skip to content

நெஞ்சே அரனை நினை!

வாழ்த்து

அண்டப் பெருவெளியாய் ஆடும் சிதம்பரனே
எண்ணத்துள் சற்றே எழுந்தருள்வாய் - பண்ணடுக்கி
நின்றன் புகழ்கூறும் நீள்கவிதை நான்படைக்க
என்றன் எழுத்தாய் இரு

நெஞ்சே அரனை நினை!

வளரறிவாய் ஞானத்து வான்சுடராய் உன்னுள்
ஒளிர்குருவைக் காணாதென் உற்றாய்? - களர்நெஞ்சே!
நித்தமவன் பேர்சொல்ல நின்றுனக்குள் தீயாவான்!
அத்தனுக்கு நீயே அகல்! (1)

அகல்வதுதான் மெய்யாகின் அஞ்ஞானச் சொற்கள்
பகிர்வதனால் ஏதுபயன் பாரில்! - புகல்நெஞ்சே!
கண்ணுதலான் சீர்பாதம் காட்டும் பெருவழியை!
அண்டமெலாம் ஓரணுவாம் அங்கு! (2)

அங்கிங்காய் எங்கும் அவன்வைத்த ஐம்பொறிக்குள்
தங்கித்தான் நீயும் தடம்புரண்டாய்! - மங்குநெஞ்சே!
நன்றேதும் செய்யாக்கால் நாடகத்தின் நாள்முடியும்
அன்றேதும் மிஞ்சாதென்(று) அஞ்சு (3)

அஞ்சுதற் கேதுமிலை அண்டத்துள்; அவன்பதத்தை
விஞ்சுபொருள் இல்லை விரிவெளியில்! - கெஞ்சுநெஞ்சே!
நல்லார்க்கு வேண்டும் நலங்காட்டி நம்புவழி
அல்லார்க்கும் ஆற்றும் அடி (4)

அடிதேடி எங்கோ அலைந்தலைந்து மாயைப்
பிடியிலிழக் கின்றாய் பிறப்பை! - மடநெஞ்சே!
சித்தென்னும் மாயச் சிறைமீட்கும் காவலனாம்
அத்தன்றாள் ஒன்றே அடை (5)

அடையாத கண்ணுக்கும் அன்றருள் செய்த
கொடையாளன் தானன்றோ கூத்தன் - கடைநெஞ்சே!
என்றைக்கும் தப்பாமல் ஏத்திப் பணிகின்ற
அன்பர்க்(கு) அவனே அணி (6)

அணியணியாய் மாந்தர் அவமேற்று மாளாப்
பிணியையாய் ஏனிப் பிழைப்பு - பணிநெஞ்சே!
துன்புற்றோர் வந்து தொழுவாரேல் பிஞ்ஞகனின்
அன்புக்(கு) இலைகாண் அணை (7)

அணையாத தீஞ்சுடராய் ஆகியுடல் மேவித்
துணையாகும் ஒற்றைத் தொடர்பு - பிணைநெஞ்சே!
ஊகங்கள் செல்லா உயர்நிலைஆர் உத்தமன்றாள்
ஆகுங்காண் உன்றன் அரண் (8)

அரணாகி நிற்குமவ் வைம்புலன்கள் உன்னைக்
கரந்துறையச் செய்யும் கதையேன்? - விரைநெஞ்சே!
போற்றிஅரன் நாமம் புகழ்ந்தேத்து! வற்றாத
ஆற்றொழுக்காம் அத்தன் அருள் (9)

அருளுக்குப் பேர்தான் அவனாயின் அந்தப்
பொருளுரைக்கும் உண்மைப் பொருள்காண்! - இருள்நெஞ்சே!
தேனார்க்கும் சொல்லைத் தெரிந்துரைத்துப் பக்தியிலா(து)
ஆனார்க்கும் அன்பை அளி (10)

அளிந்தார்க்(கு) அமுதெவையும்; அன்பைப் பெருக்கித்
தெளிந்தார்க்குத் தீயும் தெளிதேன் - களிநெஞ்சே!
ஞானத்தில் மூழ்கி நனைகின்ற நாளரன்றாள்
ஆனந்த ஆழி அறி (11) (அளிந்தார் - அன்புடையார்)

அறிவென்றும் காணா(து) அருளுலகை; அன்புச்
செறிவதுவே சேர்க்கும் தெளிவை - வெறிநெஞ்சே!
நித்தமுன்றன் சிந்தையுளேன் நிந்தனைகள்? அன்பொழுக
அத்தனவன் தாள்பணிந்(து) ஆடு (12)

ஆடியவன் அண்டம் அடைக்கின்றான்! உட்குறுகிக்
கூடிநமைக் கோவிலெனக் கொள்கின்றான் - தேடுநெஞ்சே!
ஏனிப் பிறவியென எண்ணி நமதுருவாய்
ஆனப் பரம்பொருளை ஆய் (13)

ஆய்ந்தாய்ந்(து) அவன்பொருளின் ஆழம் கணிப்பதிலே
தேய்ந்தனகாண் மானுடத்தின் சென்மங்கள் - சேய்நெஞ்சே!
முன்னாடிச் சென்றோர் மொழிந்தவகை தாமுணர்ந்(து)
அன்பே சிவத்தொண்டென்(று) ஆற்று (14)

ஆற்றுப் பரப்பில் அடர்ந்தலையும் நாணலதில்
காற்றும் உரசிக் களிப்படையும் - போற்றுநெஞ்சே!
நல்லாரைக் காக்கின்ற நம்பன் அருள்மழையில்
எல்லார்க்கும் ஏற்றம்காண் இங்கு (15)

இங்கென்றும் அங்கென்றும் எண்ணும் இதயத்துள்
தங்கும் குணங்கொண்ட தாராளன்! - தங்கநெஞ்சே!
மன்றம்நீ! உள்ளே மகிழ்ந்தாடும் கூத்தனுக்கோ
என்றைக்கும் ஏற்ற இடம் (16)

இடம்தந்த வல்லான் இவனன்றோ, அந்த
உடல்கொண்டோன் பாதத்தில் ஓம்ஓம்! - மடநெஞ்சே!
கூத்தின் தலைவன் குழலசைய ஆடுவதை
ஏத்திக்காண் உன்னுள் இதம் (17)

இதமென்றே வீணில் இழப்பேன்? நலம்காண்
விதமென்றே வேண்டா விழைவேன்? - மதநெஞ்சே!
கண்ணுதலான் உள்ளே கனிவோடு காத்திருக்க
எண்ணிப்பார் ஏனோ இது (18)

இதுவென்றே மாந்தர் எடுத்துரைக்கும் ஏதோ
அதுவாகி நிற்கின்றான் அத்தன் - மதநெஞ்சே!
இல்லாது சொல்வார்க்கும் ஏய்ப்பார்க்கும் நன்னெறிகள்
இல்லார்க்கும் இல்லை இறை (19)

இறையோன் பதம்காண் எளியோர்தம் வாழ்வு
குறையேதும் இல்லாக் கொடையாம் - நிறைநெஞ்சே!
துன்பத்தின் நீண்ட தொடரறுந்து துய்ப்பதற்கே
இன்பத்தின் ஏற்றம் இனி (20)

இனிக்கின்ற யாவும் இறையருளால்; நம்முள்
தொனிக்கின்றான் நாதன் சுடராய்! - நினைநெஞ்சே!
அள்ளுங்கை ஓரத்(து) அலைகின்ற நீரொத்த
உள்ளுயிர்ப்பின் கோயில் உடல் (21)

உடல்பெருக்கி என்கண்டாய் ஓங்காரன் பாதத்
தடம்வணங்கி இப்பிறப்பைத் தாண்டு - விடநெஞ்சே!
கொள்ளத் தகாதகற்றிக் கொள்ளத் தகுந்தவற்றின்
உள்ளார் அமுதத்தை உண் (22)

உண்டென் றுரைத்திடுவார் உள்ளத் தொளியாகிக்
கண்டறிந்தோர் கண்வழியே காண்கின்றான் - எண்ணெஞ்சே!
கள்ளத்தைப் போக்கிநிதம் கண்ணுதலான் தாளிரண்டை
உள்ளத்தின் உள்ளே உணர் (23)

உணர்வழிந்து மெல்ல உடலிளைத்துச் செல்லும்
கணம்கலையும் நம்வாழ்க்கைக் கானல் - பிணைநெஞ்சே!
கன்று பசுதேடிக் காதலுறும் காலரன்றாள்
ஒன்றித் தொழுதேத்தி உய் (24)

உய்வதற்கும் ஓர்வழிதான், ஒண்டுதற்கும் ஓர்வழிதான்,
செய்வதற்கும் ஓர்வழிநான் செப்புகின்றேன் - மெய்ந்நெஞ்சே!
அண்டியெந் நாளும் அரன்றாளை வந்திப்போர்க்(கு)
உண்டென்றும் காண்பாய் உயர்வு (25)

உயர்வெண்ணிப் பாதை உணர்வோர்க்கு நேரும்
அயர்வென்னும் மாயை அகலும் - முயல்நெஞ்சே!
எல்லாரும் ஈசனடி ஏத்துங்கால் இன்பத்தில்
உல்லாசம் காணுமே ஊர் (26)

ஊர்கண்டு சேர்வார் உயர்நிலையை, நீண்டபெரு
வேர்கண்டு தேர்வார் விருட்சத்தை! - பார்நெஞ்சே!
தேடியோர் மூலத்தைத் தேர்ந்து தெளிந்திடுவாய்,
ஓடும் நதிக்(கு)அரனே ஊற்று (27)

ஊற்றென வாய்ப்பெருகும் ஊழிவழிக் காலமதில்
நேற்றின்று நாளையிவை நீண்டுசெலும் - போற்றுநெஞ்சே!
கூற்றுவன்மேல் கால்பதித்த கூத்தனவன் தாளிணையை
ஏற்பாயேல் தீதகலும் எண் (28)

எண்ணத்தில் நின்றுள் எழுகின்ற சிந்தையதன்
வண்ணத்தைக் காட்டும் வளம்பெரிதே! - உண்நெஞ்சே!
சோகமனம் கொண்டேன் துவள்கின்றாய் வாலறிவன்
ஏகனவன் இன்றேல் எது (29)

எதுவென் றறியா(து) இழக்கின்ற போக்கில்
அதுவாக நாட்கள் அழியும் - மதநெஞ்சே!
அன்றென்றே கூறி அலைகின்றாய், ஏகன்றாள்
இன்றேனும் ஏற்பாய் எழு (30)

எழுச்சியும் வீழ்ச்சியும் ஈசன்றன் தாள்சேர்
வழிபயில வாய்த்த வழக்கே - தொழுநெஞ்சே!
நாதன்றாள் ஏத்தி நலங்காணும் வாழ்வேற்போம்;
ஈதன்றி இம்மையில் என் (31)

என்றிம்மண் நாம்பிறப்போம் என்றறியோம்; நாள்நகர்த்தி
என்றிம்மண் விட்டகல்வோம் ஈதறியோம் - நன்னெஞ்சே!
திண்ணம் அரனவனே, சேர்நிழல்தாம் நாமென்றே
எண்ணுவார்க் கின்னல்கள் ஏது (32)

ஏதும் அறியாமல் எல்லாம் அறிந்தவர்போல்
போதையில் வாழ்நாளைப் போக்குகின்றோம் - ஓதுநெஞ்சே!
மோகத்தைப் போக்கும் முழுமுதல்வன் பேர்பாடி
ஏகுவோம் நல்வழியை ஏற்று (33)

ஏற்றத்தாழ் வென்னும் இயல்புடைய மண்ணுலகில்
சோற்றுக்காய் வாழும் சுழற்பிறப்பேன் - போற்றுநெஞ்சே
சொத்தென்(று) அவன்றாள் தொழுவோர்க்குத் தொல்லையிலை;
அத்தனன்றோ அண்டத்தின் ஐ (34)

ஐயாவென்(று) ஏத்த, அருள்கின்ற தேவனுக்குக்
கைம்மாறென் றேதுண்டு காணுலகில் - பொய்ந்நெஞ்சே!
போங்காலம் ஆமதற்குள் போயுணர்வோம், தீதழிக்கும்
ஓங்கார நாத ஒலி (35)

ஒலிக்கின்ற வேதமாம் ஓங்கார நாதன்,
ஜொலிக்கின்ற ஜீவசுக ஜோதி! - மலநெஞ்சே!
கண்மூடி ஏத்திக் கரங்குவிக்கின் நிர்மலமாய்
உண்டாகும் உள்ளோர் ஒளி (36)

ஒளியாகி மாயைதனை ஓட்டவல்ல சிந்தைத்
தெளிவாய்த் திகழ்கின்ற தேவன் - களிநெஞ்சே!
கன்றுன்றன் துன்பறிந்து காதலாற் காப்பவன்றாள்
ஒன்ற மனமகிழ்ந்(து) ஓடு (37)

ஓடுநதி ஏற்ற உமைகோனை உள்ளுருகி
நாடுகின்ற அன்பருளம் நானழிக்கும்! - தேடுநெஞ்சே!
ஆங்கார மாமமதை அஃதழிய கண்ணுதலான்
ஓங்கார நாதமதை ஓது (38)

ஓதும் மறையாகி உள்ளார் பொருளாகி
நாத வடிவமைந்த நாயகனாம் - பேதைநெஞ்சே!
ஏத்திப் பணிவோர்தம் இன்னல்கள் தாமழித்துக்
காத்திடும் அத்தன் கழல் (39)

கழலிணையைக் காணாது காரிருளில் மூழ்கி
நிழலுருவாய் ஏனொளிந்து நின்றாய்! - உழல்நெஞ்சே!
மண்ணுற்ற நாள்முதலாய் மாதேவன் பேர்மறுத்தென்
கண்ணுற்றாய் காண்வெறுங் காடு (40)

காடேகி நீறாய்க் கலைந்தழிவோம் என்றறிந்தும்
நாடோறும் நன்றாய் நடிக்கின்றோம்! - நாடுநெஞ்சே!
எண்ணிஅவன் நாமம் இயம்புவார் துன்பகற்றிக்
கண்ணுதலான் காத்தருள்வான் காண் (41)

காண்பார்க் கருளும் கனியமுதப் பெம்மானின்
மாண்பறியா தேனோ மருள்கின்றாய் - வீண்நெஞ்சே!
உண்டுணர்ந்(து) உய்த்தோர் உரைக்கும் கனியமுதைக்
கண்டுணரா நெஞ்சார்க்குக் காய் (42)

காய்தல் உவத்தலிலாக் கண்ணுதலான் தாளுள்ளித்
தோய்வார்க்கி யாவும் துலங்கொளியாம் - ஆய்நெஞ்சே!
பூண்டார்க்குப் பொய்யே புனைமகுடம்; கண்மூடிக்
காண்பார்க்கி யாதுமே கார் (43)

கார்க்கண்டன் தாளிணையைக் கண்டு தொழுதேத்திச்
சேர்க்கும் அருளதுவே தெள்ளமுதம்! - பார்நெஞ்சே!
ஞானத் தெளிவாகி நம்வாழ்வாம் வேய்ங்குழலுள்
கானத்தைக் கூட்டுமவன் காற்று (44)

காற்றுண்ட காயத்தின் காலக் கரமசைத்து
நேற்றின்றாய் இக்கடலில் நீந்துகின்றோம் - போற்றுநெஞ்சே!
எண்டோளன் எண்ணத்தில் எவ்வழியோ அவ்வழியைக்
கொண்டாடும் ஆன்மத்தின் கூடு (45)

கூடுலவும் ஆன்மங்கள் கோவன் பதமலரைத்
தேடியடைந் தன்றோ தெளிவேற்கும் - நாடுநெஞ்சே!
நாட்கடத்தி யாது நலம்கண்டாய்; ஓங்காரம்
கேட்பாயேல் அற்றொழியும் கேடு (46)

கேடுற்ற எண்ணத்தால் கேளிர் தமையழிக்க
ஆடும்பேய் ஆட்டம் அமராமோ - பாடுநெஞ்சே!
நாமடங்கும் போதெல்லாம் நம்பன் புகழுரைத்துத்
தாமடங்கல் ஒன்றே சமர் (47)

சமர்செய் புலனைந்தும் தானென்னும் போக்கும்
உமைத்தின்னும் ஓர்நாள் உணர்நீ - சுமைநெஞ்சே!
பொங்கிப் பொதியாகி புண்பெருக்கும் தீதகல
சங்கரன் தாளே சரி (48)

சரியென்றும் தீதென்றும் சாய்ந்தாடும் கோலாம்
புரியாத எண்ணத்தின் போக்கு - கரிநெஞ்சே!
வீம்புக்கு நீயேன் விலைபோனாய்? கைகூப்பிச்
சாம்பனின் தாள்நோக்கிச் சாய் (49)

சாய்ந்து தொழுதேத்தும் தன்னன்பர் உள்ளத்தில்
பாய்ந்தோடும் வெள்ளம் பரமவனே! - சேய்நெஞ்சே!
கோளுலவும் அண்டம் குவலயத்தைக் காக்கும்அரன்
தாளிணையே என்றெண்ணிச் சார் (50)

சார்ந்தார்க்(கு) அவனடியே சாரம்; உளங்கலங்கிச்
சோர்ந்தாரைத் தேற்றும் துணையுமவன் - நேர்நெஞ்சே!
காவென்று கெஞ்சிக் கசிந்துருகித் தாழ்த்திடுவோம்
தீவண்ணன் தாட்கண் சிரம் (51)

சிரமென்ன தாளென்ன சீர்பெற்ற வாழ்வில்
அரனவனே ஆவான் அனைத்தும் - மரநெஞ்சே!
நிந்திக்கும் நோக்கறுத்து நேசித்(து) உலகவளம்
சிந்திப்பார்க்(கு) ஏதும் சிவம் (52)

சிவமொன்றே யாவும்! தெளிவோர்தம் வாழ்வில்
அவமென்றும் வாரா(து) அகலும் - குவிநெஞ்சே!
பந்தொத்(து) அலைந்தழிந்து பாதை மறந்துநிற்கும்
சிந்தைக்(கு) அவன்நாமம் சீர் (53)

சீர்கொண்டான்! பேர்கொண்டான்! சிந்தையாய் அன்பருளத்
தேர்கொண்(டு) அவர்பாதை சேர்க்கின்றான்! - நேர்நெஞ்சே!
போர்கொண்(டு) உனக்குள் புலன்விளைக்கும் துன்பனைத்தும்
தீர்க்கின்றான் தாள்போற்றச் செய் (54)

செய்வார்க்(கு) அவன்செயல்; சேர்வார்க்(கு) அவன்சிறப்பு;
மெய்யார்க்குள் வித்தாகும் மெய்யுமவன் - உய்நெஞ்சே!
ஆர்க்கின்ற பூங்கழலால் அண்டமெலாம் ஆனந்தம்
சேர்க்கின்ற தாளிணையைச் சேர் (55)

சேர்ந்தார்க்(கு) அருள்கின்ற தேவன் அவனன்பை
நேர்ந்தார்தம் வாழ்வில் நிசஇன்பம் - சார்நெஞ்சே!
பங்காய் உமையேற்றோன் பாதம் பணிவோர்க்குத்
தங்கா(து) அகலும் தடை (56)

தடையுன்றன் மேன்மை தகர்க்கின்ற போதெல்லாம்
விடையன்றன் தாள்வணங்கி வேண்டு - மடநெஞ்சே!
பொங்கும் குறையகற்றிப் பூரணச்சீர் இன்பமதைச்
சங்கரனின் தாளே தரும் (57)

தருவடியில் அன்றமர்ந்து தாரணிக்காய் ஞான
குருவடிவம் கொண்டருளும் கூத்தன் - இருள்நெஞ்சே!
நாளேய்த்துக் காலம் நகர்த்தாமல் என்றுமவன்
தாளேத்தும் வாழ்வே தவம் (58)

தவமதுவே, மண்ணில் தழைக்கின்ற யாவும்
சிவமயமாய்க் காண்கின்ற சீர்மை - அவநெஞ்சே!
தாயாய் உனையேற்பான் தாராளன் அஃதுணர்ந்து
சேயாய் அவன்றாள் திகழ் (59)

திகழ்கின்ற யாவும் சிவமென்போர் நல்ல
வகைகொண்ட வாழ்வென்றும் வாழ்வர் - தகைநெஞ்சே!
நல்லார்தம் வாழ்வோங்க நம்பன்றன் தாள்விடுத்துச்
செல்லார்காண் வேறு திசை (60)

திசைமேவும் மாயசுகம் தேர்ந்துழன்று பொய்யின்
வசமாகும் வாழ்வென்ன வாழ்வோ - நசைநெஞ்சே!
ஜீவன்கள் தோறும் திரண்டலைக்கும் பாவமதைத்
தீவண்ணன் தாள்வணங்கித் தீர் (61)

தீர்த்தருள வேண்டுமெனச் சேவடிகள் ஏத்தும்அடி
யார்குறைகள் தீர்த்தருள்வான் ஆனந்தன்! - சேர்நெஞ்சே!
சேர்ந்தார்க்(கு) அமுதத் தெளிவவனே; உட்கலங்கிச்
சோர்ந்தார்க்கும் ஆவான் துணை (62)

துணையேதும் இன்றிச் சோர்ந்(து)அவன்றாள் ஏத்திப்
பணிவார்க்(கு) அருளும் பரமன் - இணைநெஞ்சே!
போற்றோ(து) அவன்நாமம்; பூரிக்கும் இன்பமதில்
தோற்றோடும் காணுன்றன் துன்பு (63)

துன்பென் றுழன்றுழன்று தொய்ந்துடைந்து வீழ்கின்ற
அன்றுமவன் காப்பாய் அணைத்தருள்வான் - நன்னெஞ்சே!
ஆர்ந்தோங்கும் அன்பும் அரனருளால் இன்பநிலை
சேர்ந்தோங்கும் என்றே தெளி (64)

தெளியா(து) இலையென்னும் சிந்தாந்தத் தார்க்கும்
ஒளியாகி உய்வித்(து) உவப்பான் - களிநெஞ்சே!
விந்தை விரிவெளியாய் விண்ணார்ந்த பெம்மானைச்
சிந்தைப் பொறிவிரித்துத் தேடு (65)

தேடும் வகைமறந்து தீதார் வழிபயின்(று)
ஆடியேன் வாழ்வை அழிக்கின்றாய்? - மூடநெஞ்சே!
பாரேற்ற வாழ்வைப் படைத்தருளும் பெம்மான்றாள்
சீரேற்றப் பாதையதைத் தேர் (66)

தேர்ந்தார் அவன்றாளைத் தேர்ந்தாரே! நல்வாழ்வைச்
சார்ந்தார் அவன்றாளைச் சார்ந்தாரே! - நேர்நெஞ்சே!
நல்லுணர்வார் வந்திக்கும் நம்பனவன் தாள்போற்றிச்
சொல்லுணராத் தூரம் தொடு (67)

தொடுக்கின்றான் மாலை, தொடர்ந்தலரும் பூவாய்க்
கடக்கின்றோம் நாமும் கடலை - மடநெஞ்சே!
அன்றென்று நாட்கள் அழிக்காமல் அத்தன்றாள்
நன்றென்று நாடல் நலம் (68)

நலங்காணும் நோக்கும் நயவுரையும் நட்பும்
நிலங்காணும் நேசத்தின் நீதி - மலநெஞ்சே!
ஏனழிந்து போகின்றாய் ஏழைமையில்; உள்ளெழும்பும்
'நான்'அழித்(து) அத்தன்றாள் நாடு (69)

நாடும் நலமும் நயக்கின்ற நல்வாழ்வும்
கூடும் முறையொன்றே கோனுலகில் - வாடுநெஞ்சே!
வம்பென்றும் வாரா வழிசேர என்றென்றும்
நம்பன்றாள் போற்றட்டும் நாவு (70)

நாமணக்கச் சொல்வோம் நமசிவாயம் அஃதன்றி
பூமறக்கும் நாள்வரைசேர் புண்ணியமென்? - ஊமைநெஞ்சே!
ஆறணிந்த ஐயன் அவன்றாள் புகழ்போற்றி
நீறணிந்து வாழ்வோம் நிதம் (71)

நிதமுள்ளும் நல்ல நெறிகொண்டார் வாழ்வில்
இதமள்ளும் என்றும் இதயம் - மதநெஞ்சே!
மன்றார்த்து நாளும் மகிழ்விக்கும் பூங்கழலை
நின்றேத்(து) அதுவே நிலை (72)

நிலையென்றே(து) இவ்வுலகில், நீர்க்குமிழ்ப்போல் தோன்றித்
தொலைகின்ற தோற்றத் தொகுப்பே - அலைநெஞ்சே!
காயத்தால் ஏதுசுகம்; கண்ணுதலான் தாள்போற்றும்
நேயத்தால் கூடும் நினை (73)

நினையார்க்(கு) அதுபுதிராம், நெஞ்சிலவன் நாமம்
புனைவார்க்(கு) அதுவே புதையல் - முனைநெஞ்சே!
ஞாலப் புதிரவிழ்க்கும் ஞானவழி காண்பதற்கு
நீலகண்டன் தாளிணையை நேர் (74)

நேர்கின்ற யாவும் நிகழ்வாய்க் கணந்தோறும்
சேர்கின்ற ஏதுமவன் செய்கையன்றோ - தேர்நெஞ்சே!
ஞாலமன்ற வாழ்வின் நயம்காண உள்ளுள்ளிப்
பாலவன்றன் தாளிணையைப் பற்று (75)

பற்றெனும் மாயவலைப் பாதை விரித்துவைத்துச்
சுற்றும் சிலந்திகளாய்ச் சூழ்புலன்கள் - வெற்றுநெஞ்சே!
சூதுன்னை உண்ணாச் சுகங்காண சங்கரனின்
பாதமலர் உண்டென்றே பாடு (76)

பாடுற்றும் வாழும் பலமிழந்தும் பாலவனை
நாடும் வகையறியா நாடகமேன் - தேடுநெஞ்சே!
காரிருளில் நாமொடுங்கும் காலத்தும் உள்ளிருந்து
பார்வைதரும் பாவையவன் பார் (77)

பார்வந்த நாள்முதலாய்ப் பார்வைப் பிழைமாயை
வேர்கொண்ட நம்வாழ்வு வீணன்றோ - கார்நெஞ்சே!
எஞ்சும் தினமேனும் ஏத்தும் முறையேற்போம்
பிஞ்ஞகனால் நீங்கும் பிணை (78)

பிணைந்துனது சிந்தைப் பெருக்காகி ஆளும்
வணமுணர்ந்து போற்றுதுகாண் வையம் - அணிநெஞ்சே!
கன்னித் தமிழ்மொழியில் கண்ணுதலான் தாள்போற்றப்
பின்னும்தான் வேண்டும் பிறப்பு (79)

பிறக்கின்ற யாதும் பிறவிதொறும் வாழ்வில்
சிறக்கின்ற வாறமைக்கும் தெய்வம் - பொறுநெஞ்சே!
மெய்தாம் கதிரவனும் மேதினியும் ஆமாயின்
பொய்யா(து) அரன்றன் புகழ் (80)

புகழ்ச்சேர்க்கும் போதையொடு போதழித்துச் செல்வம்
மிகச்சேர்த்தென் கண்டாய்நீ மேன்மை - சுகநெஞ்சே!
ஏற்றம் பெறவேண்டின் ஏற்றவழி யாமரன்றாள்
போற்றும் செயலைப் புரி (81)

புரிந்தேதாம் செய்கின்றோம் புன்செயல்கள் கோடி
இருந்தும் அருள்கின்றான் ஈசன் - இருள்நெஞ்சே!
தீதேதும் எண்ணாத் தெளிவேற்று நாமேத்தும்
போதாகும் சொர்க்கம் புவி (82)

புவிசேர்த்த யாக்கை பொருள்புகழீன் போகம்
இவைசேர்த்(து) இறுமாந்தோம் என்றும் - அவநெஞ்சே!
வாங்கி வளஞ்சேர்த்தென், வற்றா(து) அருள்கின்ற
பூங்கழலின் மேலாமோ பொன் (83)

பொன்னொத்த வாழ்வில் புலன்மேயும் அத்தனையும்
தின்னத்தான் நீயோ தெளிவிலையோ - என்னெஞ்சே!
கோதிலா வாழ்வெண்ணிக் கோவன்றன் தாள்போற்றும்
போதிங்(கு) அலரு(ம்)நற் போது (84)

போதெனவே மெல்ல புறங்கிளைத்து வாய்மேவி
தீதுரையாய் வன்மம் தெறித்துறுத்தும் - சூதுநெஞ்சே!
வன்னெண்ணம் உன்னில் வளரா வழியேற்கப்
பொன்னார்ந்த மேனியனைப் போற்று (85)

போற்றின் புகழ்மணக்கும்; பூக்கின் புற(ம்)மணக்கும்;
ஆற்றுமறம் அஃதால் அக(ம்)மணக்கும் - சாற்றுநெஞ்சே!
'நான்'அடக்கி நாவால் நமசிவாயம் என்றுரைக்கும்
மானுடர்தம் வாழ்வே மணம் (86)

மணம்பரப்பி ஈர்க்கும் மலரன்ன பக்திக்
குணம்நிரப்பிக் கொண்டவனைக் கொள்வோம்- பணிநெஞ்சே!
என்றென்றும் ஆடி எழில்சேர்க்கும் கோவன்றன்
மன்றின்கண் ஆவோம் மலர் (87)

மலரடிகள் ஏத்தி மகிழுமடி யார்தம்
நிலவுகுறை நீளாது நீங்கும் - மலநெஞ்சே!
நீறணிந்த மேனியனை நின்றேத்தும் நாளன்று
மாறுமிந்த மானுடத்தின் மாசு (88)

மாசுற்ற வாய்மொழியால் மற்றோர் மனங்கசக்கி
நீசவழி ஏற்றேன்நீ நிற்கின்றாய்? - வேசநெஞ்சே!
ஓமென்னும் ஓரெழுத்தை உள்ளி உரைத்தரன்றன்
மாமன்றில் ஏத்திக்காண் மாற்று (89)

மாறும் கணந்தோறும் மாளா நதிநீர்ப்போல்
ஊறும் உணர்வில் உறைந்தருள்வான் - கூறுநெஞ்சே,
எக்காலும் மாறாதான் ஈசன் திருமுகமே
முக்காலும் ஆளும் முகம் (90)

முக(ம்)மறைத்துப் பொய்யை மொழிந்தின்பம் தேடும்
வகையிருந்தென் கண்டாய்நீ வாழ்வில் - சுகநெஞ்சே!
காலமெலாம் உண்மைக் களிப்பார்க்கும் வாழ்வமைய
மூலவன்றாள் ஏத்த முயல் (91)

முயன்றார்க்(கு) அவனமுது; முத்தமிழால் ஓதி
நயந்தார்க்(கு) அவனானான் நாதம் - மயல்நெஞ்சே!
தன்னிட்டப் போக்கில் தவிக்காது கோவன்றன்
முன்நிற்றல் ஒன்றே முறை (92)

முறையிழந்(து) ஏதேதோ முன்னியும் வேண்டும்
நிறைவதனைக் காணாது நின்றாய் - குறைநெஞ்சே!
காப்பாகி நிற்போன் கழலிணையைக் கண்டேத்து
மூப்புன்னை முந்துதற்கு முன் (93)

முன்னைக்கும் முன்னையவன், மொட்டாய் நிகழ்வெழுப்பும்
பின்னைக்கும் பின்னையவன் பிஞ்ஞகனே - என்னெஞ்சே!
ஆக்கி அருள்வோன் அவன்புகழைப் போற்றாத
யாக்கையினால் வேறுபயன் யாது (94)
yAkkaiyinAl kUdupayan yAthu

யாதுமாய் யாங்கணுமாய் யாருளத்தும் மேவுமனு
பூதியாய் உள்ளுயர்வான் பூரணன் - கோதுநெஞ்சே!
போற்றியவன் தாள்நாடு, பொய்யகற்றி மெய்யொளியாய்
ஆற்ற அவனின்றி யார் (95)

யார்யார்க்கும், நாடிஅருள் யாசிக்கும் அன்பருக்கும்,
சீர்சேர்க்கும் பாதை சிவனடியாம் - நேர்நெஞ்சே!
புந்திக்கும் மேலாகிப் பூரணமாய் உள்ளானை
வந்தித்தல் வாழ்வின் வகை (96)

வகைவகையாய் நித்தம் வளம்பலவும் சேர்த்துத்
தொகைநிலையாய் நம்மைத் தொகுத்தான் - சுகநெஞ்சே!
சிந்திக்கின் மெய்யாய்ச் சிவனடியை என்றென்றும்
வந்தித்தல் வாழ்வின் வரம் (97)

வரம்பெற்றோம், வாழும் வளமுற்றோம், எண்ணும்
திரம்பெற்றும் சிக்குற்றேன் தீர்ந்தோம் - உரைநெஞ்சே!
அந்திக்குள் கூடடையும் அன்றில்போல் அத்தன்றாள்
வந்திக்கின் வீழும் வலை (98)

வலைவீழ்ந்த மீனாகி வல்லைந்தால் போக
நிலையாழ்தல் ஆகாது நீதி - அலைநெஞ்சே!
முந்தைக்கும் முன்னவனாம் முக்கண்ணன் தாளிணையை
வந்தித்தல் வாழ்வின் வழி (99)

வழியொன்றே வாழ்வில், வரமென்(று) அரனைத்
தொழுகின்ற நோக்கைத் தொடர்தல் - எழுநெஞ்சே!
நந்திக்கு நாயகனாம் நம்பன்றன் நற்றாளை
வந்தித்து வாழ்வில் வளர் (100)

காப்பு

எல்லாம் அவனாகி இப்பிறப்பைக் காத்தருளும்
நல்லான் நமச்சிவாயன் நம்காப்பு - நல்லுலகில்
எஞ்சும் குறையகன்(று) ஏகாந்த வாழ்வுபெற
நெஞ்சால் அரனை நினை

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.