skip to content

தீக்குளியல் (படலம் 4: தேன்மொழித் தென்றல்)

தீக்குளியல்
படலம் 4: தேன்மொழித் தென்றல்
அறுசீர் விருத்தம் (விளம் மா தேமா அரையடி அமைப்பு)

தேங்குநீர் சுழன்று பள்ளம்
.. தேடியே ஓடல் போலே
மாங்குடி கோயில் சுற்றி
.. மடைஉடை மக்கள் வெள்ளம்!
ஏங்கிடும் இதயம் சற்றே
.. இதமுற ராமை யாவும்
ஆங்கமர்ந் தமைதி பெற்றான்!
.. அவனுடன் அறுவர் கூடே! (1)

இசையொடு தேனைக் கூட்டும்
.. இன்சுவைப் பாஓர் பக்கம்!
விசையொடு பொருதும் வீர
.. விருந்தது மற்றோர் பக்கம்!
கசையொடு வீரம் காட்டிக்
.. காசினைக் கேட்கும் வர்க்கம்!
திசையொடு தொடரும் மண்போல்
.. தெருவெலாம் களிப்பே ஆங்கே! (2)

கோவிலின் ஏதிரோர் மன்றம்!
.. குவிந்தனர் மக்கள் ஆங்கே!
ஓவியம் போலாங் கோர்பெண்
.. ஒயிலுடன் பரதம் ஆடிக்
காவியம் படைக்கும் காட்சி
.. கண்டனர், காண்போர் கண்ணை
மேவினள் மங்கை, நெஞ்சம்
.. மிதக்கு(ம்)நல் மாயை செய்தே! (3)

பதங்களில் நளினம் கூட்டிப்
.. பரவசப் படுத்தி நெஞ்சம்
இதங்கொளும் வகையில் ஆங்கே
.. இயங்கிடும் அழகின் காட்சி!
சதங்கைகள் ஒலிக்க மன்றில்
.. சாதனை செய்யும் மங்கை
விதம்பல வாறாய் ஆடும்
.. வித்தைகாண் விழிகள் அங்கே! (4)

யாரவள்? இன்பத் தீயை
.. எறிந்தவள்! யாப்பில் சேர்ந்த
சீரவள்! தமிழின் தேனாய்
.. தெளிந்தவள்! நட்டம் ஆடும்
தேரவள்! நெஞ்சை அள்ளத்
.. தெரிந்தவள்! கான்வீழ்ந் தோடும்
நீரவள்! புதைந்து நெஞ்சில்
.. நெளிந்தவள்! நிலவோ ஆங்கே! (5)

காவியம் ஒன்றை மன்றில்
.. கண்களால் பாடி ஆடும்
பூவினள் நடனம் கண்டே
.. பூத்தனன் ராமை யாவும்!
மேவினன் முன்னர்; அந்த
.. மேடையின் பக்கம் நோக்கி
தூவினன் மலர்கள்! நெஞ்சின்
.. துண்டுகள் அவைகள் ஆமே! (6)

காரிகை அவள்தான்! முன்னர்
.. கனவினில் கலைந்த தோகை!
நீரினில் எழுத்தாய் வந்தோள்
.. நிஜமென எதிரில் வந்தாள்!
தூரிகை வரைந்த தீயில்
.. துகிலதே எரிதற் போலே
நேரிலே கனவு மெய்யாய்
.. நிகழ்ந்திடக் கண்டான் ஆங்கே! (7)

கன்னியின் பதங்கள் ஆடிக்
.. காட்டிடும் பதங்க ளெல்லாம்
தன்னுளே பதியக் கண்டான்!
.. தன்னிலை மறந்தி ருந்தான்!
மன்றிலே அவனோ டாங்கே
.. மங்கைதான், யாரு மில்லை,
என்னுமோர் நிலைமை கொண்டான்,
.. எழில்விழி இயைந்த தாலே! (8)

ஆடினள்! அவன்றன் கண்கள்,
.. அவளுடல் நளினம் காட்டும்!
ஓடினள்! உடன்கண் ஓடும்,
.. ஒவ்வொரு அடியைச் சார்ந்தே!
பாடினள்! பார்வைச் சொல்லாய்ப்
.. படித்திடும் அவன்றன் கண்கள்!
நாடிடும் திசைக ளெல்லாம்
.. நகர்ந்திடும் கண்கள் தாமே! (9)

இளமகன் பார்வை யாலே
.. இளமகள் உடல ளந்தான்!
உளியினால் துளைக்கச் சிற்பம்
.. உயிருடன் எழுதற் போலே
தளிருடல் தளரா தாடும்
.. தமிழ்மகள் தேகம் தன்னில்
ஒளியுடை கண்கள் வந்தே
.. உலவிட உணர்வுற் றாளே! (10)

சேர்ந்திரு கண்கள் தன்மெய்த்
.. தீண்டிடத் திகைத்து நின்றாள்!
பார்வைகள் ஐந்தாய் மாறிப்
.. பாய்ந்தன புலன்கள் தம்மில்!
சோர்ந்தன கைகள், மெல்லத்
.. தொய்ந்தன கால்கள்! நெஞ்சில்
ஊர்ந்தன உணர்வு கோடி!
.. உடைந்தவள் வீழ்கின் றாளே! (11)

வீழ்ந்தனள்! இளவல் மேடை
.. விரைகிறான் அவளைத் தாங்க!
தாழ்ந்திடும் ஆம்பல் தன்னைத்
.. தாங்கிடும் தண்ணீர் போலே!
சூழ்ந்தனர் மக்கள் ஆங்கே!
.. தொடர்ந்திடும் தலைகள் கூட்டம்!
ஆழ்ந்தநல் குளத்தில் நாரை
.. ஆயிரம் சேர்தல் போலே! (12)

கரும்புவில் நாணின் றேகும்
.. காமனின் அம்பைப் போலே
துரிதமாய் ராமை யாவின்
.. துடித்திடும் உள்ளம், தன்னைப்
பிரித்தவன் உடலை ஏவிப்
.. பிழறுமக் கால்கொள் மங்கை
தரைதனில் வீழா வண்ணம்
.. தாங்கிடச் செய்த தாங்கே! (13)

நாட்டியம் முடிந்த தாங்கே!
.. நங்கையோ நலிந்த வன்றன்
கூட்டிய கரங்கள் தாங்கக்
.. கொண்டவன் கண்கள் தன்மேல்
தீட்டிடும் வண்ணம் கண்டாள்!
.. சிந்தையைக் கவர்ந்து நின்றோன்
மூட்டிய மோகத் தீயில்
.. மூழ்கினள்! முகிழ்த்த தன்பே! (14)

ஏற்றினன் மோகத் தீபம்!
.. எரிந்தன இருவர் உள்ளம்!
காற்றினை இமைகள் வீசக்
.. கண்களில் வளரும் தீயாய்
ஆற்றினர் பார்வைப் பேச்சை!
.. அதில்மனம் உருகி ஆங்கே
தோற்றனர் இருவர்! பின்னர்
.. தொடர்வது காதல் தானே? (15)

நொடிதனில் நடக்கும் இந்த
.. நுண்ணருங் காவி யத்தைப்
படித்தவர் இருவர் மட்டும்!
.. பார்த்தவர் யாரும் இல்லை!
கொடுத்ததும் பின்னர் கண்ணால்
.. கொண்டதும் எண்ணிப் பார்ப்பின்
எடுத்ததும் கோடி! ஆங்கே
.. இழந்ததும் கோடி யாமே! (16)

தாளினில் சதங்கை ஆடும்
.. தங்கமான் நடன மங்கைத்
தோளினைத் தாங்கி நின்ற
.. துணிவுடை ராமை யாவை
வேளவன் குடியைச் சார்ந்தோர்
.. விலக்கினர்; விலகும் கூட்டம்
'கேளவன் யாரெ'ன் றாங்கோர்
.. கேள்வியை உதிர்த்த வாறே! (17)

மையமாய் அமர்ந்த வேளன்
.. மன்றினைக் கேட்டான், 'பெண்ணைக்
கையினால் தாங்கி யோன்யார்?'
.. கணத்தினில் மொழிந்தான் கோபால்,
'ஐய!நான் அறிவேன்! இங்கே
.. அணங்கினை ஏந்தி நின்றோன்
ஆயனின் அடுத்த செல்வம்!
.. அறிவிலான், ராமை யாவே!' (18)

கொதித்தது கூட்டம்; பெண்ணைக்
.. கொண்டஅவ் வாயன் தன்னை
எதிர்த்திடும் போக்கில் கோபால்
.. எழுந்ததிடக் கண்டு வேளன்,
'மதித்திடும் மாண்பை ஏனோ
.. மறந்தனை? திருவி ழாவைச்
சிதைத்திடும் போக்கை விட்டுச்
.. சிந்தைசீர் செய்'யென் றானே! (19)

ஆத்திரம் கொண்ட வேளர்
.. அரங்கினுள் சேர காளை
மாத்திரம் ஆங்கே காதல்
.. மயக்கினில் இருக்கக் கண்டு
காத்திட வேண்டி வேலன்
.. காளையின் கரங்கள் பற்றிக்
கூத்தெழும் மன்றம் விட்டுக்
.. குழுவுடன் விலகி னானே! (20)

யாரவள்? தேனார் பூவோ?
.. எனக்கெனப் பிறந்தாள் போலும்!
பேரென? என்றே கேட்கப்
.. பெரியவன் வேளன் பெற்ற
தேரவள்! என்றான் வேலன்!
.. தேன்மொழி அவளின் பேரே!
பேரிடர் தன்னில் நம்மை
.. பிணைந்திடப் பார்த்தாய் அன்றே! (21)

கண்களின் வழியே மெல்ல
.. கன்னியின் நெஞ்சம் சேர்ந்து
திண்மையாய் அமர்ந்த உள்ளம்
.. திரும்பியவ் வுடலம் சேரும்
எண்ணமே இல்லை போலும்!
.. இருகணும் ஏதோ பார்க்கும்
வண்ணமாய் இருந்தும் காளை
.. வசமிலை உடலும் ஆங்கே! (22)

சிலையென இன்னும் மங்கை
.. சிந்தையில் நின்றி ருந்தாள்!
வலைதனில் வீழ்ந்த மீன்போல்
.. வாலிபம் வருந்தித் துள்ளும்
நிலையினில் காளை; நண்பர்
.. நிழலென இருந்தும் காதல்
அலையினால் அடித்துச் செல்ல
.. அந்நிய னாகி னானே! (23)

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.