ் விதயம் வேறென்
றிருக்கும் பூமியில் - கண்ணன்
உள்ளம் தன்னை உணர்ந்ததாலே
உண்மை வென்றதே!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.