skip to content

திசை மாற்றும் ஆரங்கள்!

திசை மாற்றும் ஆரங்கள்!

கையாட்டி நடக்கும் கடிகாரமிது! - ஓடும்
.. காலத்தின் துடிக்கின்ற நாடியிது!
மெய்யூட்டி வளர்கின்ற மானுடத்தைத் - மெல்ல
.. மென்று கரைக்கின்ற ஆழியிது!

நிகழ்கின்ற நொடிகொல்லும் கூற்றமிது! - அதை
.. நில்லாத வாறென்றும் மாற்றுமிது!
நெகிழ்கின்ற காலத்தின் காட்சிகளை - வெறும்
.. நினைவாக்க நீட்டும்கை காட்டியிது!

இரவு 12 மணி:
இருகைகள் மேல்கூப்பி எழுந்துவிடும்! - நாள்
.. இன்றொன்று கழிந்ததென எடுத்துரைக்கும்!
இருள்வெட்ட ஒளிப்பூவை எழுப்பவரும்! - துயில்
.. இயல்பன்று பகல்நன்றென் றியம்பவரும்!

காலை 6 மணி:
காலைப் பொழுதிரண்டு கைவிரித்து - இந்தக்
.. காசினிதான் பெரிதென்றே எமக்குரைக்கும்!
வேலைக்குச் செல்கவென பழிப்பதைப்போல் - தன்கை
.. விட்டதுவே நெம்பியெனை எழுப்பிவிடும்!

பகல் 12 மணி:
இருகரமும் மேல்தூக்கி எமைமுறைக்கும்! - பணி
.. இன்பத்தின் எல்லையென் றெமக்குரைக்கும்!
ஒருமுகப் படுத்துதலை உணர்த்துதற்போல் - மேல்
.. உயர்த்திடும் கரமிரண்டும் உறுதிசெய்யும்!

மாலை 6 மணி:
தொய்ந்திரண்டு கரங்களவை தாழும்நேரம்! - துயில்
.. சோர்வுக்குத் தீர்வாயெம் கண்ணோரம்!
மையிருட்டில் சூரியனே மறையுமாயும் - பணி
.. மறுக்காது நடக்கின்ற கடிகாரம்!

நில்லாது நடக்கின்ற கரங்களுமேன்? - ஒன்றை
.. நிழல்போலே மற்றொன்று தொடர்வதுமேன்?
செல்லாத மணித்துளியைத் தினந்தினமாய்ச்
.. சேர்க்கின்ற பணிசெய்யும் சேவகரோ!

நொடிக்கொரு முறையென திரும்பிடும்கை! - அது
.. நோக்கிய திசையெலாம் திருப்பங்களே!
கடக்குமந் நொடியெலாம் கரைந்தபினும் - கடி
.. காரத்தின் ஒலியது கரைவதில்லை!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.