skip to content

தீக்குளியல்(காரிருளில் போதான காதல்)

தீக்குளியல் :: படலம் 5 :: காரிருளில் போதான காதல்
எண்சீர் விருத்தம் (காய் காய் மா தேமா அரையடி அமைப்பு)

அரங்கத்தில் தன்னுடலை அணைத்து நின்றோன்
.. அவன்கண்கள் பேசுமொழி அறிந்தாள்! கண்கள்
கிரங்கத்தன் உள்ளத்தைக் கிளர்ந்தோன் யாரோ?
.. கேள்விக்கு விடைதேடிக் கிடந்தாள்; நெஞ்சச்
சுரங்கத்துள் பலநூறு சுரங்கள் தோன்ற
.. சுகராகம் புதுப்புதிதாய்ச் சுகித்தாள்; காளை
மரங்கொத்திப் புள்ளன்ன மன்றம் தன்னில்
.. மனங்கொத்திப் போயுமிவள் மகிழ்ந்தாள் ஆங்கே! (1)

வீணைக்கும் செவியுளதோ? விரல்கள் தன்மேல்
.. விளையாட எழும்சுரத்தில் வியந்தி ருந்தாள்!
ஆணைக்கும் பணிந்திடுமோ அன்பு? நெஞ்சம்
.. அசைத்தவனை அசையிட்டாள்; அடிமை யுற்றாள்!
ஊணுக்கும் பசியுண்டோ? உடலைக் கண்ணால்
.. உண்டவனை எண்ணிஇவள் உறக்கம் கெட்டாள்!
ஆணுக்குள் இச்சுகங்கள் அடங்கும் என்றே
.. அறியாத பேதைஇவள் அறிந்தாள் அன்றே! (2)

கண்ணுக்குள் பிம்பமவன்! கன்னி நாவில்
.. கற்கண்டாய் இனிப்புமவன்! காதி லூறும்
பண்ணுக்குள் சுரமுமவன்! பரதம் ஆடும்
.. பாவையிவள் பதத்திலவன்! பாதம் காணும்
மண்ணுக்குள் மலருமவன்! மயங்கும் மங்கை
.. மனத்துக்குள் மகிழ்ச்சிஅவன்! மௌனம் ஆகிப்
பெண்ணுக்குள் காதலெனும் பேரி ரைச்சல்
.. பெருகிடத்தான் செய்கின்றான்! பேதை பெண்ணே! (3)

விதைநெஞ்சில் விழுங்கணமே விருட்ச மாகி
.. விழுதோடிக் கிடக்கின்றான்! வேரோ பெண்ணின்
சதைநெஞ்சில் நரம்பொடிக்கும் சக்தி கொண்டே
.. தானாய்த்தன் இடம்தேடி தன்னைச் சேர்க்க
வதைநெஞ்சின் வலிபொறுக்கா வனிதை ஆங்கே
.. வாலிபத்தின் விளையாட்டால் வாட லானாள்!
இதைநெஞ்சில் செய்தவன்யார் என்றே கேட்க
.. இவள்பாங்கி அவன்பெயரை இயம்பி னாளே! (4)

'கணங்கொண்ட என்நெஞ்சில் காதல் தீயைக்
.. கடைகின்ற மத்தானான் காளை! இந்த
அணங்குக்கோர் மலர்மாலை அங்கை ஏந்தி
.. அவனிங்கே வரவேண்டும்! அவனே முன்னர்
மணங்கொண்டான் எனவாகின் மரணம் கொள்வேன்!
.. மனங்கொண்ட காரணத்தால் மங்கை என்றன்
பிணங்கொண்டு செல்லட்டும்! பின்னர் ஊரார்
.. பிழையென்க!' எனமங்கை பிதற்றி னாளே! (5)

நாளறுக்கும் நிலவுமெல நடக்கும் வானில்
.. நகர்முகிலாய் அவனாங்கே நடக்கக் கண்டாள்!
சாளரத்தின் சீலைதனைத் தவழ்ந்து தென்றல்
.. சரசரக்க அவன்பேச்சாய்ச் சலன முற்றாள்!
ஆளறுக்கும் நொடிகளவை! அவனை நெஞ்சில்
.. அணைக்கின்ற போதெல்லாம் அறுந்து பட்டாள்!
தேளிருக்கும் தேன்மொந்தை தானோ காதல்?
.. தீஞ்சுவையைக் கொட்டியின்பம் சேர்க்கு தம்மே! (6)

விண்மீனாய்க் காண்கின்றாள்! விட்டில் ஈர்க்கும்
.. விளக்கிழையாய்க் காண்கின்றாள்! வேட்கை தீர்க்கும்
தண்ணீராய்க் காண்கின்றாள்! தன்முன் தூண்டில்
.. தனில்புழுவாய்க் காண்கின்றாள்! தானாய்ப் பொங்கும்
கண்ணீராய்க் காண்கின்றாள்! கணைகள் ஏவும்
.. கடும்வில்லாய்க் காண்கின்றாள்! கருவான் விட்டு
மண்ணூரும் மதியெனவாய் மதிலைத் தாண்டி
.. வருமவனைக் காண்கின்றாள் மகிழ்ச்சி யோடே! (7)

மதிலேறி குதிக்குங்கால் மன்றின் மேலே
.. மலைத்தபடி தனைநோக்கும் மங்கை கண்டான்!
'எதிராய்நான் வருவேனென் றெவ்வா றாங்கே
.. இருந்தபடி அவளறிந்தாள்?' என்றே நெஞ்சில்
புதிரோங்க ராமையா பூரித் துள்ளம்
.. புன்னகைத்தான்! தேன்மொழியாள் புரிந்து கொண்டாள்!
மதியாக மன்றின்மேல் மடந்தை தோன்ற
.. மறைந்ததுவே வான்நிலவும் மயக்க முற்றே! (8)

இதழ்துடிக்க இயம்புகின்றாள் ஏதோ வஞ்சி!
.. இவன்செவிக்குள் அவள்சொற்கள் ஏற வில்லை!
பதம்பிடித்து காட்டுகின்றாள் பாவை மெல்ல!
.. பட்டென்று இவன்பிடித்தான் பார்வைச் சொல்லை!
மதம்பிடித்த யானையதன் மயக்கம் கொல்லும்
.. மதியெனவே மங்கையவள் மாடத் தின்மேல்!
இதம்கொடுக்கும் கள்ளுண்ட இதயம் போலே
.. இனிக்கின்றான் அவளினிப்போ டிவனும் சேர்ந்தே! (9)

எப்படித்தான் தொடங்குவதென் றெண்ணிப் பாவை
.. 'இயம்புன்றன் பெயரேதோ?' என்றாள் மெல்ல!
'தப்படிஎன் பெயருனக்குத் தேவை இல்லை!
.. தாமரையின் பெயர்தெரிந்தா சாரும் வண்டு?
அப்படித்தான் ஆகுமெனின் ஆயன் வீட்டில்
.. அடுத்ததலை ராமையா அடியேன்' என்றான்!
'இப்படித்தான் மதிலேறி இரவைக் கொல்லும்
.. இயல்புமக்கு முறையாமோ?' என்றாள் பெண்ணே! (10)

களவாடிச் சென்றுள்ளாய் கண்ணே நெஞ்சை!
.. காரிருளில் அதைமீட்கக் கரந்து வந்தேன்!
உளமேவி உயிர்கொல்லும் ஊமைப் பெண்ணே!
.. ஒருசொல்லை உன்னிதழ்கள் உரைக்கா தாமோ?
வளமான கலைதேர்ந்த வஞ்சி உன்றன்
.. வாயாட வார்த்தைகளும் வாராப் போமோ?
உளமாற உன்னெஞ்சில் உறைய எண்ணும்
.. உண்மையினை உன்னிடத்தே உரைத்தேன் இன்றே! (11)

'சொல்வதெலாம் உரையில்லை!' சொன்னாள் கன்னி!
.. 'சுகிக்கின்ற மௌனமதே சுத்தக் காதல்!
அல்வெளியில் உனைக்கண்டேன்! அடுத்த வேளை
.. அருகிங்கே நிற்கின்றாய்! அன்பே அன்றோ?
நல்வழியில் வாராதேன் நாட்டம் கொண்டு
.. நள்ளிரவில் வருகின்றாய்? நகரம் காக்கும்
வல்வேளர் உனைக்கண்டால் வதைத்தெ டுப்பார்!
.. வந்தவழி செல்'லென்றாள் வஞ்சி ஆங்கே! (12)

'வாண்ணூறு தருமச்ச வரம்பின் மேலாய்
.. வளரச்சம் உன்விழியில்! வாட்டம் ஏனோ?
ஆண்ணூறு கோடியென்னே? அணங்கே என்றன்
.. அண்மையிலே நீயிருக்க அச்ச மில்லை!
காண்!வான நிலவதுநம் காதல் சாட்சி!
.. களித்திருப்போம் கவலையறு!' காளை சொல்ல
நீண்மாடப் பெண்,பகன்றாள் 'நிலவு தேயும்!
.. நிற்கின்ற சாட்சிஅது நீயே நீயே!' (13)

நீதானே என்மதி!நீ நிலைத்து விட்டாய்!
.. நெஞ்சமெனும் காம்பதன்மேல் நீண்டு மேலே
போதாடி வருவதைப்போல் பூத்தாய்! சோரும்
.. போதாடி என்நெஞ்சைப் புலர வைத்தாய்!
ஓதாத ஒருமறையாய் உணர்வில் ஓடி
.. உரைகாணாப் பொருளெல்லாம் உரைத்து நின்றாய்!
ஆதாரம் நீயென்றே ஆகி என்னுள்
.. அழியாத ஓவியமாய் ஆனாய் அன்றே! (14)

காரிருளில் நடப்பதனால் கனவோ இஃது?
.. காளையவன் மனத்துக்குள் கலக்கம் தோன்ற
தாரகையாள் நின்றிருந்த சாரம் கண்டான்;
.. தனைநோக்கி அவள்பார்க்கத் தானும் பார்த்தான்!
தூரிகையின் வண்ணங்கொள் துளிகள் போலே
.. தூய்மகளாள் விழிநீரைத் துளிர்த்தாள்; அஃதோ
நேரடியில் நிற்குமவன் நெஞ்சில் வீழ
.. நிச்சயந்தான் காதலென நெகிழ்ந்தான் அன்றே! (15)

கரையாதே காரிகையே! கண்ணில் நீரைக்
.. காண்பதற்காய் வரவில்லை! காதல் நெஞ்சின்
உரையாற்ற வந்தேன்நான்! உறைந்து விட்டேன்!
.. உயிர்தூண்டும் வளியானாய்! உனையே உண்டேன்!
திரையாட்டும் மேகங்கள் திங்கள் தன்னைத்
.. திருடித்தான் போவதைப்போல் தேனே உன்னைத்
தரைஈர்க்கும் வழிதேடித் தான்நான் வந்தேன்!
.. சாளரத்தின் நிலவேநீ தரைகாண் பாயே! (16)

தரையேனோ? உன்கரங்கள் தாங்க வேண்டித்
.. தவிக்கின்றேன்! தணியாத தாகம் கொண்டேன்!
அரைகுறையாய் நாம்கூடின் அர்த்தம் இல்லை!
.. அதுநல்ல திருமணத்தால் அமைதல் வேண்டும்!
விரைவாய்நீ நாள்குறிப்பாய்! விடியும் அன்றே
.. விழைந்துன்னை அடைவேன்நான்! வேண்டும் அந்நாள்
வரைநீயும் எனைநினைந்து வாழ்க! என்னுள்
.. வாடாத காதலதும் வளரும் அன்றே! (17)

காரிகையின் சொற்கேட்டுக் களிப்படைந்தான்!
.. காரிருளில் போதான காதல் கொண்ட
ஈருளங்கள் ஒருபோக்கில் இயங்கக் கண்டான்!
.. இவனுளத்தின் எண்ணம்அவள் இயம்பக் கண்டான்!
போருளத்தில் எழுந்ததுவோ? புயலோ? பூவோ?
.. புரியாத போதைதனுள் புதிதாய்க் கண்டான்!
நீருருள சிறுங்கற்கள் நெரிக்கும் போக்கில்
.. நினைவுகளே நெரிக்கமனம் நெகிழ்ந்தான் அன்றே! (18)

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.