skip to content

பதினெட்டுப்படியெட்டு!

பதினெட்டுப்படியெட்டு!

ஐயன்வாழ் மலைக்கு நானும்
.. அதுவரை சென்ற தில்லை;
பொய்யினைத் தவிர்த்து நெஞ்சில்
.. பொன்னப்ப னையன் தாளே
மெய்யென எண்ணிச் செல்லல்
.. மேன்மையென் றெவரும் சொல்லக்
கைகளில் புட்பம் ஏந்திக்
.. கடற்கரைக் கோயில் சென்றேன்! (1)

கண்ணெலாம் பக்தி தோய
.. கடற்கரை கோயில் தன்னில்
எண்ணிலா பக்தர் கூட்டம்!
.. இருதயத் தையன் நாட்டம்!
பன்முறை மலைக்குச் சென்ற
.. பழுத்தநல் குருமா ரோடு
கண்டிடா தவர்கள் பல்லோர்
.. கன்னியாய்ச் சாமி என்போல்! (2)

பாலொடு கனியும் பூவும்
.. பரப்பிய பூசை மன்றில்
கோலமாய் அமர்ந்தே ஐயன்
.. குவலயம் காத்தி ருக்க
பாலமாய் அவன்றாள் சேர்க்க
.. பக்தியே உதவும் என்று
ஞாலமே குவிந்த தாங்கே!
.. நலமெலாம் குவிந்தாற் போலே! (3)

தோத்திரம் பாடிப் பூசை
.. தொடங்கியே வைக்கும் சாமி
மாத்திரம் மன்றில் இல்லை!
.. மற்றவர் வாயில் நோக்கிப்
பார்த்திருந் தாரப் போது
.. பாதையில் நடக்கும் கன்னி
காத்திட வேண்டு மென்று
.. கதறியே மயங்கி வீழ்ந்தாள்! (4)

விழுந்தவள் எழவே யில்லை,
.. விளக்கடி விட்டில் போலே!
வழக்கமாம் பெண்ணைத் தீண்ட
.. வகையிலை என்ப தாலே
பழுத்தநற் கிழவர் கூட
.. பாவையை அணுகாப் போதில்
இழுக்கென எண்ணும் என்னுள்
.. இரக்கமே எழுதற் கண்டேன்! (5)

பெண்ணவள் வீழக் கண்டும்
.. பெரியரேன் ஒதுங்க வேண்டும்?
எண்ணிநான் அருகில் சென்றேன்!
.. எடுத்தவள் முகத்தை நோக்க
மண்ணிலே வீழ்ந்த தாலே
.. மயங்கிய நிலையில் கண்டேன்!
கண்ணிலே தெரிந்த தையன்
.. காலடி கிடந்த பாலே! (6)

கூடியோர் என்னை வைதார்!
.. குற்றமென் றடிக்க வந்தார்!
சாடினார்! முகத்தை நோக்கிச்
.. சபித்தெனைச் சாத்தான் என்றார்!
ஓடியப் பால்கு டத்தை
.. ஒருகையில் ஏந்தி வந்து
வாடியே கிடக்கும் அந்த
.. வஞ்சியில் வாயில் வார்த்தேன்! (7)

நீசனே! ஐயன் பூசை
.. நிச்சயம் கெடுத்து விட்டாய்!
வேசமேன் மலைக்குப் போக?
.. விளைவைநீ அறிவாய் இன்றே!
மோசமே போனோம் இன்று!
.. முடிந்தது சுத்த மெல்லாம்!
கூசிடா தவளைத் தீண்டிக்
.. குருவினுக் கிழுக்கைச் சேர்த்தாய்! (8)

என்றெலாம் பல்லோர் வைய
.. என்விழி மட்டும் பெண்ணின்
கண்களைப் பார்த் திருக்கக்
.. கடவுளை வேண்டி நின்றேன்!
பெண்ணவள் பிழைக்க வேண்டும்!
.. பிழையெனச் சொன்னால் கூட
அன்னவள் பிழைத்தால் ஐயன்
.. அவனெனை மன்னிப் பானே! (9)

கூட்டமே என்னை ஆங்கு
.. கொதித்தெழும் மொழியில் வைய
நீட்டமாய்த் தாடி வைத்த
.. நிறைகுரு சாமி வந்தார்!
ஓட்டமாய் மற்றோர் எல்லாம்
.. ஓடியக் குருவின் காதில்
ஊட்டினர் செய்தி, என்னால்
.. ஒழிந்ததப் பூசை என்றே! (10)

மடியிலே பெண்ணை ஏந்தி
.. மண்வழி இருந்த என்னைத்
திடமுடை பார்வை யோடே
.. திருகுரு சாமி நோக்கி
மடமட வென்றே மன்றின்
.. மையத்த ழைத்துச் சென்றார்!
உடனெனைத் தொடர்ந்த வாறே
.. உளரெலாம் வருதற் கண்டேன்! (11)

வந்ததோ கோபம் என்றே
.. வரும்குரு சாமி நோக்கி
முந்திடும் கூட்டம் கண்டேன்!
.. முடிவிதே என்றே நின்றேன்!
அந்தமே என்னைச் சூழ
.. அரங்குள ஐயன் தாளை
வந்தனை செய்து நெஞ்சில்
.. வணங்கியே சரணம் என்றேன்! (12)

ஹரிஹரா ஐயா வென்றே
.. அரங்கிலென் முன்னர் நின்ற
குருஅவர் என்றாள் தொட்டுக்
.. கும்பிடப் பதைத்துப் போனேன்!
குரலிலோர் களிப்பு தோன்ற
.. குனிந்தவர் என்னைக் கண்டு
வரமிதே! அன்ன தான
.. வள்ளலே வாழ்க வென்றார்! (13)

திடுக்கிடும் கூட்டம் முன்னர்
.. திகைத்தது! சரணம் என்றே
அடுக்கியே தொடரும் வாழ்த்தை
.. அனைவரும் கேட்கும் வண்ணம்
விடுத்தெனைக் கட்டிக் கொண்டார்!
.. வியந்துநான் பயந்து முன்னர்
படுத்தவர் பாதம் தன்னில்
.. பணிவுடன் முடியை வைத்தேன்! (14)

வள்ளலே வாழ்க! உன்றன்
.. வாழ்வெலாம் செழிக்க என்றே
உள்ளெலாம் இனிக்கும் வண்ணம்
.. உவந்தெனை வாழ்த்தும் நேரம்
உள்ளவர் வைத தெல்லாம்
.. உடைந்ததே! மனிதம் என்றும்
அள்ளவே இயலாதம்மா
.. அவனருள் ஆழி அன்றோ! (15)

அரங்கெலாம் அன்பு சூழ
.. அக்குரு சாமி யாலே
திரும்பிய தின்பம்! தாமாய்த்
.. தெளிந்தனர் அன்பர் எல்லாம்!
அரும்பிய பக்தி தூண்ட
.. அவருளக் கேள்வி ஒன்றே!
தெருவிடை மயங்கி வீழ்ந்த
.. திருமகள் என்ன வானாள்? (16)

விரைந்தனர் மக்கள் பள்ளம்
.. விரைந்திடும் வெள்ளம் போலே!
குருவினைத் தொடர்ந்தேன் நானும்!
.. குலைந்தவள் என்ன வானாள்?
தரைதனில் மயங்கி முன்னர்
.. சரிந்தவள் காண வில்லை!
விரைசெறி மலரைக் கண்டார்,
.. விழுந்தவள் கிடந்த ஆங்கே! (17)

ஐயனே சரணம் ஐயா!
.. அணங்கென எமக்காய் வந்தாய்!
மெய்யனே மெய்யை மெய்யாய்
.. விளக்கிடும் பெண்ணாய் வீழ்ந்தாய்!
பொய்யுடை பக்தி என்னும்
.. புரைதனை அழிக்க வைத்தாய்!
நெய்யிடை திரியைப் போலே
.. நெகிழ்ந்ததெம் உள்ளம் ஐயே! (18)

சுவாமியே சரணம் ஐயப்பா!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.