நாத்திகம் அல்லது இறைமறுப்பு
நாத்திகம்/இறைமறுப்பு என்பது என்ன?
நாத்திகம்/இறைமறுப்பு என்பது இறைவன் என்பவன் இல்லை எனும் கோட்பாட்டை நம்பும் ஒரு நிலை. நாத்திகம் என்பது ஒரு வாழ் நிலை; இறைமறுப்பு எனும் கருத்தை ஒத்த வாழ்க்கை. கண்ணில் காண்பவை யாவும் இயற்கை என்பதையும், இயற்கை என்பது இயல்பாக இருந்து, இயல்பாக திரிந்து, பல மாறுதல்களுக்குப்பின் இன்றிருக்கும் நிலையை அடைந்தது எனும் கோட்பாட்டை நம்பும் நிலை.
நாம் வாழும் சுழலில் நாத்திகத்தை பின்பற்றுவோர் சிறுபான்மையினராய் இருப்பதால், பொதுவாக இச்சொல் நம் மனதில் ஒரு எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
நாத்திகத்தின் இரு நிலைகள்:
பொதுவாக நாத்திகம் என்பது இரு நிலைகளை கொண்டது; "இறைவனின் மீது நம்பிக்கை இல்லாமை", மற்றும் "இறைவன் உள்ளான் என்பதையே மறுத்தல்".
இந்த முதல் நிலையில், இறைவன் உள்ளான் என நம்பினாலும், நம்பும் அந்த இறைவனின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பதாகும். இது நாத்திகத்தின் முதல் நிலை ஆகும். இந் நிலையில் ஒருவன், தான் நம்பும் இறைவன் என்பவனை, கேள்விகளுக்கு உட்படுத்துகிறான்; தன் சுய அறிவால், அவன் எழுப்பும் கேள்விகளுக்கு விடை காண முற்படுகிறான்; தான் காணும் விடைகளையே மீண்டும் மீண்டும் கேள்விக்கு உட்படுத்துகிறான். விடை காணும் பொருட்டு பிறரை நாடுகிறான்; பல நூல்களையும் பிறர் எண்ணங்களையும் பரிசீலிக்கிறான். வாழ்வில் தான் சந்தித்த நிகழ்ச்சிகள் மற்றும் தான் காணும் பிறர் சந்தித்த நிகழ்ச்சிகளினூடே தன் கேள்விகளுக்கு விடை தேட முயற்சிக்கிறான். முடிவில், அவன் எண்ணங்களை நெறிப்படுத்தி, "ஆம்", "இல்லை" என்பதில் ஒன்றை முடிவெடுக்க முயல்கிறான். "ஆம்" எனும் முடிவெனில் ஒருவன் இறைமறுப்பு நிலையையும் "இல்லை" எனும் முடிவெனில் ஒருவன் இறைமாண்பு நிலையையும் தன் முடிவாய் எண்ணுகிறான்.
இப்படியான ஒரு விடை தேடல் நிகழ்வின் இறுதியில் "ஆம்", "இல்லை" எனும் இரு கூறுகளுக்கு இடையே மூன்றாம் நிலையும் அடைய சாத்தியம் ஆகிறது. இந் நிலையில் அவன் இறைமறுப்பின் முதல் நிலையையே தன் நிலையாய் ஆக்கிக்கொள்கிறான்.
இம்மூன்று நிலைகளின் எண்ணங்கள் மற்றும் கோட்பாடுகளை ஆராய முற்படின், மூன்று நிலைகளும் நம்பிக்கையை மட்டுமே தங்களது அடி ஆதாரமாய் கொண்டுள்ளன.முரண்பாடான மூன்றாம் நிலையில் ஒருவன் தான் மூன்றாம் நிலையை சார்ந்தவன் என்பதை தன் சுய லாபங்களுக்காக சொல்ல மறுக்கிறான். நிலைமைக்கேற்ப தன் நிலையை மாற்றி கொண்டு தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான். முரண்பாடான இந் நிலை ஒரு வரையறுக்கபட்ட கோட்பாட்டின் கீழ் வராததால், இக்கட்டுரையில், நம் சிந்தனைகளை மற்ற இரு நிலைகளுடன் முடித்துக்கொள்வோம்.
நம்பிக்கையின் வெவ்வேறு வடிவங்கள்:
முன் கூறியபடி, நாத்திகம் அல்லது இறைமறுப்பு என்பது இறைவன் என்றொருவன் இல்லை எனும் கோட்பாட்டை பின்பற்றுவதாகும். ஆத்திகம் என்பது இறைவன் ஒருவன் உள்ளான் என்பதையும், நாம் உலகில் காண்பவை யாவும் அவனால் உருவாக்கப்பட்டதே என்பதையும் நம்பும் ஒரு நிலை. இவை இரண்டும் முரண்பாடான கோட்பாடுகள் என்றாலும் ஒன்றின் நிலை மற்றொன்றை சார்ந்தே உள்ளது. அதாவது, இவை இரண்டில் ஒன்று இல்லையெனில் மற்றொன்றின் கருத்துக்கே இடமில்லை. ஒன்றின் கருத்து நிலவ வேண்டுமெனில் மற்ற கருத்தும் நிலவ வேண்டும். அப்படியெனில் இவ்விரண்டையும் அறியாத ஒரு முறை இருக்க இயலுமா? ஆராய முற்படின், இன்றும் உலகின் பல பகுதிகளில் வாழும் சில காட்டுவாசிகள் இந் முறையில் வாழ்கிறார்கள். இந்த நிலை ஆத்திகமும் நாத்திகமும் சேராத மூன்றாவது ஒரு முறையாகும்.
இறைவன் இல்லை என்பதை நிரூபிக்க இயலுமா?
அறிவியல் பூர்வமாய் இக்கேள்விக்கு விடை காண முற்படின், அறிவியலின் சில கோட்பாடுகளே, வெறும் கோட்பாடுகளாய், நீரூபிக்க இயலாமல் உள்ளன. தவிர எல்லா கேள்விகளும் ஒரு தொடர்ச்சியாய் ஓடியோடி ஒரு தனிக்கேள்வியில் முடிகிறது. அதுவே, "பேரண்டம் உருவானது எவ்வாறு?"; "வெறுமையில் ஒரு அணு விரிந்து, திரண்டு பேரண்டம் உருவாகியது எனில் அவ்வெறுமை உருவானது எவ்வாறு?" பல அறிஞர்கள் இந்த கேள்விக்கு விடை காண முற்படுகின்றனர், ஆனாலும் விடை இன்னும் வினாவாகவே உள்ளது. இந்த வெறுமையின் விடை காண ஆத்திக மற்றும் நாத்திக வாதங்கள் பல்லாண்டு காலங்களாய் தொடர்கின்றன.
இறைமறுப்பு என்பது இறைமாண்புக்கு எதிரானதா அல்லது மதங்களுக்கு எதிரானதா?
இறைமறுப்பு என்ற கருத்து மதங்களை சார வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், இறைவன் ஒருவன் உள்ளான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவன் யார் என்றும், அவன் என்றும் இவன் என்றும் கருத்துகள் விரிகின்றன. எனவே இறைமறுப்பு என்பது எந்த மதத்தையும் குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மேற்கூறிய கேள்விக்கு விடையளிக்கும் கட்டாயத்தில் பலர், மதங்களின் கோட்பாடுகளை மேற்கோள் காட்டுகிறார்கள். இப்படி ஒரு குறுகிய நோக்கத்தில் இறைமறுப்பு பற்றி விவரிக்க முற்படின், அது ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான சக்தியாக மற்றும் விவாதமாக மட்டுமே கருதப்படுமே ஒழிய இறைமறுப்பு என்ற மதம் சாரா கோட்பாட்டுக்குள் உட்படாது.
நாத்திகம்/இறைமறுப்பு என்ற கருத்தின் தொண்மை:
மூன்றாவது நூற்றாண்டில் கிரேக்க மொழியில் "atheoi" எனும் சொல்லே "atheism" என அழைக்கப்படும் சொல்லுக்கு மூலம் என கூறப்படுகிறது. இந்த சொல்லின் பொருள் "இறைவனை சாராத" என்பதாகும்.
தமிழ் இலக்கண நூல்களில் விளக்கப்படும் ஐந்திணையிலும், திணைக்கு ஒன்றாக ஒரு கடவுள் குறிப்பிடப்படுகிறது. இறைமறுப்பு பற்றிய எந்த வித குறிப்பும் இலக்கணம் கூறாவிடினும், பல்வேறு தமிழ் இலக்கியங்கள், இந்த நிலை பண்டை காலத்தில் பரவலாக இருந்ததை சான்று பகற்கின்றன.
"எல்லா நம்பிக்கைகளும் கேள்விக்கு உட்பட்டவையே - ஏன் எனில் அவை வெறும் நம்பிக்கைகளாய் மட்டுமே இருப்பதால்". இறைமறுப்பும் அத்தகைய ஒரு நம்பிக்கையை சார்ந்த ஒரு வழிமுறையாக இருந்துவருகிறது.
