வேடிக்கை மனிதர்கள்
அந்தமாதி யிலாமொழியே அமுதத் தேனே
.. அடங்காது சொல்லவெழுஞ் சுடர்கொள் தீயே
சொந்தமுன தருளாலே வளரச் செய்தே
.. சேர்ந்தோர்க ளுறவாடு மிம்மின் சங்கம்
சந்தவசந் தந்தவழுந் தமிழே தாயே
.. சிந்தனையா லுமையாமிங் கேத்து வோமே
சிந்துகவி இலந்தையாரின் துணையோ டெம்பா
.. சிறப்புறவே யெஞ்சொல்லாய் வருவா யேநீ (1)
பொய்க்கோத்துப் புதுக்கதைகள் கூறித் தாமேப்
.. புதுவுலகைப் படைக்கவந்தப் பிரம்ம னென்போர்
செய்தேய்க்குஞ் செயல்யாவுந் தெரிந்துந் தேறோம்
.. சேர்ந்தாங்கே அரசியலார் சொல்லுங் கேட்போம்
கையூட்டாய் பணம்புடவை குடமு மேற்போம்
.. கிடைத்தபெருங் குடியுரிமை தன்னை விற்போம்
நெய்வாங்கப் பணந்தேடிப் பசுவை விற்கும்
.. வேடிக்கை மனிதர்நாம் வீண்தான் அன்றோ (2)
நிழலோடும் நீள்படலில் திறமைக் காட்டி
.. நிதந்தோறும் நமையீர்க்கும் நடிக ராட்டம்
பொழுதோடும் போக்காயின் பரவா யில்லை;
.. படந்தோறும் நாயகனின் உருவந் தன்னைத்
தொழுதேத்தி மாலையிட்டுத் திருநீ ராட்டித்
.. திருப்பெயரை யுடலெங்கும் பச்சைக் குத்தி
விழல்நீராய் புல்லுக்குப் பெருமைச் சேர்க்கும்
.. வேடிக்கை மனிதர்நாம் வீண்தான் அன்றோ (3)
தொலைக்காட்சி நீள்தொடரைப் பார்க்க வேண்டித்
.. தொலைப்போமே முழுநாளி லொருகாற் பாகம்
சளைக்காமல் தினந்தோறும் நாமும் பார்ப்போம்
.. சலிக்காமல் சிலசமயம் கண்ணீர் சேர்ப்போம்
விளக்கொன்றில் போய்வீழும் விட்டிற் போன்றே
.. வீணேநாம் நம்பொழுதை போக்கிக் கொள்வோம்
வலைத்தேடி வலியவிழும் வெள்ள மீன்போல்
.. வேடிக்கை மனிதர்நாம் வீண்தான் அன்றோ (4)
பரிதியினிற் புறப்பட்ட ஆரம் யாவும்
.. பலவேனு மிறுதியிலே மையஞ் சேரும்
புரியாம லுமதென்றும் நமதே யென்றும்
.. பிரித்தேநாம் பொருள்கொள்வம் தெய்வந் தன்னை
சரியாக நம்தவறை முன்னே வைத்துச்
.. சதிக்கும்பல் நமைப்பிரித்து நாலுஞ் செய்யும்
விரியாத மலரொத்த மதியைக் கொண்ட
.. வேடிக்கை மனிதர்நாம் வீண்தான் அன்றோ (5)
தந்தாளே நம்முயிரை அம்மை பெண்ணே
.. தனியேஆண் இப்புவியி லென்னே செய்வான்
சொந்தங்கள் யாவும்நம் அம்மை மூலம்
.. சொல்லந்தப் பெண்ணொன்றே முழுமை யன்றோ
தந்தோமா முப்பத்து மூன்று வீதம்
.. தவறாமல் தவிர்க்கின்றோம் முயற்சி தன்னை
வெந்தோமே வியன்மாதர் வெற்றிக் கண்டு
.. வேடிக்கை மனிதர்நாம் வீண்தான் அன்றோ (6)
தோண்டியேனுந் தொல்பொருட்கற் யாவுஞ் சேர்ப்போம்
.. தொகைமிகவே கொடுத்தேனும் பொருளை மீட்போம்
ஆண்டாண்டு நமக்குயர்வை சேர்த்துப் பூத்த
.. அம்மையப்பன் தனைமுதியோ ரில்லஞ் சேர்த்தேப்
பூண்டோடு மனிதத்தை அழித்துச் சாய்த்தோம்
.. புரியாதோ நமக்குந்தான் வருமே மூப்பு
வேண்டாத பொருளென்றே கண்ணை விற்கும்
.. வேடிக்கை மனிதர்நாம் வீண்தான் அன்றோ (7)
உற்பத்தி செய்கையிலோ ஆண்பெண் தேவை
.. உலகில்நாம் உயிர்வாழ இருபால் வேண்டும்
அற்பந்தான் பெண்மக்க ளென்றே எண்ணும்
.. அறியோம்நாம் காரணந்தாந் தெரியோ மல்லோம்
ஒற்கத்தின் துணையாக வருவோர் பெண்டி
.. ருளமாற நினைப்போம்நாம் அன்னை அன்பை
தற்பத்தால் பெண்ணியத்தை வெறுத்தொ துக்கும்
.. வேடிக்கை மனிதர்நாம் வீண்தா னன்றோ (8)
(அற்பம் - சிறுமை; ஒற்கம் - தளர்ச்சி; தற்பம் - கர்வம்)
தமிழேதான் மூச்சென்று நாளுஞ் சொல்வோம்
.. தமிழாலே பணம்பதவி யெல்லாங் கொள்வோம்
சமைத்தோமா உலகேறு மறிவு நூட்கள்
.. தனையாவும் மொழிமாற்றித் தமிழில் நாமும்?
அமைத்தோமா தமிழ்த்தாயைக் கணினி யேற்றி
.. அழியாது தமிழ்மாட்சிக் காக்கத் திட்டம்?
சுமையேதா னிவையாவு மென்றே யெண்ணும்
.. வேடிக்கை மனிதர்நாம் வீண்தான் அன்றோ (9)
தனிமனிதச் செயல்யாவும் குடும்பங் கொள்ளும்
.. தவறாமல் குடும்பத்தார் செய்வோர் நன்றே
இணைந்திவர்தம் செயல்யாவும் மெச்சு மூரே
.. இயல்பாகி ஊரும்தான் பற்றும் பாரீர்
கனியதனை மரமேறிப் பறித்துத் தந்தால்
.. களிப்போடே ஊரெங்கும் பலரு முண்பார்
இனியேனும் பறிப்போராய் நாமே யாவோம்
.. இனிதான வாழ்வுக்கோர் துவக்கங் காண்போம் (10)
குறிப்பு: சந்த வசந்தம் கூகுள் குழுமத்தில் நடைபெற்ற 'வேடிக்கை மனிதர்கள்' எனும்
கவியரங்கத்திற்காக படைக்கப்பட்டு 3/May/2009 அன்று வெளியிடப்பட்டது.
