skip to content

தீக்குளியல் (படலம் 2: தேனூர்ச் சந்தை)

படலம் 2: தேனூர்ச் சந்தை
அறுசீர் விருத்தம் (மூன்று மா அரையடி அமைப்பு)

தேனூர் வணிகச் சந்தை
.. தினமும் மதியம் கூடும்!
மீனும் பசுவின் பாலும்
.. மிகையாய்க் கிடைக்கும் அதனால்
ஏனை நகரின் மாந்தர்
.. ஏற்கும் பேரப் பேச்சின்
வானைப் பிளக்கும் சத்தம்
.. வழக்காய் அமையும் ஆங்கே! (1)

மாற்று வணிகப் பேரம்
.. வகையாய் நடக்கும் நாளும்!
ஆற்றில் விளையும் மீனும்
.. ஆவின் பாலும் வையம்
போற்றும் பொன்னி நெல்லும்
.. புதிய பாகு வெல்லம்
ஏற்கும் கரங்கள் மாறி
.. இதயம் நிறையும் இடமே (2)

காயும் மதியப் பகலோன்
.. கதிரின் வெப்பத் தாக்கம்
ஓயும் வரையும் சந்தை
.. ஓயா தமையும்; நேரம்
ஆயும் வணிகம் ஒன்றே
.. ஆளும்; சீரார் மனித
நேயம் என்றும் மாறா
.. நேர்த்தி நிலவும் ஆங்கே! (3)

பல்லோர் வந்து புழங்கும்
.. பலவூர்ச் சந்தை அதனால்
தொல்லை ஏதும் ஆங்கே
.. தொடங்கா திருக்கக் காக்கும்
வல்லோர் படையங் குலவும்
.. வழக்கம் உண்டு; நாட்டில்
நல்லோர் வாழ நால்வர்
.. நமனாய்த் தோன்றல் நன்றே! (4)

வேளன் குடியின் சோமன்
.. வேலை ஏதும் இல்லா
நாளில் கிரியோ டுலவும்
.. நாட்டம் கொண்டோன்; அன்றும்
ஆளுக் கொருகோல் ஏந்தி
.. அமைதிச் சந்தைத் தெருவில்
தோளைக் குலுக்கிச் சென்றார்,
.. துடிக்கும் வில்நாண் போலே! (5)

வெப்பில் வியர்த்த துளியை
.. விரலால் துடைத்தான் சோமன்!
அப்போ(து) அதுகண் டெள்ளி
.. அருகி மொழிந்தான் கிரியும்!
"தப்பீ தன்றோ தோழா?
.. சரியாய் முகத்தில் ஆயர்
அப்பும் கரியைத் துடைக்கும்
.. அழகோ? அறிவென் றிலையோ?" (6)

தூங்கும் துயரம் கிரியால்
.. தூண்டப் பெற்று நெஞ்சுள்
ஓங்கும் பெருந்தீப் பிழம்பை
.. உடைத்தான்; உரைத்தான் சோமன்:
"ஈங்கு தலைகள் உருளும்!
.. ஈன ஆயன் உயிரை
வாங்கித் தணியும் தாகம்!
.. வருவார்! வீழ்வார் மடிந்தே!" (7)

ஆயன் வேளன் குடிகள்
.. அவைகட் கிடைஇப் பகைமை
ஓயும் வகையில் இல்லை;
.. உள்ளத் தாழ்ந்த உணர்வில்
பாயும் மூர்க்கம் அவர்தம்
.. பண்பைச் சிதைத்து மனிதம்
தேயும் படிசெய் தமையால்
.. தீயாய்ப் பரவும் வெறியே! (8)

தூரத் தாங்கே தொலைவில்
.. துணிவை நடையில் காட்டி
வீரத் துடிப்போ டிருவர்
.. விரைதற் கண்டே சோமன்,
"பாரும்! ஆயன் இருவர்!
.. பாலன் அவரில் ஒருவன்!
நேரில் கணக்கைத் தீர்க்கும்
.. நேரம் இன்றெ"ன் றானே! (9)

தன்னை நோக்கி வேளன்
.. தலைகள் வருதற் கண்டு
நின்று முறைத்தான் பாலன்!
.. நெஞ்சப் பகைமைத் தீயைத்
தின்று திளைத்த கண்கள்
.. செக்கச் சிவந்து பண்பை
வென்று விளையுங் கோபம்
.. வெடிக்கும் நிலையுற் றானே! (10)

கையொ டுகைகள் கலந்து
.. கணக்கைத் தீர்க்க இருவர்!
மெய்யைச் சிதைக்கப் பார்க்கும்
.. மூடர் போல்மற் றிருவர்!
வெய்யோன் மதிய விண்ணில்
.. விளைக்கும் வெப்பின் தீர்க்கம்
பொய்யோ எனுமா றாங்கே
.. பொருதும் நால்வர் சினமே! (11)

சருகில் படுதீப் பொறிபோல்
.. சட்டென் றவர்தம் கோபம்
பெருகப் பெருங்கை கலப்பு
.. பேய்த்தீப் போலாங் கெரியும்!
உருவம் அழிக்கும் தணலாய்
.. உள்ளத் தெளிவை அழிக்கும்
அருவச் சினத்தை அடக்கும்
.. ஆற்றல் மனிதர்க் கிலையே! (12)

நெருப்பின் பெரு நாத் தாகம்
.. நிறையா தென்றும், மனிதச்
செருக்கின் போக்காம் அதுபோல்
.. தேயா தெழுந்தே அலையும்!
இருட்டை உண்ணும் தீப்போல்
.. இதயம் உண்ணும் சினத்தைத்
திருத்தா மனங்கள் சிதையும்,
.. சிதையில் பிணங்கள் போலே! (13)

சிந்தை தம்சொல் கேளாச்
.. சினத்தில் மயங்க, ஆங்கே
சந்தைத் தெருவில் நால்வர்
.. சண்டை யிடுமவ் வேளை,
வந்தார் காவல் படையோர்,
.. வனத்தின் மரங்கள் தம்மை
வெந்தீ எரிக்கும் வேளை
.. விண்ஈன் மழையைப் போலே! (14)

"மூன்றாம் முறையாய் உமக்குள்
.. மூர்க்கத் தனமாய்த் தெருவில்
தோன்றும் கைகலப் பிதுவே
.. தொல்லை தொடரு மாயின்
நான்கா றுமாதம் சிறையில்
.. நலியக் கிடப்பீர்!" மூடர்
போன்றே பொருதும் அவரைப்
.. பிரியச் செயுமிவ் வுரையே! (15)

காவல் படையின் தலைவன்
.. கனத்த குரலில் முழங்க
கூவிப் பிரிந்த துகூட்டம்!
.. கொல்லப் பொருதும் நால்வர்
தாவிப் பறந்து மறைந்தார்!
.. தனித்துச் சந்தை முழுதும்
மேவும் காவல் படையால்
.. மீண்டும் அமைதி ஆங்கே! (16)

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.