skip to content

தீக்குளியல்! (நகர்வளம்)

தீக்குளியல்! (குறுங்காவியம்)

படலம்: நகர் வளம்
அறுசீர் விருத்தம் (மா மா காய் அரையடி அமைப்பு)

அகரம் முதலாம் அட்சரமாய்
.. அதனின் றமைந்த ஒலியனைத்தும்
பகரும் பல்வே றிலக்கியமாய்ப்
.. பழகித் தழைக்கும் மொழியதைப்போல்
சிகரம் தொடங்கிச் சிறுசுனையாய்ச்
.. சிலிர்த்துக் காட்டின் இடையோடி
நகரும் எழிலார் பூவனமாய்
.. நடன மாடும் தேனாறே! (1)

மலையில் பிறந்த பேரரவம்
.. மண்ணை நோக்கி ஊர்வதுபோல்
அலைகள் எழுப்பிப் பேரரவம்
.. ஆர்க்கும் நதியும்; ஊர்வதுபோல்
தலையைக் குனியக் கண்டமதில்
.. தன்னைச் சரமாய்ச் சாற்றிடுமோர்
நிலையில் நதியே கண்டமதில்
.. நிறையும் அழகைச் சாற்றிடுமோ! (2)
(வது=மணப்பெண்; கண்டம்=கழுத்து/நிலப்பரப்பு)

அசையா தமைந்த கரைகளிடை
.. அசையும் வெள்ளம் தேனாற்றில்
இசையாய் எழுந்து விளையாட
.. இயற்கை என்னும் பசுமைப்பண்
திசையாய்ப் பிரிந்த எண்பரப்பைச்
.. செழிப்போ டிருக்கச் செய்வதனால்
பசியே இல்லாப் பேரூர்கள்
.. பாங்காய் ஆங்கே அமைந்தனவே! (3)

துயிலை விடுத்தே எழுகவென
.. துளிநீர்ப் பனியைத் துடைத்துவிடும்
வெயிலின் வெள்ளை விளையாட்டு
.. விரியும் வானின் விடியலதில்
குயிலின் கீதம் தொடர்ந்துவர
.. குறையா வளங்கொள் வயல்வெளிகள்
பயிலும் ஊராம் மாங்குடியோர்
.. பசுமை போற்றும் சிற்றூரே! (4)

இளநீர்க் குலையோ டுயர்தென்னை!
.. இதமார் நுங்கை ஈன்பனைகள்!
மிளகின் மணங்கொள் மலைமேடு!
.. மிகையாய்க் கமுகு! முக்கனிகள்!
அளவில் அமையா விளைநிலங்கள்!
.. அமைதே னாற்றின் கரையோரம்
உளமாங் குடியின் நிலச்செழிப்பை
.. உரையால் உணர்த்த இயலாதே! (5)

கதிரோ! முத்துச் சாமரமோ!
.. காற்றின் குரலாய்ப் பேசிடுமோ?
பதரே இல்லாப் பசுங்கதிர்கள்
.. பாதம் காணும் தன்சுமையால்!
விதையாய் மண்ணில் வேரூன்றி
.. விளைநெல் விதைநெல் ஆகிடுமோ!
புதிராய்ப் போகம் மாங்குடியில்!
.. பொன்னாய் மணிகள் பொலிந்தனவே! (6)

அகல வீதி; அடுக்கமைப்பில்
.. அழகாய் அமைந்த குடியிருப்பு;
மகளிர் கரத்தார் வளைச்சத்தம்;
.. மயங்கித் திரியும் மன்மதங்கள்;
பகலில் உழைப்பு! பரவசமாய்ப்
.. பாட்டோ டாட்டம் மாலையெலாம்!
சுகமே எங்கும் சுரங்கூட்டச்
.. சுவையூ றிசைதான் மாங்குடியே! (7)

நாளும் இயற்கை நவநவமாய்
.. நட்டம் பயிலும் மாங்குடியில்
வேளன் என்னும் குடியொன்று
.. விழுதாய் விளங்கும்; அக்குடியை
ஆளும் தலைமைப் பொறுப்பேற்ற
.. அறிவிற் சிறந்த வேள்வேந்தன்
வாளோ டமைந்த முன்னோரின்
.. வழியில் குடியைக் காப்பானே! (8)

நதியின் கரையில் ஊர்வெளியில்
.. நாதன் ஆடும் இடுகாடு!
கதையின் போக்கை முடித்தவுடன்
.. காலன் களிப்போ டாடுகளம்!
விதியின் முடிவில் வீடுபெற
.. விண்ணைத் திறக்கும் மண்கதவு!
நிதியர் நிறைந்த மாங்குடியின்
.. நிழலாய் வடக்கின் எல்லையிதே! (9)

இடுகா டடுத்து நதியோரம்
.. எழிலோ டமைந்த கானகத்தைத்
தொடுமா றமைந்த சிற்றூரே
.. தொய்யா வளங்கொள் தேனூராம்!
நெடுமா மரங்கள் நெல்கரும்பு
.. நீரார் நஞ்சை நிலமெனவாய்த்
தொடராய்ப் பசுமை நடமாடும்!
.. சொர்க்கம் என்ப திதுவாமே! (10)

பொழியும் மழையின் வருகைமிக,
.. பொங்கித் திரிந்து செந்நீராய்
வழியும் வெள்ளத் தேனாற்றின்
.. வளைவில் தேனூர் அமைந்ததனால்
சுழியில் துள்ளும் மீனள்ளத்
.. தோதாய் வலையை விரிக்கின்ற
தொழிலைத் தத்தம் பரம்பரையாய்த்
.. தொடரும் குடும்பம் பலஇங்கே! (11)

பரவிக் கிடக்கும் புல்வெளிகள்!
.. பாயும் நதிநீர் மணல்வழியே
துரவின் மூலம் தொடர்ந்துவர
.. துளிர்ப்பில் சிரிக்கும் தொடர்வெளிகள்!
வரமாம் இதன்றன் வகையறிந்து
.. வாழ்க்கை சிறக்க வளமைகளைத்
திரலாய்ப் பெருக்கும் விதமறிந்தோர்
.. சேர்ந்து வாழும் தேனூரே! (12)

அழகார் அமைதித் தேனூரில்
.. ஆயர் என்னும் குடியொன்று
பழகும் இனமாம்! பல்லாண்டாய்ப்
.. பாடிக் களித்த பரம்பரைதான்!
விழுதோ டமைந்த ஆலதனின்
.. வேராய் இன்று பேராயன்
கிழவன் காக்கும் குலமதுதான்!
.. கேளிர் எவரும் இவன்நிழலே! (13)

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.