skip to content

பார்வைகள்

பார்வைகள் - சிறுகதை

"கல்யாணி, இன்னும் என்னடி செய்துகிட்டு இருக்கே? அவங்க எல்லாம் வர்ர நேரம் ஆகுது. சீக்கிரம் நல்ல புடவையா பார்த்து கட்டிட்டு தயாரா இரு", அம்மா கதறுவது, அவள் செய்துகொண்டிருக்கும் அந்த பஜ்ஜியின் வாசனையுடன் அடுப்படியில் இருந்து ஆறாவது முறையாக வந்தது.

என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. "அம்மா, உனக்கு எப்படி சொல்வேன்?", என என் வாய் முணுமுணுத்தாலும், அம்மா நேற்று இரவு சொல்லியது நினைவுக்கு வந்தது. "என் ஒன்று விட்ட மாமாவின் மகன்டி அவன். விண்மீண் டிவி-லெ ஏதோ கதாசிரியரா இருக்கானாம். ரெண்டு, மூணு புஸ்தகம் கூட எழுதி இருக்கானாம். மாமா தான் என் நிலமைய பார்த்து, ஒண்டிகட்டைய, உன் பொண்ணுக்கு எப்படி கல்யாணம் செய்துவைக்க போறே? பேசாம என் மகனுக்கே கட்டி கொடுத்துடுனு சொன்னார்".

இந்த முறை அம்மா கையில் கரண்டியுடன், நான் இருக்கும் அறைக்கே வந்தே விட்டாள். அவள் வந்த விதத்திலேயே என் சிந்தனைகள் உடைந்து, அலமாரியிலிருந்து புடவையை தேட ஆரம்பித்தேன். பளிச்சென்று தெரிந்தது அந்த நீலப்புடவைதான். "இந்த புடவையே எடுத்துக்க, உன் கலருக்கு எடுப்பா இருக்கும்" என்று சிவா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. அந்த புடவையை அலமாரியிலிருந்து எடுத்துக்கொண்டு அதற்கான பிளவுஸை தேடுகையில், "ஏன்டி, விவரம் கெட்ட பொண்ணே, பொண் பார்க்க வரும்போது, காட்டன் புடவையை கட்டுவாங்களா?" என்ற அம்மாவின் குரல் பின்னாலிருந்து தாக்கியது.

அழுது கொண்டிருந்த எனக்கு, கோபம் சுர் என்று வர அம்மாவை பார்த்து முறைத்தேன். அப்படிபட்ட முறைப்பை அம்மா இதுவரை என்னிடம் பார்த்திராததால், என் கண்களை தவிர்த்து, "அப்பன் இல்லாத பொண்ணாச்சேன்னு செல்லம் கொடுத்தது தப்பா போச்சு" என்ற முணுமுணுப்புடன் திரும்பவும் சமையலறை பக்கம் சென்றாள்.

கையிலிருந்த அந்த நீலப்புடவை மீண்டும் என் சிந்தனைகளை கிளறியது. சிவா, நான் வேலை பார்க்கும் ஜெராக்ஸ் கடையின் எதிரே உள்ள துணிக்கடையில் வேலை செய்பவன். சில்லரைக்காக ஒரு நாள் அந்த கடைக்கு சென்ற போது தொடங்கிய பழக்கம் பின் அதுவே மொத்தமாக கடற்கரை வரை வரும் என்று இருவருமே நினைக்கவில்லை. அன்று கடற்கரையில் அவன் என் கை பிடித்து என்னை மணம் செய்ய விரும்புவதாக கூறியது என் நினைவில் உள்ளது. "பைத்தியக்காரன் மாதிரி பேசாதே சிவா, என் கண்களை பார்த்த பிறகும் நீ இப்படி கூறுவது, கண்கள் உனக்கில்லையா அல்லது எனக்கில்லையா என்று யோசிக்கவைக்கிறது", என்று என் வாய் இப்போதும் முணுமுணுக்கிறது.

முகம் கழுவி, அந்த நீலப்புடவை அணிந்து கண்ணாடியில் என் வலது கண்ணை பார்த்தபோது, சிவா சொன்னது நினைவுக்கு வந்தது; "உன் வலது கண் இல்லைனா என்ன கல்யாணி, நானே உனக்கு கண்ணா இருப்பேன், கவலைப்படாதே".

வாசலில் காரின் சப்தம் கேட்டது. வந்துவிட்டார்களோ? ஆம் என்பது போல, அம்மாவின் குரல் உரக்கக்கேட்டது. பக்கத்து வீட்டு அக்கா வந்து என்னை, அறையின் உள்ளேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டாள். ஆண் மற்றும் பெண் குரல்களாக, நாலைந்து குரல்கள் கேட்டன. அம்மாவின் மாமாவை, ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு முன் ஒரு திருமணத்தில் சந்தித்திருந்ததால், அவரின் குரலை மட்டும் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.

சொடுக்கி விடப்பட்ட பொம்மை போல, காப்பி கொண்டு செல்லும்போது, சேரில் அமர்த்திருப்பவரை, மாப்பிள்ளை என்று அடையாளம் காட்டினார்கள். வெள்ளையில் கருப்பு கோடுகள் போட்ட சட்டை அணிந்திருந்தான். சிவாவிடமும் இதே டிஸைனில் ஒரு சட்டை இருந்ததும், அது சாயம் போன பின்பும், நான் அவனை போட்டுகொண்டு வரச்சொன்னதும் சம்பந்தம் இல்லாமல் நினைவுக்கு வந்ததில், கண்களில், நீர் பம்மியது. மாப்பிள்ளை பார்ப்பதற்கு நல்ல கலையாகத்தான் இருந்தான். "என் கண் பற்றி இவனுக்கு தெரியுமா" என்று நான் நினைத்துக்கொண்டிருந்தபோதே, அடுத்த வீட்டு அக்கா என்னை, திரும்ப அறைக்குள் அழைத்து வந்து விட்டாள்.

சிறிது நேரம் கழித்து, அம்மா அறைக்குள் வந்தாள். என்னை பார்த்ததும் அவள் கண் கலங்கியது எனக்கு வித்தியாசமாய் தெரிந்தது. "பையன் உன்னிடம் தனியே பேசணும்னு சொல்றான் கல்யாணி. நம்ம நிலமைக்கு இதுதான். கூடி வரும் போது கெடுத்துடாதே" என்று கெஞ்சினாள். எனக்கு என்னவோ போலிருந்தது. "சரிம்மா, வரச்சொல்லு" என்று என் வாய் சொன்னாலும், மனசு "சிவாவுக்கு என்ன சொல்லுவே?" என்றது.

அருகில் கேட்ட 'கட் கட்' எனும் சத்தத்தில் என் நினைவுகள் அறுபட, திரும்பி பார்த்தேன். அந்த மாப்பிள்ளை தான் அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தான். சற்று முன் கேட்ட 'கட் கட்' ஒலியையும், அவன் கையில் இருந்த அந்த கம்பையும் பொருத்தி உணர்கையில் தான் புரிய வந்தது அவன் ஒரு கால் விளங்காதவன் என்று. முறைக்காக 'வாங்க' என்று என் வாயிலிருந்து வார்த்தை வெளிவந்தது. பொங்கி எழுந்த கண்ணீரை மறைக்க என் பார்வையை தரைக்கு மாற்றினேன். 'மன்னிக்கனும்', என்ற அவனது கணீர் குரல் எனது பார்வையை மீண்டும் அவன் பக்கம் திருப்பியது.

என் முக மாற்றத்தை அவன் புரிந்திருக்க வேண்டும். போடப்பட்டிருந்த நாற்காலியில் அவனே அமர்ந்தான். தன் கால் பக்கம் கண்களை அசைத்து, 'இதை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்களை பற்றியும் அப்பா சொன்னார்" என்று, என் கண்களை நோக்கி என் மறுமொழிக்காக இடைவெளி கொடுத்தான். அம்மா சொன்னது இன்னும் காதை விட்டு அகலவில்லை-"கூடி வரும் போது கெடுத்துடாதே".

மெல்ல நிமிர்ந்து அவன் பக்கம் பார்த்தேன். "சிவாவுக்கு இதைவிட நல்ல அடர்த்தியாக முடியிருக்கும்"- மனக்குதிரை தாவிய போது அவன் லகானை இழுத்தான். "சின்ன வயசிலிருந்தே அப்படித்தான். என்ன செய்ய? இதனால் என் மனம் பட்ட வலிகள் ஏராளம். அதனால் தான், அந்த வலியை அனுபவிப்பவரையே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன்". மீண்டும் அவன் எனது மறுமொழிக்காக இடைவெளி விட்டான்.

என் பார்வை அறைக்கு வெளியில் அம்மா, சமையலறை வரும் சாக்கில், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று பார்த்த பார்வையின் கெஞ்சலில் லயித்தது. நான் எதுவுமே பேசாததால், அவனே "என் உணர்வுகளை, புரிந்து கொள்ள, என்னை மாதிரி உள்ளவர்களாளேயே முடியும் என்று நினைக்கிறேன்" என்றவாறு என்னை பார்த்தான். "அப்படி இல்லை, சிவா என்னை புரிந்து கொண்டுள்ளானே?", என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

மேலும் நான் பேசாததால், அவன் நாற்காலியிலிருந்து எழுந்தவாறே "யோசித்து பதில் சொல்லுங்கள்" என்றான். இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது, எனக்கு இஷ்டம் இல்லை என்று இப்பவே இவனிடம் சொல்லி விடவேண்டும் என்று, அவன் முகத்தை பார்த்த போது, அவன் என்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். அவனுடைய உணர்வுகளை நான் உணர்வதற்கு முன், "எனக்கு ஒரு காலாய் இருக்க முடியுமா?" என்று கூறிய அவன், என்னிடமிருந்து பதிலை எதிர்பார்த்தான். அந்த கேள்வி, நான் சொல்ல நினைத்ததை சொல்ல முடியாமல் செய்தது. என் மௌனத்தை கண்டு அவன் அறையையிலிருந்து வெளியேறினான்.

என் எண்ணங்கள் திடீரென தடம்புரண்டன. எனக்கு கண்ணாய் இருக்க தயாராக ஒருவன் இருக்கையில், என்னை காலாக இருக்க கோரும் மற்றொருவன்; இந்த இரண்டு கருத்துகளும் மாறி மாறி மனதை பிராண்ட அன்று இரவு தூக்கம் வரவில்லை.

'என்னடி உடம்பு இப்படி கொதிக்குது?' என்று, அம்மா காலையில் தட்டி எழுப்பும் போது தான் என் உடல் நிலை எனக்கே புரிந்தது. கண்களை திறக்ககூட இயலாமல், கண்கள் வீங்கி, மிகவும் பலவீனமாக உணர்ந்தேன். அம்மா தான் கைபிடித்து தூக்கி விட்டாள். 'இப்படித்தான் அவனுக்கும் நான் தேவைப்படுகிறேனோ?', என்ற எண்ணம் வர, நானாக எழ முயன்றேன், முடியவில்லை. உண்மைதான், ஒரு கண் இல்லாமல் இருக்க இயலும், ஆனால் நடக்க இயலாமல் சிரமம் தான்.

அன்று வேலைக்கு போகாததால், மதியம் மெதுவாக அம்மா என்னிடம் கேட்டாள்; 'என்னடி? மாமாவுக்கு பதில் சொல்லனும், நீ என்ன சொல்றே? பையன் ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்றானாம்'.

'சரின்னு சொல்லிடு அம்மா' என்றேன் நான். 'சிவா புரிஞ்சுப்பான், நான் புரிஞ்சுக்கலையா இப்போ?'. " நான் என்ன புரிந்து கொண்டேன்?" மீண்டும் தோன்றிய கேள்விக்கு என் மூளை பல எதிர் கேள்விகளை வைத்திருந்தாலும், என் நிலமையில், இந்த சமூக அமைப்பில், என் தாயின் பார்வையில், நான் சரி என்பதே சரி எனப்பட்டது.

குறிப்பு: Youthful விகடனில் 28/Mar/2009 அன்று வெளியானது.
URL: http://youthful.vikatan.com/youth/chandarstory28032009.asp

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.