உலகமே பந்தென்பது உண்மைதான்
இன்று பந்தே உலகமானது பலருக்கு!
எல்லா உயிரினங்களுக்கும்
மூச்சடக்கினால் உயிர் போகும்
இந்த பந்துக்கு மட்டும்
முச்சுவிடின் உயிர் போகும்!
வரைபடத்தில் பல புள்ளிகளை
இணைக்கும் கோடாய்
அணியினரை இணைக்கும்
பந்தோட்டம்!
மின்னலாய் பறக்கும்
பந்தோட்டம் -
தொடர்ந்து இடியாய்
ஓலிக்கும் மனிதக் கூட்டம்!
வலையில் மீன் பிடிக்க
அத்தனை பேர்கள் - மீன்
வலையில் விழுந்தபின்
விழுந்தெழுந்து கொண்டாட்டம்!
மீண்டும் மீன் வலையின் வெளியே!
அடிபட்ட அணி வீரனுக்காக
மாற்று வீரன் வருகிறான் -
பந்துக்கு மட்டும் மாற்றமேயில்லை
அடி உதை தவிர!
அணியில் உள்ள அத்தனை பேருக்கும்
பந்தை உதைப்பது பிடிக்கும் -
பந்துக்கு மட்டும் நடுவரையே பிடிக்கும்
இடையிடையே பந்துக்கு அவர்
ஓய்வு தருவதால்!
அத்தனை அடி உதை பட்டாலும்
பந்துக்கு பெருமைதான் -
ஆயிரக்கணக்கான கண்கள்
அதையே கவனிப்பதால்!
பந்துக்கு ஒன்று மட்டும்
விளங்கவில்லை -
தன்னை உதைக்கும் போது
காலணியுடன் கால்கள் -
கோப்பையை பிடிக்க மட்டும்
கைகள் ஏன்?
