skip to content

தீக்குளியல் (படலம் 3: ராமையா)

தீக்குளியல் :: படலம் 3: ராமையா
கலிவிருத்தம் (கூவிளம் விளம் மா கூவிளம் அமைப்பு)

மாலையில் ஆயனின் மன்றம் கூடிஅச்
சாலையில் நடந்ததன் சான்று தேடினர்;
மூலமாம் இருவரில் முதல்வன் தானெனப்
பாலனும் கூறினன் பார்வை தாழ்த்தியே! (1)

"வீதியில் இத்தகு விளைவு தேவையோ?
ஆதியில் யாம்விதி அமைத்த தெங்ஙனம்?
நீதியின் முன்னரெம் நிலை குலைத்திடும்
வேதனை ஏன்?"என வினவும் ஆயனே! (2)

"போற்றிய நெறிஅவை பிறழ்ந்த தெவ்விதம்?
ஆற்றிய உரையெலாம் அழிந்த தெங்ஙனம்?
சேற்றினில் வீழ்ந்தஉன் சிறுமைச் செய்கைகள்
ஏற்றமு டையவோ? இயம்பின் ஈனமே!" (3)

"சொன்னவை மறந்ததேன் சொல்பொன் வேலவ!
முன்னவர் பொருதிட முன் ஏன் சென்றனை?
அன்னவர்ப் பிழையெனின் அடக்கல் உன்கடன்!
நன்றிதோ சொல்கநீ!" நவின்று நின்றனே! (4)

"ஐய!நான் செல்லுமுன் அங்கந் நால்வரும்
கையொடு கைகலந் தாடி நின்றனர்!
செய்வது நன்றிலை செப்பும் போதிலும்
பையவே கூடியோர் பாய்ந்தெ ழுந்தரே!" (5)

சந்தையின் பிற்பகற் சண்டைச் சம்பவம்
சிந்தையின் போக்கினைச் சிதைத்த(து) ஆயனை!
வந்தவர் யாவரும் வாசல் சென்றதும்
முந்தையன் வேலனை விளித்தன் மீண்டுமே! (6)

வேலவ! சந்தைகண் விளைந்த சண்டையின்
மூலமாய் என்மகன் முனைந்து நின்றனோ?
காலையில் உம்முடன் கண்ட ராமையன்
மாலையிங் காகியும் மன்றில் இல்லையே! (7)

இல்லையங்(கு) ஐயனே! இணைந்து வந்தவன்
கொல்லையுள் போயினன்! குளிர்ந்த தென்றலில்
மெல்லவே தன்நிலை மறந்து மௌனமாய்ச்
சொல்லிலா திருந்தனன்; சோகம் என்னவே? (8)

காலையில் என்மகன் காடு செல்வதை
வேலையாய்க் கொள்கிறான்; விழைவ தென்னவோ?
சோலையில் மேவியும் சோர்ந்தி ருப்பதேன்?
மூலையை நோக்கியே முரண்டி ருப்பதேன்? (9)

ஓதமார் பனியிவன் விழியின் செங்கணீர்!
மோதிடும் முகிலிவன் முன்னும் மூச்சதே!
ஆதவன் எழுவனோ? அனைத்தும் நீங்குமோ?
சோதனை வாழ்வினில் சுகமென் றாகுமோ? (10)

கற்பனை உலகினில் காலு லாவிட
நிற்பதும் மறந்தவன் நினைவில் ஊர்கிறான்!
சொற்களைத் துறந்தொரு சூன்யப் பார்வையைப்
பற்றிட அவன்செயும் பாவம் என்னவே? (11)

அல்லினுள் தன்முகம் அடைத்துக் கொண்டவன்
மெல்லிய விசும்பலின் மொழியில் மௌனமாய்ச்
சொல்லுவ தென்னவோ? சோகம் ஏன்?அவன்
கல்லினும் வல்லவன், கனிந்த தெவ்வனே? (12)

ஆயனின் பேச்சுளம் அடைக்க வேலவன்
வாயுரைத் திடச்சில வார்த்தை தேடினான்;
சேயென ராமனைச் சேர்த்த ணைத்திடும்
நேயனாய் நின்றவன்! நேச மாமனே! (13)

நின்றவர் பேசியே நேரம் கொன்றனர்;
மன்றினில் ராமையா வருகை கண்டுடன்
சென்றனன் ஆயனும் 'சேதி கேட்டுளத்(து)
என்னென ஏனென இயம்பெனக்' கென்றனே! (14)

'வந்தனம் மாமனே!' வணங்கி ராமையன்
முந்திஉட் சென்றிட முயன்றும் வேலவன்,
'சிந்தையில் காணுமத் தெளிவின் றில்லையேன்?
நொந்துளம் நோவதேன்? நோயிதோ?' என்றனே! (15)

'என்சொல மாமனே! இதயக் கூட்டினுள்
மின்னலொன் றோர்முறை மிதந்து சென்றதே!
இன்னலா கன்னலா எதையும் காண்கிலேன்!
சென்றது சென்றதே! சேதம் நின்றதே!' (16)

வேதனை எங்ஙனம் விளையும் ராமையா,
யாதிலும் நின்குலம் ஓங்கும் வேளையில்?
சோதனை என்னதோ? தொல்லை என்னதோ?
காதலும் வந்ததோ? கண்கள் காட்டுதே! (17)

மாமனே உன்விழி மாயம் என்னவோ?
ஆமெனுள் காதலே! அறிந்த தெங்ஙனம்?
காமனின் அம்பெனைக் கடைந்த போதினில்
ஊமையாய் உள்மனம் உறைய லானதே! (18)

விம்மிடும் மூச்சினில் விளைந்த தோர்புகை!
பம்மியெ ழுந்தது பார்வைத் தீந்தணல்!
நெம்பிடும் கோலென நெஞ்சம் தூண்டிட
வெம்மையின் வீச்சினில் விரியும் காமமே! (19)

'பூம்புகை கிளப்பிய பொறியார்? நீபுகல்!
கூம்பிய உன்மனம் குடைந்த தாரவள்?
ஆம்பலுன் உள்ளுளம் அவிழ்த்த பால்நிலா
சோம்பலைக் கொடுத்ததேன்?' சொல்க என்றனே! (20)

யாரெனச் சொல்லுவேன்? அன்றே கானலின்
நீரெனச் சென்றனள்! நிலவின் பிம்பமாய்
வேர்விட நெஞ்சினில் வேட்கை வென்றிடத்
தேரெனக் கனவுகள்! தேவி இல்லையே! (21)

வந்தனள்! வாள்விழி வளர்த்துப் பார்வையால்
தந்தனள் கனவுகள்! தானாய்த் தேன்மது
சிந்தினள்! நெஞ்சினுட் சிந்தை யாகினள்!
அந்தநன் னாளடுத்(து) அவளிங் கில்லையே! (22)

'வான்மதி திங்களில் மறைதல் ஓர்முறை
தானதில் குழப்பமேன்? தண்மை தந்திடும்
கூன்மதி யாய்மெலக் கோலம் பூணுவள்!
ஏன்மதி கலங்கினை?' என்றன் வேலனே! (23)

ஓங்கிடும் நினைவதன் ஓட்டம் நின்றிட
மாங்குடி செல்குவோம்; மாயன் கோயிலில்
பாங்குடை கூத்தது பயிலும் இத்தினம்!
ஏங்கிடும் மனமதில் இதத்தைக் காணுமே (24)

நன்றது! நன்றதே! நல்ல மாமன்நீர்!
கொன்றிடும் நினைவதைக் குறைப்ப தெங்ஙனம்
என்றுநான் எண்ணிடும் இந்த வேளையில்
சென்றுதான் காண்குவம்! செல்க என்றனே! (25)

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.